Pages

Ads 468x60px

9 March 2012

மனிதனுக்குள் மிருகங்கள்!

பிரம்மா பூவுலகத்தைப் படைச்சதும் அங்கு மனிதர்களையும், ஆடு மாடு முதலிய மிருகங்களையும் படைக்க விரும்பினார். முதலில் குரங்குகளைப் படைத்து, ‘‘ஓ குரங்குகளே! உங்களுக்கு நாற்பது ஆண்டு ஆயுள் தருகிறேன்’’ என்றார். குரங்குகள், ‘‘மரங்களில் தாவித் தாவி வாழ்வதும் ஒரு வாழ்வா? வெயில், மழை எதற்கும் வீடு கிடையாது எங்களுக்கு. காட்டில் புலி, சிங்கம் போன்ற துஷ்ட மிருகங்களுக்கு வேறு பயப்பட வேண்டியுள்ளது. ஆகவே எங்களுக்கு இருபது வயதே போதும் என்றன. பிரம்ம தேவர், ‘‘அப்படியே ஆகட்டும்!’’ என்று சொல்லி விட்டார்.

பிறகு எருதைப் படைத்து, ‘‘உங்களுக்கு நாற்பது வயதைத் தருகிறேன். உங்கள் அபிப்ராயம் என்ன?’’ என்று கேட்டார். எருது கண்களில் நீருடன் சொல்ல ஆரம்பித்தது: ‘‘இரவு பகல் என்று வேறுபாடு இல்லாமல் எங்களை வேலை செய்யும்படி மனிதர்கள் வற்புறுத்துகிறார்கள். ஏதோ நான்கு வைக்கோலை எங்கள் முகத்துக்கு எதிரில் தூவி விட்டு தண்ணீரையும் சரிவர அளிக்காமல் மனிதர்கள் மட்டும் சுகமாக வாழ்கின்றனர். ஆகவே எங்களுக்கு இருபது வயது இருந்தாலே போதும்’’ என்றன. ‘‘சரி, அப்படியே...’’ என்று விட்டு விட்டார் பிரம்மன்.

மூன்றாவதாக நாயைப் படைத்து அவற்றிடமும் முந்தையவற்றிடம் கேட்ட கேள்வியையே கேட்டார். ‘‘நாங்கள் அளவற்ற பாவம் செய்து இப்பிறவியை அடைந்திருக்கிறோம். யாரையாவது திட்ட வேண்டுமென்றால் ‘சீ நாயே’ என்றுதான் திட்டுகிறார்கள். மனிதர்களுக்கு மிக உபயோகமாக காவல் காத்து, திருடர்களைப் பிடித்து தருகிறோம். இவ்வளவு செய்தும் எங்களை வீட்டிற்குள் விடாமல் துரத்தியடிக்கிறார்கள். இத்தகைய இழிபிறவிகளான எங்களுக்கு இருபது வயதே போதும்’’ என்று விட்டன நாய்கள். அவற்றின் பேச்சில் மனமிரங்கிய பிரம்மா, ‘‘அப்படியே ஆகுக’’ என்று சொல்லி விட்டார்.

நான்காவதாக வெளவாலைப் படைத்து அவற்றிடம் முன்போலவே கேட்டார். அவையோ, ‘‘குரங்கு, நாய், எருது இவற்றைவிட நாங்கள் கீழானவர்கள். எங்களுக்கு வாக்குதம் என்று பெயர். வாயும் ஆசனவாயும் எங்களுக்கு ஒன்று. இருள் அதிகமாக உள்ள இடங்களில் வசித்து, தலைகீழாகத் தொங்குவது எங்கள் வாழ்வு. இப்படி பலவித துன்பங்களை அடைந்துள்ள எங்களுக்கு இருபது வயதே போதும்’’ என்றன. பிரம்ம தேவர் அவற்றுக்கும் இசைந்தார்.

இந்த நான்கு பிராணிகளும் சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு மனிதனைப் படைத்து, இவற்றைவிட அறிவுள்ளவனாக அல்லவா படைத்திருக்கிறோம் என்று எண்ணி மனிதனிடம், ‘‘உனக்கு நாற்பது வயது வேண்டுமா? இல்லை இருபதே போதுமா?’’ என்று கேட்டார். மனிதன், ‘‘பிரம்மதேவரே! நாங்கள் மனிதர் அல்லவா? எங்களுக்கு கைகளும், கால்களும், அறிவும் உண்டு. இருபது வயதிற்குள் என்ன சுகம் அனுபவித்துவிட முடியும்? எனக்கு அதிக ஆயுள் வேண்டும்’’ என்று கேட்டான். பிரம்மதேவர் உடனே, ‘‘சரி, அந்த நான்கு பிராணிகளும் வேண்டாமென்று மறுத்த தலா இருபது வயதுகளை (4 x 20) சேர்த்து உனக்கு நூறு வயதாக அளிக்கிறேன்’’ என்றார். அரை மனதாக ஒப்புக் கொண்டான் மனிதன்.

இப்படி நான்கு ஜந்துக்களின் இருபது இருபது வயதை மனிதன் அடைந்தான் என்பதை அவை செய்யும் தொழிலை அந்த இருபது வருடங்களில் மனிதன் செய்வதனாலேயே புரிந்து கொண்டு விடலாம். முதல் இருபது வருஷங்கள் குரங்கின் வயது. எனவே குரங்கின் சேஷ்டைகள் அந்தப் பருவத்தில் இருக்கும். ஒரு இடத்தில் நில்லாமல் அங்கும் இங்கும் ஓடி அலைகிறான். ‘‘என்ன குரங்கு சேட்டைடா’’ என்று பெற்றோர்கள் திட்டுவதும் உண்டு இப்பருவத்தில்.

இருபது முதல் நாற்பது வயது வரையில் எருதின் வயது. எருது எப்படிப் பாரங்களை சுமக்கிறதோ அப்படி குடும்பத்தின் பாரத்தைச் சுமந்து, அன்ன ஆகாரம் தேடி ஊரூராக மாறி வேலைகளைச் செய்கிறான். நாற்பது வயது முதல் அறுபது வயது வரையுள்ள வயதுதான் மனிதனுக்கு என்று பிரம்மன் வகுத்த வயது. மனிதனுக்குண்டான வேலைகளை அப்போதுதான் அவன் சரிவரச் செய்கிறான். புராணங்களைப் படிப்பதும், கோவில்களுக்குச் சென்று வழிபடுவதும், புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்வதும், பெரியவர்களிடம் எல்லாம் மரியாதையுடன் இருப்பதும் ஆக பண்பட்ட எண்ணங்களும், பழக்க வழக்கங்களும் கொண்டு மனிதன் வாழ்கிறான்.

அறுபது வயது முதல் எண்பது வயது வரை நாயின் வயது. தேகத்தில் சக்தி குறைந்து விடுவதால் எங்கும் செல்ல முடியாமல் வீட்டிலேயே தங்கி வீட்டைக் காவல் செய்யும்படி ஏற்படுகிறது. சிறியவர்கள், வீட்டைப் பார்த்துக் கொள்ளும்படி விட்டு விட்டு வெளியே போய் விடுவார்கள். எண்பது முதல் நூறு வயது வரையிலோ வெளவாலின் வயது. பகலிலேயே சரியாக பார்க்க முடியாமல் போவதும், சுவாதீனமாக உட்காரவோ படுக்கவோ முடியாமல் கஷ்டப்பட்டுதான் இருக்க முடியும்.

இப்படி அந்தந்த வயதுகளில் மனிதனுக்கு ஏற்படும் சுபாவ மாற்றங்கள் எல்லாவற்றையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். தனக்கு கிடைத்த வயது போதாது போதாது என்று மேலும் மேலும் மனிதன் ஆசைப்பட்டுக் கேட்டதால் தான் இப்படி அதிக காலம் வாழ்வதும், துன்பப்படுவதும் ஏற்பட்டது.

-Hai Friends..! நல்லாத்தானே இருந்தா இந்த நிரஞ்சனா? திடீர்னு என்ன ஆச்சு இவளுக்கு? சாமியாராப் போய்டப் போறாளான்னு நினைச்சுடாதீங்க... என் மம்மி வெச்சிருந்த ஆன்மீக புஸ்தகங்கள்ல ‘வைதீக ஸ்ரீ’ன்னு ஒரு புக் இருந்துச்சு. சும்மா புரட்டினப்ப இந்தக் கதையப் படிச்சேன். மேட்டர் நல்லா இருக்கேன்னு தோணிச்சு. உடனே உங்க கூடல்லாம் Share பண்ணிக்கிட்டேன். உங்களுக்குப் புடிச்சிருக்கா?

பேஸ்புக் வழியாகவும் கருத்திட வாங்க

13 comments:

 1. நல்லாத்தான் இருக்கு,,,,ஆனா...குணங்கள் பத்தி எதுவுமே சொல்லலே...நரியின் தந்திரம்..எறும்பின் உழைப்பு ..இப்படி...ஒட்டு மொத்த விலங்குகளின் உருவம் தானே மனிதன்...

  ReplyDelete
  Replies
  1. அந்தக் கட்டுரையில பொதுப்படையான குணங்களைப் பத்தித்தான் சொல்லியிருக்கு. நீஙக சொல்றது தனிப்பட்ட குண விசேஷங்கள் இல்லையா... எனக்குத் தோணினது இது. தப்பா இருந்தா மன்னிச்சுக்கங்க. நல்ல கருத்துச் சொல்லி என்னை உற்சாகப்படுத்தின உங்களுக்கு My Heartful Thanks!

   Delete
 2. நல்லக்கதை அருமைப்பதிவு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய தங்களுக்கு என்னோட Heartful Thanks!

   Delete
 3. சிந்திக்க வைக்கும் கதை!

  ReplyDelete
  Replies
  1. படிச்சு ரசிச்சுப் பாராட்டின உங்களுக்கு... Many Many Thanks Sir!

   Delete
 4. ஏற்கனவே கேட்ட கதைதான். இருந்தாலும் இன்னும் விரிவாக பகிர்ந்தமைக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. எனக்கு இது புதுக்கதையா இருந்துச்சு. உங்களுக்குத் தெரிஞ்ச கதையா இருந்தாலும் வந்து என்னை வாழ்த்தினதுக்கு என் Heartful Thanks to you Sister!

   Delete
 5. நிரஞ்சனா அருமையான பதிவு கேட்டது தான் ஆனால் எளிமையா அழகாய் சொன்ன விதம் ரசிப்பிகுரியது அருமை ...............

  ReplyDelete
  Replies
  1. அழகான் பாக்களை படைக்கும் தங்களிடமிருந்து கிடைக்கும் பாராட்டு... Most Valuahle to me! Thanks Akka!

   Delete
 6. நிரஞ்சனா,

  வெறுமனே, விளையாட்டாகத்தான் நீங்கள் எழுதுவீர்கள் என்று நினைத்திருந்தேன், வாழ்க்கையைப் பற்றிய தத்துவ விசாரணைகளும் தங்களுக்கு இருப்பது ஆச்சர்யப்படுத்துகிறது. நூறு வயது வரை வாழ்ந்து விட்ட நிறைவு இப்பதிவைப் படித்ததும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ஐயா... எனக்குத் தெம்பூட்டும் விதமான கருத்தைத் தந்துள்ளீர்கள். Many Many Thanks to You!

   Delete
 7. கதை அருமை! பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete

படிச்சது பிடிச்சிருந்ததா இல்லையான்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுத் தான் போங்களேன்.. I am Waiting eagerly!

 

கலை அக்கா தந்த பரிசுகள்!

கலை அக்கா தந்த பரிசுகள்!

என் தோழி விஜி தந்த விருது!

என் தோழி விஜி தந்த விருது!