Pages

Ads 468x60px

30 April 2012

சுஜாதாவின் சூப்பரான நாடகம்!

சுஜாதாவின் கதைகளைப் படிச்சு ரசிச்சு நான் எழுதின பதிவுல நண்பர் அ.குரு சுஜாதாவோட படைப்புகளை டவுன்லோட் பண்ணிப் படிக்கலாம்னு இந்த லிங்க்கைக் கொடுத்திருந்தார். டவுன்லோட் பண்ணிப் படிச்சேன். அதுல என்னை அசரடிச்ச சுஜாதா ஸாரோட ஒரு நாடகத்தைப் பத்தி இங்கே உங்களோட பகிர்ந்துக்கப் போறேன்.

                    Dr.நரேந்திரனின் வினோத வழக்கு

டாக்டர் நரேந்திரன் அரசாங்க மருத்துவமனையில் அடுத்த டீனாக வரவேண்டியவர். வெளிநாடுகளில் படித்துப் பல பட்டங்கள் வாங்கியவர். அவர் மீது ஒரு நோயாளியின் வாழ்வாதாரங்களைப் பிடுங்கி மூச்சை நிறுத்தியது, தன் கீழ் வேலை செய்த கல்யாணமாகாத பெண்ணின் கர்ப்பத்தைக் கலைக்க உதவியது, தடை செய்யப்பட்ட மருந்து ஒன்றைக் கொடுத்த ஒரு சிறுவன் சாகக் காரணமாயிருந்தது என்று மூன்று குற்றங்கள் சுமத்தப்பட்டு கோர்ட்டில் கேஸ் துவங்குகிறது.

வழககில் வினோதம் என்னவென்றால் டாக்டர் நரேந்திரன் மூன்று குற்றங்களையும் ஒப்புக் கொளகிறார். இது ஏற்கனவே முடிவு தீர்மானிக்கப்பட்ட வழக்கு, அதனால் வக்கீல் இல்லாமல் நானே வாதாடிக் கொள்கிறேன் என்கிறார். நீதிபதி அதை ஒப்புக் கொள்ளாமல் லாயர் கணேஷிடம் நரேந்திரன் வழக்கை எடுத்து வாதாடச் சொல்கிறார். டாக்டர் ஒத்துழைக்க மறுத்தாலும் கணேஷும் வஸந்தும் விசாரணையில் இறங்கி அவர் குற்றமற்றவர் என்பதைக் கண்டறிகின்றனர். கோர்ட்டில் வழக்கு நடக்க, டாக்டரைக் காப்பாற்ற தங்களால் இயன்றவரை வாதாடுகின்றனர்; போராடுகின்றனர்.

வழக்கின் போக்கில் டாக்டர் நரேந்திரன் அவர்களிடம் மனம் திறந்து பேசுகிறார். முதல் இரண்டு கேஸ்களிலும் தன் மீது தவறில்லை என்றாலும் மூன்றாவதான அந்தச் சிறுவன் ஒரு Child Prodigy. அவன் இறக்கும்படி விட்டது தனககுத் தோல்வி, அதனால் தான் தண்டனை அடைய விரும்புவதாகச் சொல்கிறார். இதனிடையில் கணேஷ்-வஸந்த் பொறிபறக்க திறமையாக வாதாடுவதைக் கண்டு இளவழகன் என்ற அரசியல் அல்லக்கை ஒருவன் வந்து அவர்கள் கேஸிலிருந்து விலக பேரம் பேசுகிறான். கணேஷ்-வஸந்த் வெகுண்டு அவனைத் திட்டி அனுப்பி விடுகின்றனர். ஒரு அரசியல்வாதி ஒரு பிரச்னையிலிருந்து மீள கண் துடைப்பிற்காக பொய் வியாதியைச் சொல்லி ஆஸ்பத்திரியில் அட்மிட்டாவதற்கு வர, அட்மிட் செய்ய நரேந்திரன் மறுத்தனால் வஞ்சம் வைத்து பழிவாங்கப்படுகிறார் என்பதை உணர்கின்றனர்.

கோர்ட்டில் நரேந்திரனுக்கு ஆதரவாக கணேஷ்-வஸந்த் சமர்ப்பிக்கும் சாட்சிகள் எல்லாம் பயமுறுத்தல் + பணம் காரணமாக பல்டி அடிக்கின்றனர். தீர்ப்புக்காக ‌கோர்ட் கலையும் போது முன்பே தண்டனை தீ்ரமானிக்கப்பட்டது என்றும் தனக்கு என்ன தண்டனை விதித்து தீர்ப்பு வரும் என்பதை டாக்டரே சொல்கிறார். அப்போது இளவழகனுக்கு மாரடைப்பு வர, வஸந்தின் எதிர்ப்பையும் மீறி, டாக்டர் சிகிச்சை செய்கிறார். பின்னணியில் டாக்டர் சொன்ன அதே தீர்ப்பு நீதிபதியின் குரலில் ஒலிக்கிறது. நாடகம் நிறைகிறது.

நாடகம் என்பது பெரும்பாலும் வர்ணனைகள் குறைவாக வசனங்களிலேயே நகர்வதல்லவா..?  அதிலும் கதையில் பாதி்க்கும் மேல் கோர்ட்டிலேயே நடப்பதால், வாதப் பிரதிவாதங்கள் அனல் பறககின்றன. சுஜாதவின் ஷார்ப்பான வசனங்கள் நாடகம் முழுதுமே மிகப் பிரமாதமாக இருக்கிறது. அசரவைக்கிறது. வஸந்த் கதாபாத்திரம் வடிவமைக்கப் பட்டிருக்கும் விதம். பொதுவாக ‌ஜோக்கெல்லாம் அடித்துக் கொண்டிருககும் ஜாலியான இளைஞன் என்பதற்கும் மேலாக சமூக அக்கறையுள்ள ஒருவன் என்பதை நாடகம் அழகாகச் சித்தரிக்கிறது. கண்ணெதிரே பொய்ச் சாட்சிகளும், உண்மை மறைக்கப்பட்டு அநீதி கோலோச்சுவதைப் பார்த்து ஒரு கட்டத்தில் வஸந்த் கோபப்படுகிறார் பாருங்கள்... 

நீதிபதி: மிஸ்டர் வஸந்த்! நீங்க சொல்றது எல்லாம் டோட்டலி இர்ரெலவன்ட் டு தி கேஸ்.

வஸந்த்: யுவர் ஆனர்! நீங்க எவ்வளவு வாங்கியிருக்கீங்க?

 -எக்ஸலண்ட்! படிக்கும்போதே பிரமிக்க வைத்தது என்னை.  வஸந்த் கேரக்டரை உயர்த்திப் பிடித்த இந்த நாடகம், டாக்டர் நரேந்திரனின் கதாபாத்திரமும் மனதில் இடம் பிடிக்கிறது. நீதியையும் நேர்மையையும் அரசியங்கற சக்தி (சாக்கடை?) எப்படியெல்லாம் தூக்கிச் சாப்பிடுகிறது என்கிற சமகால அவலத்தை அழுத்தமாய் மனதில் பதியவைத்தது இந்த நாடகம்.  நாவல் என்ற வடிவத்தில் சுஜாதா இதை எழுதியிருந்தால் இந்த Impact கிடைத்திருககாதோ என்றுதான் எனக்குத் தோன்றியது. Hats Off to Sujatha Sir! நீங்களும் இதைத் தவறாமல் பதிவிறக்கம் பண்ணி தவறாம படிச்சு ரசிககணும்கறது என்னோட சிபாரிசு மற்றும் விருப்பம். இனி, நான் ரசித்த வ்சனங்களில் சில:

* * *

வஸந்த் : பிராஸிகியூஷன் படி பாத்தா ஆஸ்பத்திரியில ருத்ரதாண்டவம் ஆடியிருக்கீங்க போலருக்கே...

* * *

டாக்டர் : எனக்கு டாக்டர்கள் மேல நம்பிக்கையில்ல.

வஸந்த் : அப்படிச் சொல்லிட்டா எப்படி? எனக்குக் கூடத்தான் டாக்டர்கள் மேல நம்பிக்கையில்ல. இருக்கிற டாக்டர் எல்லாம் கொள்ளை அடிக்கிறவங்கன்னு அபிப்ராயம். அதுக்காக என்னால சொந்தமா ஒரு கத்தியை எடுத்துண்டு அப்பெண்டிக்ஸ் ஆபரேஷன் பண்ணிக்க முடியுமா?

* * *

வஸந்த் : காப்பதற்கு ஆண் துணை இல்லாத பெண்களை ரேப்புதல் சுலபம்னு வள்ளுவர் சும்மாவா சொன்னார்?

கணேஷ் : ஏய்... உனக்கு விவஸ்தையே கிடையாதுடா. வள்ளுவர் உனககாக ஸ்பெஷலா குறள் எழுதி வெசசிருககாரா?

* * *

மஞ்சுளா : இப்ப வந்தது யாரு? அவரை எங்கேயோ பாத்த மாதிரி இருககு.

வஸந்த் : அவரை நீங்க எங்கே வேணாலும் பாக்கலாம்.

மஞ்சுளா : பேரு?

வஸந்த் : அரசியல்!

* * *

கணேஷ் : டாக்டர்! இந்த மூணு கேஸ்லயும் உங்க மனச்சாட்சிக்கு விரோதமா எதாவது நடந்திருககா?

டாக்டர் : இல்லே. மறுபடி இதே சூழ்நிலையில, இதே காரியங்களைத்தான் செய்திருப்பேன். மை கான்ஷியஸ் இஸ் க்ளியர்!

* * *

நீதிபதி : மிஸ்டர் வஸந்த்! என்னதான் சொல்ல விரும்பறீங்க? அந்த மருந்து யாரைக் குணப்படுத்தினா என்ன? எத்தனை விலையா இருந்தா என்ன? இந்தக் கேஸ்ல காலை வாரிடுத்து. இல்லையா?

வஸந்த்: (சற்று அலுப்புடன்) யுவர் ஆனர்! நான் காட்ட விரும்பறது... சொல்ல விரும்பறது... எல்லாம் ஒரே ஒரு...

நீதிபதி: (சிரித்து) நீங்க காட்ட விரும்பறதெல்லாம் நல்லா எனக்குத் தெரியுது. சுத்தி வளைக்காமே நேராக் கேளுங்க.

வஸந்த்: (கோபத்துடன்) ஆல்ரைட். நேராகவே கேக்கறேன். டாக்டர் பாலகிருஷ்ணன், இந்தக் கேஸை போலீஸ் எடுத்துக்கிட்டு கோர்ட்லே கொண்டு வர்றதுக்கு எவ்வளவு லஞ்சம் கொடுத்தீங்க?

நீதிபதி: (அதட்டி) மிஸ்டர் வஸந்த்! திஸ் இஸ் தி லிமிட்!

* * *

விட்டா... முழு நாடகத்தையுமே எழுதிடுவேன் போலருக்கு. பதிவு நீண்டுட்டதால இத்தோட ஃபுல்ஸ்டாப் வைக்கறேன். நிரூ நல்ல தமிழ்ல எழுதிப் பழகணும்னு ஒரு Friend கருத்துச் சொல்லியிருந்ததால ரொம்ப கஷ்டப்பட்டு, முடிஞ்சவரை ஆங்கிலம் தவிர்த்து இந்தப் பதிவை நல்ல தமிழ்ல எழுதியிருக்கேன். இந்த Writing Style ஓ.கே.வா?
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "சுஜாதாவின் சூப்பரான நாடகம்!"

26 April 2012

‌என் எருமை ஏஞ்சல்!

ஞ்சல் பேர்ல மட்டும் ஏஞ்சல் இல்லீங்க... அழகுலயும் அப்படித்தான். எங்க காலேஜ்லயே ப்ரைட் ஃபிகர்! பசங்கல்லாம் பயங்கரமா ‌ஜொள்ளு விடுவாங்க. எல்லாம் போன மாசம் வரைதான்... இப்ப அவ ஃப்ரெண்ட்ஸும் மத்தவங்களும் அவளை ‘எருமை ஏஞ்சல்’ன்னு கூப்பிட்டுக் கிண்டல் பண்றப்ப... எதுவும் செய்ய முடியாம பல்லைக் கடிச்சுககிட்டு ஓடிடறா. அவ பேரோட இந்த எருமை வந்து ஒட்டிக்கிட்டது இருக்கே... அதுவே தனிக் கதை! ‘என்ன கதை அது?’ன்னு நீங்க சொல்றது எனக்குக் கேக்குது. சொல்றேன்...

போன மாசத்துல ஒரு நாள் சைதாப்பேட்டை ஏரியாவுல அவ ஸ்கூட்டியில போயிட்டிருந்தாங்க. வண்டியை ஒரு கடை வாசல்ல நிறுத்திட்டு வந்து பாத்தா... வண்டி கவுத்துப் போட்ட கரப்பாம் பூ்ச்சியாட்டம் கீழ விழுந்து கிடக்கு. பக்கத்துல ஒரு எருமை அசால்ட்டா வண்டியை மோந்து பாத்து ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கு. கடுப்பாகிப் போன ஏஞ்சல், பின்னாடியே வந்து எருமையப் பிடிச்ச எருமையோட ஓனரைப் பாத்து கன்னாபின்னான்னு கத்த ஆரம்பிக்க ஒரு கூட்டமே கூடிடுச்சுங்க...

‘‘என்னம்மா... என்னாச்சு?’’ன்னு முன்னால வந்தாரு குண்டான குள்ளமான ஒரு ஆளு. பட்டையக் கிளப்பற வெயில்ல அவர் வழுக்கைத் தலை டாலடிக்க, கையால கண்ணை மறைச்சுக்கிட்டே பேசினா ஏஞ்சல். ‘‘பாருங்க ஸார்... நான் ஸ்கூட்டியைப் பார்க் பண்ணிட்டு இந்தக கடையில சுருட்டு வாங்கப் போனேன்... அப்ப...’’

அந்த ஆள் அதிர்ச்சியில அலறியிருக்கான்- ‘‘பொம்பளைங்க சிகரெட் பிடிக்கிறதே அநியாயம். இதுல சுருட்டு வேற பிடிப்பியா நீ? கலிகாலம்!’’ன்னு.  இவளானா தலையில அடிச்சுக்கிட்டு, ‘‘எனக்கு இல்ல ஸார்... எங்க தாத்தாவுக்கு. சுருட்டு வாங்கிட்டு வந்தா, இந்த ஆளோட எருமை இடிச்சு, என் ஸ்கூட்டியைத் தள்ளி விட்டிருக்கு. பாருங்க... ஹெட்லைட்டே ‌உடைஞ்சு நொறுங்கியிருக்கு. மரியாதையா இந்த ஆளை நூத்தம்பது ரூபாயை எடுத்து வெக்கச் சொல்லுங்க...’’ன்னு கத்தியிருக்கா.

அந்த ஆள், எருமைக்காரனைப் பாத்து, ‘‘அவங்க சொல்றது நியாயம்தானேப்பா. நீ பணம் குடுத்துத்தான் ஆகணும்...’’ அப்படின்னு சொல்ல, ‘‘நான் என்ன மாட்டேன்னா சொன்னேன்? கொத்தவால் சாவடித் தெருவுல இருககற என் வீட்டுக்குப் போயி எடுத்துட்டு வரணுங்க... இவங்க இப்பவே பணத்தக் குடுன்னுல்ல வம்பு பண்றாங்க...’’ன்னு சொல்லியிருக்கான். அந்த வழுக்கைத் தலையர் எருமைககாரனுக்கு சப்போர்ட் பண்ணி, ‘‘சரி, நீ போய் பணத்தை எடுத்துட்டு வா. ஆனா அதுவரைக்கும உன் எருமை இங்கதான் இருக்கணும்’’ன்னு சொல்லவும், எருமைக்காரன், ‘‘சரி ஸார்... முருகனை பத்திரமா பாத்துக்கங்க...’’ன்னிருக்கான்.

வழுக்கைத் தலையருக்கு வந்ததே கோபம்... ‘‘ஏன்யா... எருமைக்கு வைக்கறதுக்கு உனக்குப் பேரா கிடைக்கல..? இதுக்கப் போயி முருகன்னு நல்ல பேரா?’’ன்னு கத்தியிருக்காரு. அவன் எதுவும் புரியாம, ‘‘உங்களுக்கு என்னங்கய்யா இதுல கஷ்டம்?’’ன்னு கேக்க, அவர் தர்மசங்கடமா, ‘‘என் பேரும் முருகன்தான்யா...’’ன்னு சொல்லியிருக்காரு. ஏஞ்சல் சிரிப்பை அடக்க முடியாம சிரிச்சுட்டா. எருமைக்காரன் ‘ஙே’ன்னு முழிச்சுக்கிட்டே அங்கருந்து கிளம்பிப் போயிருக்கான்.

ரை மணி நேரம் ஆச்சு... அந்த ஆள் வரலை. இவ, ‘‘இப்ப என்ன பண்றது ஸார்?’’ன்னு கூட இருந்த வழுக்கையரைக் கேக்க, ‘‘கொத்தவால் சாவடித் தெருவுன்னுதானே சொன்னான். அங்கயே போய்டலாம். முருகன் இருக்கற வரை நீ கவலைப்படாத’’ன்னு சொல்ல, அவ அப்பாவியா, ‘‘எந்த முருகனைச் சொல்றீங்க ஸார்?’’ன்னு கேட்டிருக்கா. அவர் தலையில அடிச்சுக்கிட்டு, ‘‘எருமையச் சொன்னேன்மா. இதை வாங்க அவ்ன் பணம் குடுத்துத்தானே ஆகணும்? இதோட கயித்தைப் புடிச்சுக்கிட்டு கூடவே வா’’ன்னுட்டு நடக்க ஆரம்பிச்சுட்டாரு. இவளும் வேற வழியில்லாம அவர் பின்னாலேயே எருமைக் கயித்தைப் புடிச்சு அதை இழுத்துட்டுப் போயிருக்கா.
அவ கெட்ட நேரம்... அப்ப பாத்துத்தானா காலேஜ்ல அவளைப் பாத்து ஸின்ஸியரா லவ் பண்றேன்னு ‌லிட்டர் லிட்டரா ஜொள்ளு விட்டுட்டிருக்கற சுரேஷ் எதிர்ல வரணும்? அவன் இவ நடந்து வந்த கோலத்தைப் பாத்து குபீர்னு சிரிச்சு, ‘‘உங்கப்பாவும், எங்கப்பா மாதிரியே நீ படிக்கறதுக்கு லாயக்கில்லை, மாடு மேயக்கத்தான்டி லாயக்குன்னு திட்டிட்டாரா? இவ்வளவு சீரியஸா செயல்ல இறங்கிட்டியே...’’ன்னு கேட்ருக்கான். இவ அழுதுட்டா. நடந்ததை அவன்கிட்ட சொல்லிட்டு, ‘‘வேணா இவரைக் கேட்டுப் பாரு’’ன்னு திரும்ப, அந்த வழுக்கையர் எஸ்கேப் ஆயிட்டது அப்பத்தான் தெரிஞ்சிருக்கு. இந்த நேரம் பாத்து, ஒரு டாடா சுமோ பக்கத்துல வந்து ஹாரன் அடிக்க, எருமை மிரண்டு ஓடியிருக்கு.

‘‘ஐயோ... சுரேஷ் உடனே அதைப் பிடி...’’ன்னு இவ கத்த, அவன் எருமை பின்னால ஓட, இவளும் ‘புடிங்க.. புடிங்க...’’ன்னு கத்திக்கிட்டு பின்னாடியே ஓடியிருக்கா. எதிர்ல வந்த மூணு யூத்ஸ் ‘சுரேஷ், இவகிட்ட வம்பு பண்ணிட்டு ஓடி வர்றான் போலருக்கு, அதான் அவனைப் புடிக்கச் சொல்றா’ன்னு நினைச்சு, அவனைப் புடிச்சு செம சாத்து சாத்த ஆரம்பிச்சிருக்காங்க. அவன் ‘‘ஐயோ, அம்மா’ன்னு அலற... இவ போய் அவங்க கிட்ட விளக்கிச் சொல்லி, அவனைக் காப்பாத்தியிருக்கா.

நல்லவேளையா... எருமைக்காரன் எதிர்ல வந்ததால அது அடங்கி அவன் பக்கத்துல போய் நின்னுடுச்சு. அவன், ‘‘என்னம்மா இப்படிப் பண்ணிட்டீங்க?’’ன்னு புலம்பிக்கிட்டே பணத்தைக் குடுத்துட்டு எருமையக் கூட்டிட்டுப் போயிட்டான். இவள் ஸ்கூட்டிய எடுத்துட்டு வீட்டுககு வந்துட்டா. அடுத்த நாள் காலேஜ்ல இவகிட்ட வழிஞ்ச சுரேஷை கண்டுக்காம ஏஞ்சல் போனதுல, அவன கடுப்பாகி இந்த ‘எருமை’ மேட்டரை விரிவா எல்லார் கிட்டயும் பத்த வெச்சுட்டான்.

பசங்கல்லாம் அவளைப் பாத்தாலே ‘எருமை ஏஞ்சல்’ன்னு கூப்பிட்டு டீஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. நாங்க கேர்ள்ஸ் மட்டும் அப்படிக் கூப்பிடறதில்லை. எனக்கு யார் மேலயாவது கோபம் வந்தா, ‘‘ச்சீ போ எருமை’’ன்னு சொல்ற பழக்கம் இருந்தது. ஒரு தடவை அவளைக் கோவிச்சுக்கிட்டு அந்த வார்த்தையச் சொல்லிட, அவ நான் கிண்டல் பண்றேன்னு நினைச்சு அழுதுட்டுப் போயிட்டா. அப்புறம் அவளை சமாதானம் பண்ணிப் பேச வெக்கறதுக்கே ஒரு வாரம் ஆச்சுங்க...  இப்பல்லாம் நான் மறந்து கூட யாரையும் ‘போ, எருமை’ன்னு திட்டறதில்லைங்க! நெசமா...!
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "‌என் எருமை ஏஞ்சல்!"

21 April 2012

எலி பிடிக்க எலிய வழி!

‘எலி’ங்கற வார்த்தையை யாராவது சொன்னா, மிஸ்டர் ரங்கமணிக்கு ‘கிலி’ பிடித்து விடும். ஏன்னா... அவர் அடைஞ்ச அனுபவம் அப்படி. போன வாரத்துல ஒரு நாள்...

‘‘என்னங்க... வீட்டுல ஒரு எலி நடமாடிக்கிட்டிருக்கு. அதோட தொல்லை தாங்க முடியலை. அதை ஒழிக்க வழி ‌சொல்லுங்களேன்...’’ என்றாள் தங்கமணி.

‘‘இதுக்கேன்டி மண்டைய .உடைச்சுக்கற...? பொறி வாங்கி வெச்சுட்டா எலி மாட்டிக்கும்...’’ என்றார் ரங்கமணி.

‘‘அது என்ன மீனுன்னு நினைச்சீங்களா, பொரி வெச்சா கடிச்சு மாட்டிக்கறதுக்கு?’’

‘‘நாசமாப் போச்சு... பொரி இல்லடி... பொறி! எலிப்பொறியை வாங்கி ‌அது, அடிக்கடி நடமாடற இடத்துல வையின்னு சொன்னேன்’’ அப்படின்னார், அதோட விபரீத விளைவை உணராதவராக.

டுத்த தினம் குளித்து விட்டு, தலை சீவுவதற்காக ட்ரஸ்ஸிங் டேபிள் அருகில் வந்தவர், ‘ஆ’வென்று பெரிதாக அலறினார். காலை உதறிக் கொண்டு, புதுவிதமான பரதநாட்டியம் ஆடினார். காலுக்குக் கீழ் கட்டை இருக்க, காலுக்கு மேல்புறத்தை கம்பி அழுத்தமாக கவ்விக் கொண்டிருக்க, எலிப்பொறி அவர் காலைக் கவ்வி இருந்தது. பதறிப் போய் ஓடி வந்த தங்கமணி அதை அவர் காலிலிருந்து விடுவித்தாள்.

‘‘அடிப்பாவி! இதை வெக்கறதுக்கு உனக்கு வேற இடம் கிடைக்கலியாடி?’’ என்றார் வே‌தனைக் கண்ணீருடன். ‘‘நீங்கதானே அது நடமாடற இடத்துல வெக்கச் சொன்னீங்க. அது ட்ரஸ்ஸிங் டேபிள் பக்கம் ஓடறதை ரெண்டு மூணு தடவை பார்த்தேன். அதான் அங்க வெச்சேன். வாங்க, உடனே டாக்டர்கிட்டப் போகலாம்...’’ அப்படின்னா தங்கமணி.

ட்டோவுல போயி டாக்டரைப் பார்த்து காலி்ல் மருந்து வைத்து கட்டுப் போட்டுக் கொண்டு வந்ததும், ‘‘ஆபீஸ் கிளம்பணும். லீவில்லைடி.’’ என்றார் ரங்கமணி. தன் காலைப் பார்த்து வேதனைப் பெருமூச்சு விட்டபடி, ‘‘கொழுக்கட்டை பணணித் தான்னு ஒரு வாரமா கேட்டுட்டிருந்தேன். இப்படி என் கா‌லை கொழுக்கட்டை மாதிரி ஆக்கிட்டியேடி’’ என்றபடி டிரெஸ் பண்ணிக்கிட்டு கிளம்பினார்.

அடிபட்ட காலை தரையில் ஊன்றாமல் மற்றொரு காலால் அவர் துள்ளித் துள்ளிக் குதித்து பைக்கை நோக்கிப் போக, ‘‘ஹை! நாங்க ஓட்டாஞ்சில்லு எறிஞ்சு பாண்டி விளையாடுவோம் சின்ன வயசுல. அது மாதிரியே அழகாத் தாவறீங்களே...’’ என்றாள் தங்கமணி. பைக்கை நெருங்கி விட்டிருந்த அவர் வெறி கொண்டு திரும்ப, அவள் வீட்டினுள் எஸ்கேப்!

மாலை வீட்டுக்கு வரும்போது வேறொரு எலிப்பொறியை வாங்கிட்டு வந்தார் அவர். ‘‘அடியே... இதுல இங்க கம்பி இருக்கு பாத்தியா... இதுல தின்பண்டத்தை வெச்சுட்டு இப்படி இழுத்து விட்டுட்டயின்னா, எலி கடிச்சதும் கூண்டு மூடிக்கும். நாம அதை வீட்டுக்கு வெளியில தூக்கிப் போட்டுரலாம்டி’’ என்றார்.

‘‘சரிங்க... நான் இப்பவே அதிரசம் செய்யறேன்’’ என்றாள் அவள்.

‘‘எலி விழுந்தப்புறமா ஸ்வீட் செஞ்சு கொண்டாடலாம். இப்பவே எதுக்குடி பண்ற?’’ என்றார் அப்பாவி ரங்கமணி.

‘‘ஆசையப் பாரு... ஸ்வீட் உங்களுக்கில்ல... கூண்டுல வெக்க... எலிக்கு!’’ என்று அவள் சொல்ல, அவர் முகம் ஆயிரம் கோணலானது. அதிரசம் செய்து கூண்டில் வைத்தாள் தங்கமணி. அன்று எலி விழவில்லை. அடுத்த நாள் போளி செய்து வைத்தாள். அப்போதும் எலி கூண்டில் விழவில்லை.

‘‘என்னங்க இது... எலி மாட்டவே மாட்டேங்குது?’’

‘‘அந்த எலிக்கு ஒருவேளை டயபடிஸ் இருக்கும்னு நினைக்கிறேன்... எதுக்கும் அதுகிட்ட விசாரிச்சுட்டு நீ ஸ்வீட் வெச்சிருக்கணும்’’ என்றார் ரங்கமணி. 

அடுத்த கணம் அவரை நோக்கிப் பறந்து வந்த பூரிக் கட்டையை அவர் கேட்ச் பிடித்த அழகை செலக்ஷன் டீம் பார்த்திருந்தால் இந்திய கிரிக்கெட் அணிக்கு செலக்ட் ஆகியிருப்பார் ரங்கமணி.

‘‘கோபிச்சுக்காதடி. நான் சொல்றதைக் கேளு. மசால் வடையைப் பண்ணி அதுக்குள்ள வை. கண்டிப்பா எலி அதைக் கடிச்சுட்டு மாட்டிக்கும்...’’ என்றார். ‘‘மசால்வடை ‌பண்ணிக் குடுன்னு ரெண்டு நாளா சொல்லிட்டிருந்தீங்க. எலியைச் சாக்கு வெச்சு சாப்பிடலாம்னு ப்ளானாக்கும்... சரி, அதையும் செஞ்சு பாக்கறேன்...’’ என்றாள் அலுப்பாக தங்கமணி.

ரவு. கட்டிலை யாரோ ஆட்டுவது போலிருந்தது. கட்டிலிலிருந்து உருண்டு கீழே விழுந்ததில் அலறிக் கண் விழித்தார் ரங்கமணி. சில கணம் கழித்துத்தான் நில நடுக்கம் ஏற்பட்டிருந்தது புரிந்தது. அத்தனைக்கும் கண் விழிக்காத தங்கமணி, எலிப் பொறியின் கதவு ‘டப்’பென்று மூடிக் கொண்ட சத்தத்திற்கு கண் விழித்தாள்.

‘‘என்னங்க... விழுந்துடுச்சு...  விழுந்துடுச்சு...’’ என்று அலறினாள்.

‘‘அறிவு கெட்டவளே! என்னமோ பரிசுப் போட்டியில பரிசு விழுந்துடுச்சுங்கற மாதிரி கத்தறியே..! நிலநடுக்கம்டி... வா, வீட்டுக்கு வெளில ஓடலாம்....’’ என்றபடி வெளியே ஓடினார் ரங்கமணி. வாழ்க்‌கைல முதல் முறையா கணவனை பின்பற்றினா தங்கமணி. நில நடுக்கம் நின்னதுக்கப்பறம் வீட்டுக்குள்ள வந்து பார்த்தப்ப, கூண்டு மூடிக்கிட்டிருந்தது; எலி மாட்டலை.

அப்புறம்தான் தங்கமணிக்கு ஞானோதயம் ஏற்பட்டுது. ‘‘பொதுவா சமையலறை பரண்லதாங்க எலிங்க ஒளிஞ்சுக்கும்னு சொல்லுவாங்க... அதை க்ளீன் பண்ணினா மாட்டிடும்...’’ என்று அவரைப் பாடாய்ப் படுத்தி பரணில் இருக்கும் பாத்திரங்‌களை இறக்கச் சொன்னாள். எலி கீழே குதித்தால் அடிக்க கையில் ஒரு தடிக் கம்புடன் நின்றிருந்தாள் தயாராக.

ஒரு பெரிய அண்டாவை அவர் எடுக்க, எலி அதிலிருந்து அவர் தோளில் குதிக்க... அடுத்த கணம் பொடேரென்று அடித்தாள் தங்கமணி- எலியை இல்லீங்க... அவரை! அந்தப் பொல்லாத எலிதான் அவர் தோளிலிருந்து லாங் ஜம்ப் பண்ணி ஜன்னல் மேல் தாவி, அங்கருந்து ஹை ஜம்ப் பண்ணி வீட்டை விட்டு வெளில போய்டுச்சே!

தங்கமணி அதிகம் ஒண்ணும் எடையில்லங்க... 90 கிலோதான். அந்த வெயிட்டோட தடியோட ஸ்பீடும் சேர்ந்து தாக்கினதுல, 45 கிலோ எடையுள்ள ரங்கமணி... ‘‘ஐயோ, அம்மா’’ன்னு அலறிட்டு விழுந்தவர் எழுந்திருக்கவே இல்ல. அவரோட மயக்கத்தை தெளிய வெச்சு, ஆறுதல்படுத்தி, ஸாரி கேட்டு எல்லாம் ஆனப்பறம், வீட்டுல எல்லா ஜன்னல்களுக்கும் வலைக் கம்பி அடிச்சு, எலி என்ன... கொசு கூட வர முடியாதபடி பண்ணிட்டா தங்கமணி.

டுத்தநாள் ராத்திரி எலித் தொந்தரவு இல்லாம ஏ.ஸி.யப் போட்டுக்கிட்டு ரொம்பவே நிம்மதியாத் தூங்கினா தங்கமணி. ஆனா, பாவம்... ரங்கமணி தான் தூங்கவே இல்ல.ஏன்னா கேக்கறீங்க..? ஏ.ஸி. மிஷின் போடற சத்தத்தை விட நாலு மடங்கு சத்தம் தங்கமணி கிட்டருந்து வந்துக்கிட்டிருந்ததே ‘குறட்டை’ங்கற பேர்ல. அந்த எட்டாவது ஸ்வரத்தைக் கேட்டுடடிருக்கற அவரால எப்படிங்க தூங்க முடியும்?

பின்குறிப்பு : இனிய வலைத்தள நட்புகளே... உறவுகளே...! ஃபர்ஸ்ட் டைமா குட்டியா கதை எழுதலாம்னு ட்ரை பண்ணியிருக்கேன். நல்லா இருந்தது்ன்னு நினைச்சா தட்டிக் கொடுங்க... இல்லன்னாலும் ‘‘சின்னப் புள்ள தானே நிரூ, தட்டிக் கொடுத்தாதான் இனிமேயாவது நல்லா எழுதுவா’’ன்னு அப்பவும் தட்டிக் ‌கொடுங்க. ஹி... ஹி...
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "எலி பிடிக்க எலிய வழி!"

18 April 2012

மஞ்சள் நிறத் தவளை கண்டதுண்டா!


நிரூ எவ்வளவு பெரிய அறிவாளின்னு உங்களுக்கெல்லாம் நல்லாத் தெரியும்தானே... (சரீ... சரீ... கம்பைக் கீழ போடுங்க) சின்ன வயசுலருந்தே அவ எம்புட்டு அறிவாளியா இருந்தாங்கறதை விளக்கமா நான் எடுத்துச் சொன்னாத்தானே நீங்க புரிஞ்சிக்க முடியும். சில சாம்பிள் சம்பவங்களைப் பாருங்க...

                                                                     சம்பவம் : 1

ப்பா டி.வி.யில் ‘சன் மியூசிக்’ வைத்து, மீனாவை ஊஞ்சல் ஆட்டி, நதியாவைப் பார்த்து காதல் பாட்டுப் பாடும் ‘ராஜகுமாரன்’ பிரபுவை ரசித்துக் கொண்டிருக்கிறார். குட்டி நிரஞ்சனா அருகில் வருகிறாள்.

நிரூ : அப்பா...

அப்பா: நிரூக்குட்டி! இந்த கவுன் .உனக்கு ரொம்ப அழகா இருக்கே... வாடா, செல்லம்! (மடியில் அமர்த்திக் கொள்கிறார்.)

நிரூ: அப்பா... Frag எல்லாம் Green கலர்லதானே இருக்கும்..?

அப்பா: ஆமாண்டா குட்டி! தவளை பச்சையாத்தான் இருக்கும்!

நிரூ: எனக்கு Yellow Colour தவளையைப் பார்க்கணும் டாடி... கூட்டிட்டுப் போயி காட்டுங்க... ப்ளீஸ்!

அப்பா: (குழப்பமாய்) Yellow Colour தவளையா? அப்படி ஒண்ணு கிடையாதும்மா...

நிரூ: போங்க டாடி..! பொய் சொல்றீங்க... (டி.வி.யைக் காட்டி) அந்த அங்கிள் ஆன்ட்டியப் பாத்து, ‘அந்தி மஞ்‌சள் நிறத் தவளை’ன்னு பாட்டு பாடிட்டிருக்கார். ஐயாங்... எனக்கு உடனே மஞ்சள் நிறத் தவளையப் பாத்தாகணும் டாடி... காட்டுங்க...!

அப்பா: அவ்வ்வ்வ்வ்வவ்!

*********************************************************

                                                             சம்பவம் : 2

ம்மா, குட்டி நிரஞ்சனாவை அருகில் வைத்துக் கொண்டு பூஜையறையில் பூஜையை ஆரம்பிக்கிறாள். டேப்பில் கந்தசஷ்டி கவசத்தைப் போட்டுவிட்டு...

அம்மா: நிரூ செல்லம்! முருகக் கடவுளைப் பத்தினது இந்தப் பாட்டு. நல்லாக் கவனிச்சுக் கேளு. முருகன் எவ்வளவு பெரியவர்னு தெரியும். சரியா...?

நிரூ: சரிம்மா... (உன்னிப்பாக பாடலைக் கவனிக்க ஆரம்பிக்கிறாள்.) சற்று நேரத்தில் பூஜையை முடித்து விட்டு...

அம்மா: நிரூ... கந்தசஷ்டி கவசம் கேட்டியா? உனக்கு என்ன புரிஞ்சுது?

நிரூ: (அருகில் படுத்துக்கிடந்த கைக்குழந்தையான தங்கையைக் காட்டி) இவளுககு நான் நிறைய ஹெல்ப் பண்ணனும்னு புரிஞ்சுக்கிட்டேம்மா...

அம்மா: (குழப்பமாக) என்னடி சொல்ற நீ? கந்தசஷ்டி கவசத்துக்கும், தங்கச்சிக்கு ஹெல்ப் பண்றதுக்கும் என்ன சம்பந்தம்?

நிரூ: போம்மா, உனக்கு ஒண்ணுமே தெரியல... ‘சிஸ்டருக்கு உதவும் செங்கதிர் வேலா’ன்னு பாடினாங்களே... முருகனே சிஸ்டருக்கு உதவறார்ன்னா... நான் உதவ வேண்டாமா?

அம்மா: ங்ங்ங்ங்ங்ஙே...!

*********************************************************

                                                                  சம்பவம் : 3

10ம் வகுப்பு படிக்கும் நிருவின் அருகில் பள்ளித் தோழி அனு அமர்ந்திருக்கிறாள்.

நிரூ: ஏய் அனு! நேத்து தமிழ் மிஸ் திருக்குறள் பத்தி சொந்தமா யோசிச்சு ஒரு கட்டுரை எழுதிட்டு வரச் சொன்னாங்களே. எழுதினியாடி.

அனு: எழுதிட்டேன். படிச்சுப் பாருடி... (நோட்டை நிரூவிடம் தந்துவிட்டு) நீ என்ன எழுதியிருக்க... குடு பாப்போம்... (நிரூவின் நோட்டை வாங்கிப் புரட்டுகிறாள்.)

நிரூ: ம்... பரவால்லடி. நல்லாவே எழுதியிருக்க... நான் எழுதினது எப்படி இருக்கு?

அனு: என்னுதை விட நல்லாவே எழுதியிருக்க... அதுசரி நிரூ... உனக்கு இப்பவே கல்யாண ஆசை வந்துடுச்சா? நான் வேணா உன் மம்மி கிட்ட சொல்லட்டுமா, உனக்கு கல்யாணம் பண்ணி வெக்கச் ‌சொல்லி...

நிரூ: (குழப்ப முகத்துடன்) என்னடி உளர்ற? நான் எவ்வளவோ படிக்கணும்னு ப்ளான் வெச்சிருக்கேன். என்னைப் போய் இப்பவே கல்யாணம் பண்ணிக்கச் சொல்றே...?

அனு: இல்லடி... ‘அறம் வலியுறுத்தல்’ங்கற அதிகாரத்துல ஒரு குறளை ரெஃபர் பண்ணி எழுதும் போது, ‘அத்தான் வருவதே இன்பம்’ன்னுல்ல எழுதியிருக்கியே...

நிரூ: (நோட்டைப் பார்த்து) ஸ்பெல்லிங் மிஸ்டேக்டி! 'அறத்தான் வருதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல்'ன்னு வந்திருக்கணும். அவ்வ்வவ்வ்வ்!

*********************************************************

நோ... நோ...நிரூவோட புத்திசாலித்தனத்து மேல பொறாமைப்பட்டு தக்காளி, அழுகின முட்டை எல்லாம் கைல எடுக்கக் கூடாது.... எதுவா இருந்தாலும் பேசித் தீத்துக்கலாம், சரியா? நல்ல புள்ளையா இப்பப் ‌போயிட்டு என்னோட அடுத்த பதிவுக்கும் வந்துடுங்க. அது போதும்...!
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "மஞ்சள் நிறத் தவளை கண்டதுண்டா!"

17 April 2012

ரசிக்க வைத்த மாஸ்(ரைட்)டர் சுஜாதா!


போன வாரத்துல ‘மின்னல் வரிகள்’ கணேஷ் Uncle வீட்டுக்குப் போயிருந்தப்ப குட்டிக் குட்டியா ‌ஏழெட்டுப் புத்தகங்கள் வாங்கி டேபிள் மேல வெச்சிருந்தார். அட்டைப் படங்களே அழகா இருந்தது. அதுவும் சுஜாதா எழுதினதுங்கறதால எடுத்துப் பார்த்தேன். சுஜாதாவோட எழுத்துக்கள் பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன். சரி, படிச்சுப் பார்க்கலாம்னு தோணிச்சு.

‘‘நிறைய புத்தகங்கள் படிசசால்தான் அறிவு வளரும்’’ என்பார் அவர் என்கிட்ட அடிக்கடி. ‘‘நீங்க படிச்சு ‘அதை’ வளத்துக்கங்க அங்கிள்! நிரூவுக்கு ஆண்டவன் ஏற்கனவே ஏராளமா மூளையக் குடுத்திருக்கான். வளத்துக்கவே வேண்டியதில்லை’’ என்பேன். அவர்‌ வெறியாகி தலையில் குட்ட ஓடி வருவார். நானா மாட்டுறவ..? Ok.Ok. Jokes apart.... 200, 300 பக்கம் இருக்கற புத்தகத்தைப் படிக்கல்லாம் எனக்குப் பொறுமை இருக்கறது கிடையாது. That is the Truth! இதெல்லாம் என் ஹேண்ட் பேக்ல அடங்கற சைஸ்ல இருந்ததால அந்தப் புத்தகங்கள்ல சிலதை அவர்ட்ட கேட்டு எடுத்துட்டுப் போயி படிக்க ஆரம்பிச்சேன். நான் படிச்சு ரசிச்ச ரெண்டு கதைகளைப் பத்தி உங்ககிட்ட Share பண்ணிக்கறேன்...

                       ஒரு சிக்கலில்லாத காதல கதை

ரிதாவும், சரஸ்வதியும் டாக்டர்கள். House Surgeon Hostelல் தங்கி பிராக்டிஸ் பண்ணுறவங்க. சரிதா பேரழகி. சரஸ்வதி சுமார். அவ கனவுல ஒரு ராஜகுமாரன் அடிக்கடி வர்றான். ஒருநாள் அவனைப் போன்ற ஒருவன் ஹாஸ்டலில் அவளை மீட் பண்றான். அவள் தூரத்து உறவு என்று சொல்லி அறிமுகமாகிறான். கோபிநாத் என்ற அவனிடம் தன் ராஜகுமாரனைப் பார்க்கிறா அவ. சரஸ்வதி கிட்டப் பேசுற அவன் அவளது விசாலமான அறிவைப் பாத்து பிரமிச்சுப் போறான்.

உயிர்மை * 48 பக்கம் * 25 ரூபாய்
அவனையும் சரிதாவையும் சந்திக்க வைக்கிறாள் சரஸ்வதி. அந்தச் சந்திப்பில் சரிதாவை அவன் அலட்சியப்படுத்துகிறான். சரஸ்வதிக்கு அவன்கூட நெருக்கம் அதிகமாகிடுது. ஒருநாள் கோபியும் சராசரி ஆண் அப்படின்னு வெறுப்புடன் சொல்ற சரிதா, அவன் எழுதிய கடிதத்தை சரஸ்வதியிடம் காட்டுகிறாள். அதில் ‘ உன்னைப் பார்த்த கணமே காதலிக்க ஆரம்பித்து விட்டேன் சரிதா. சரஸ்வதியிடம் நிறையப் பேசினால் அ‌தில் பாதியாவது உன்னை வந்தடையும். என்னைத் திரும்பிப் பார்ப்பாய் என்றுதான் அவளுடன் பழகினேன்.’ அப்படின்னு ஆரம்பிச்சு நிறைய உளறியிருக்கான் அவன்.

சரிதாவைக காதலிக்கத் தன்னை கருவியாகப் பயன்படுத்திட்டானே என்று அவள் இதயம் உடைஞ்சு போகுது. கார்டினால் மாத்திரைகளைத் முழுங்கி தற்கொலை பண்ணிக்கலாம்ன்னு முடிவு பண்ணி நைட் டைம்ல மாத்திரைய எடுக்க ஆஸ்பத்திரிக்குப் போறா அவ. மாத்திரை பாட்டிலை எடுத்துட்டு வர்றப்ப உயிருக்குப் போராடற ஒரு நோயாளியை சீஃப் டாக்டர் வர்றவரை காப்பாத்த வேண்டிய கட்டாயம் வந்துடுது. தன் மருத்துவ அறிவையெல்லாம் பயன்படுத்தி அந்த உயிரைக் காப்பாத்துறா அவ. சீஃப் டாக்டர் வந்து செய்ய வேண்டியவற்றைச் செய்துவிட்டு அவளின் முயற்சிகளைப் பாராட்டுகிறார். அவளுக்கு தன் ராஜகுமாரன் மருத்துவத் தொழில்தான் என்று அந்த நிமிஷம் புரிகிறது. தன் முடிவை அவள் கைவிட, கார்டினால் மாத்திரை பாட்டில் தரையில் விழுந்து மாத்திரைகள் சிதறுகின்றன.

எனக்கு் தெரிஞ்ச வரையில கதையோட Juice இங்க சொல்லியிருக்கேன். But, சுஜாதாவோட வார்த்தைகள்ல படிக்கிறப்ப அது எழுப்பின Feelings விவரிக்கிறது ரொம்பக் கஷ்டம். அழகான Dialogues, சரஸ்வதியோட ரசனைகள்ன்னு படிக்க ரொம்ப ரொம்ப ஈஸியான நடையில அருமையா எழுதியிருக்காருங்க. காதல் என்கிற விஷயத்தோட ஃபீலை படிக்கறவங்களுக்குள்ள அழகா உருவாக்கிட்டு, அந்த Climax மூலமா மனசுல உக்காந்துடறார்.

                                                 விளிம்பு

சாரதி என்கிற இளைஞனோட மன அவஸ்தைகளே கதை. அவனே சொல்வதாக கதை துவங்குது. அவன் பத்து ஆசாமிகளுக்குள்ள சிந்தனை ஓட்டத்தினால் ரொம்பவே சிரமப்படுகிறான். விஜயன் என்று அறிமுகமாகும் புதிய அலுவலகத் தோழன் அவனை சைக்யாட்ரிஸ்டை சந்திக்கச் சொல்கிறான். சாரதி பார்த்துவிட்டு வர, எதுவும் பலனில்லை. ‘உன் பிரச்னை எனக்குத் தெரியும். சின்ன வயதில் உன் அம்மாவோட தவறான நடத்தையும் அதை நீ பாத்ததும் தான்’ என்று விஜயன் சொல்ல, கடும் கோபமாகிறான் சாரதி. அப்புறமும் பல சந்தர்ப்பங்களில் விஜயன் ‘பச்சை’யாக நிஜம் பேச, Mental Agony தாங்காமல் அவனைக் கொன்றுவிட முடிவு பண்றான் சாரதி. அலுவலகத்தில் வார இறுதியில் நந்தி ஹில்ஸ் டூர் போகத் தீர்மானிக்கப்பட அங்கே விஜயனைக் கொல்வதென்று திட்டம் போடறான்.

உயிர்மை * 54 பக்கம் * 25 ரூபாய்
நந்தி ஹில்ஸ்! விஜயனுடன் பேசியபடி மலைச்சரிவுக்கு அழைத்து வரும் சாரதி, அவனைத் தள்ளிவிட, விஜயன் அவனை உடும்புப் பிடியாகப் பிடித்திருக்க... இருவரும் பள்ளத்தாக்கில விழுந்துடறாங்க.  காலைல போலீஸ் வந்திருக்க... இன்ஸ்பெக்டர் சரிவில் விழுந்து சிதறியிருக்கும் ஒரு உடலுக்குப் பக்கத்தில நின்று விசாரிக்கிறார். ‘‘இந்த ஆள் உங்க குழுவோட வந்தவரா?’’  ‘‘ஆமாங்க...’’ என்று பதில் கிடைக்கிறது. ‘‘பேர் என்ன?’’ என்று கேட்க... ‘‘விஜய சாரதிங்க!’’

Hayooooooo! அந்தக் கடைசி வரி! promiseஆ நான் எதிர்பார்க்கலை! தடால்ன்னு ஒரே வரில கதையவே மாத்திப் போட்டு பிரமிக்க வெச்சுட்டார். Psychic Disorder உள்ள ஒரு ஆசாமியோட மன உணர்வுகள்தான் கதைன்னு முதல்லயே புரிஞ்சிட்டாலும் விஜயனும் சாரதியும ஒரே நபர்தான்கறதை சட்னு கெஸ் பண்ணிட முடியாதபடி கதையக் கொண்டு போனதுல... அசத்திட்டார் மாஸ்டர்!‌

ரெண்டு கதைகளையும் படிச்சு முடிச்ச‌துமே மீதி இருக்கற நாலையும் படிச்சே தீரணும்னு முடிவு பண்ண வெச்சுட்டார் சுஜாதா1 Ganesh Uncle பண்ற மாதிரி புத்தகத்தை எடுத்துட்டு Writer கிட்டப் போயி புக்ல ஆட்டோகிராப் வாங்கிட்டு வந்துடலாமான்னு கூட எனக்குள்ள ஒரு ஆசை வந்துச்சு. But... What to do? Sujatha is not with us now!


நான் படிக்க எடுத்து வெச்சிருக்கேன் இதையெல்லாம்!

மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "ரசிக்க வைத்த மாஸ்(ரைட்)டர் சுஜாதா!"

14 April 2012

IPL கிரிக்கெட்டும்... மைலாப்பூர் தேரும்!

ஹாய் எவ்ரிபடி! எக்ஸாம்ஸ்லாம் முடியற வரைக்கும் நெட் பக்கம் போனா முழியை நோண்டிடுவேன்னு மம்மி 144 போட்டிருந்தாங்க. நிரூவை (அழகான) கண் இல்லாம பாக்கச் சகிக்காதுங்கறதால ஒரு சின்ன அஞ்ஞாத வாசம். இப்போ மறுபடி வந்தாச்சு. நிரூவுக்கு இனி இல்லை இடைவேளை..!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
 
மீபத்துல மயிலாப்பூர் கோயில்ல தேரோட்டமும், அறுபத்து மூவர் உற்சவமும் நடந்தது. போயிருந்தேன். கடைத் தெரு முழுக்க பதுசு புதுசாக் கடைகள் முளைச்சிருந்துச்சு. சின்னப் பசங்களுக்கு பலூன்களும், ஊதல்களும் விக்கிற கடைங்களும், ஐஸ்கிரீம், பானி பூரி ‌மாதிரி ஸ்நாக்ஸ் கடைங்களுமா பாக்க சந்தோஷமா இருந்தது. ஏராளமான கூட்டத்துக்கு நடுவுல நடமாடறதுல ஒரு த்ரில் வேற.

அங்க நிறைய பெரிய பெரிய நிறுவனங்கள் இலவசமா நீர் மோர்ப் பந்தலும், அன்னதானப் பந்தல்களும் வெச்சிருந்தாங்க. நம்ம ஜனங்க அங்கங்க போய் வெண் பொங்கலும், ‌புளியோதரையும் அவங்க தர்ற பேப்பர் ப்ளேட்ல வாங்கிச் சாப்பிட்டுட்டு, பிளேட்டுகளை ரோட்டுலயே போட்டுட்டுப் போயிட்டிருந்தாங்க. நீர்மோர் குடிச்ச டிஸ்போஸபிள் டம்ளர்கள் வேற ரோடு முழுக்க இறைஞ்சு கிடந்துச்சு. நடக்கறவங்க அதையெல்லாம் மிதிச்சுட்டுப் போறதைப் பார்த்ததும் எனக்கு அருவருப்பா இருந்துச்சு.

குப்பைகளை எல்லாம் ரோட்டு ஓரத்துல இருக்கற குப்பைத் தொட்டிகள்லதான் எறியணும்கற பேஸிக் மேனர்ஸ் கூட இல்லாம இந்த ஜனங்கல்லாம் இருக்காங்களேன்னு கோபமா இருந்துச்சு எனக்கு. ஆனா கண்ணை நல்லாத் திறந்து சுத்துப் பக்கத்தைப் பார்த்ததும்தான் ஒரு விஷயம் புரிஞ்சுது. ஜனங்களை மட்டும் குறை சொல்லிப் பிரயோஜனமில்லை. ஏன்னா... குப்பைத் தொட்டிகள் எதுவும் அங்க வைக்கப்படலை. தெப்பக்குள ரோடு திருப்பத்துல இருந்த ஒரே ஒரு குப்பைத் தொட்டிதான் கண்ணுல பட்டுச்சு. பாவம்... ஜனங்கதான் என்ன செய்வாங்க?ன்னு தோணிச்சு.

எவ்வளவோ செலவு பண்ணி (விளம்பரத்துக்காக) அன்னதானப் பந்தலும், நீர்மோர்ப் பந்தலும் வெக்கிற கம்பெனிங்க, அதுக்குப் பக்கத்துலயே ஒரு குப்பைத் தொட்டியையும் வைக்கணும்கறது என்னோட யோசனை! (ஆமா... இவ சொன்னா அடுத்த நிமிஷம் கேட்டு செயல்படுத்திட்டுத்தான் வேற வேலை பாக்கப் போறாங்களாக்கும்...!)

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

மைலாப்பூர்லருந்து மாம்பலத்துக்கு டிரெய்ன்ல வந்துட்டிருந்தப்ப... சேப்பாக்கம் ஸ்டேஷனை ரயில் தாண்டினப்ப... கைப்பிடிச் சுவர்ல பல்லி மாதிரி சில இளைஞர்கள் ஒட்டிக்கிட்டு எதையோ எட்டிப் பாத்துட்டிருந்தாங்க. என்னத்தை அப்படிப் பாக்கறாங்கன்னு நான் ஜன்னல் வழியா எட்டிப் பாத்தப்ப... அவங்க ஆங்கிள்லருந்து சேப்பாக் கிரவுண்டில நடந்துட்டிருந்த கிரிக்கெட் மேட்ச் தெளிவாப் பாக்க முடிஞ்சுது. இந்த விளையாட்டு மேல என்ன அப்படி ஒரு கிரேஸ் ஜனங்களுக்குன்னு எப்பவும் எனக்கு வியப்புதான். இதைப் பத்தி சமீபத்துல படிச்ச ஒரு தகவல் வியக்க வெச்சது. நிறையப் பேருக்குத் தெரிஞ்சிருக்குமோ என்னமோ... எனக்கு இது புதுசு.

ந்திய கிரிக்கெட் அணியில ‘ஏ’ பிரிவில இருக்கிற வீரர்களுக்கு வருஷத்துக்கு ஒரு கோடி ரூபாயும், ‘பி’ பிரிவு வீரர்களுக்கு 50 லட்ச ரூபாயும், ‘சி’ பிரிவில் உள்ளவர்களுக்கு 25 லட்ச ரூபாயும் சம்பளமாம். (விளையாடினாலும், விளையாடா விட்டாலும்). இதைத் தவிர டெஸ்ட் போட்டிக்கு, ஒருநாள் போட்டிக்கு 20-20 ஓவர் போட்டிக்குன்னு கணிசமா ஒரு பெரிய தொகை தரப்படுகிறதாம். மத்த நாட்டு வீரர்களுக்கு அவங்க நாட்ல கொடுக்கப்படற தொகையோட ஒப்பிடும் போது இது மிகமிக அதிகமான தொகைன்னு சொல்லப்படுகிறது. பணம் கொழிக்கும் நாடுகளான நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ‌ஆகியவைகூட தங்கள் வீரர்களுக்கு இவ்வளவு பணம் தர்றதில்லையாம்.

இந்த வருமானம் தவிர இப்ப நடந்துக்கிட்டிருக்கிற ஐ.பி.எல். ‌போட்டிகள் கிரிக்கெட்டிற்கு தங்கச் சுரங்கம் போல. சென்ற வருடம் கிரிக்கெட் வாரியத்தின் வருமானமான 1670 கோடியில 970 கோடி ஐ.பி.எல். மூலமா மட்டுமே கிடைச்சிருக்காம். ஐ.பி.எல். போட்டி நடந்தபோது டி.வி.யில 10 விநாடி விளம்பரம் செய்ய ஒரு லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை கட்டணம் வசூலிககப்பட்டது. ஐ.பி.எல். போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமையைப் பெற்ற செட்-மேக்ஸ் நிறுவனம் அதன் மூலம் 900 கோடி ரூபாய் லாபம் அடைஞ்சிருக்குன்றது போனஸ் ஆச்சர்யத் தகவல்!

இப்படி கிரிக்கெட் மிகப் பெரிய வியாபாரமா இன்னிக்கு இருக்கு. கவாஸ்கர், கபில்தேவ் கால வீரர்கள் இவ்வளவு விளம்பரங்கள்ல நடிக்கிற வாய்ப்பும், இவ்வளவு பணமழை கொட்டவும் வாய்ப்பில்லாமலேயே இருந்துட்டுப் ‌போயிட்டாங்க. அப்ப விளையாட்டுல ஜெயிக்கணும்கற வெறி இருந்துச்சு. இப்ப ஜெயிச்சாலும், தோத்தாலும் வீரர்களுக்குப் பணம் கொட்டறதுங்கறப்ப ஜெயிக்கிற வெறி எப்படி வரும்? 'Be sportive' என்று எல்லாத்தையும் 'Take it Easy' யாவே எடுத்துக்கறாங்க.

என்னை உறுத்துற ஒரு கேள்வி என்னன்னா... ஏன் ஜனங்க இந்த விளையாட்டுக்கு மட்டும் இவ்வளவு Importance கொடுத்துப் பாக்கறாங்க? மத்த விளையாட்டுக்களை ஏன் இந்த அளவுக்கு ஊக்கப்படுத்தறதில்லைங்கறதுதான்!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

நிரூ இந்தத் தடவை ரொம்ப சீரியஸாப் பேசியிருக்காளோன்னு தோணுது, இல்ல..? அடுத்த தடவை ரிலாக்ஸான மேட்டர்களோட சந்திக்கிறேன். ஸீ யு!
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "IPL கிரிக்கெட்டும்... மைலாப்பூர் தேரும்!"
 

கலை அக்கா தந்த பரிசுகள்!

கலை அக்கா தந்த பரிசுகள்!

என் தோழி விஜி தந்த விருது!

என் தோழி விஜி தந்த விருது!