Pages

Ads 468x60px

30 August 2012

நான் வெறுக்கும் ஆண்கள்!


திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் எனக்கு விருது அளித்து, அதில் நான் சந்தோஷம் அடைந்து குதித்துக் கூத்தாடியதைப் பார்த்து ரொம்பவே ரசித்திருப்பார் போல இருக்கிறது. இந்தச் சின்னப் பெண் இன்னும் சந்தோஷப்படட்டுமே என்று என்னிடம் மற்றொரு விருதையும் பகிர்ந்திருக்கிறார். அவருக்குச் சொல்கிற நன்றி என்கிற சாதாரண வார்த்தை என் மன உணர்வுகளை ஒருபோதும் வெளிப்படுத்தி விடாது. தூரத்தில் இருக்கிற காரணத்தால் கண்கள் பனிக்க அந்த வார்த்தையைத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. நன்றி ஐயா.



நிரஞ்சனாவி்ன் டைரியிலிருந்து :

ஏ‌னோ தெரியவில்லை... ஆண்களின் இரண்டு செயல்களைப் பார்க்கிற போதெல்லாம் பளார் பளாரென்று அடிக்க வேண்டும் போல ஒரு வெறுப்புப் பொங்கி வருகிறது. முதலாவது விஷயம்... மரங்களின் அடியிலும், பல சமயம் பரபரப்பான சாலையின் ஓரங்களிலும் திரும்பி நின்று பாண்ட் ஜிப்பை இறக்கி விட்டு இயற்கை உந்துதலைத் தணிப்பது. விளக்குக் கம்பத்தைக் கண்டால் காலைத் தூக்குகிற உயிரினத்திற்கும் இவர்களுக்கும் பெரிதாக வித்தியாசம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. கண்ணில் படும் போதெல்லாம் முகத்தைத் திருப்பிக் கொள்கிற எனக்குள்ளே அருவருப்பும், கோபமும் பொங்கி வரத்தான் செய்கிறது.

இத்தகைய இயற்கை உபாதை பெண்களுக்கு மட்டும் கிடையாதா? இருந்தாலும் ஏன் செய்வதில்லை என்றால் வளர்க்கப்படும் முறை. சிறு வயதிலிருந்தே இப்படிச் செய்வது மானக் கேடு என்று அறிவுறுத்தி வளர்க்கப்படும் பெண்கள், தங்களின் கட்டுப்பாட்டுக்குள் அதை வைக்க முடிகிறது. அதுவே தன் மகன் ‘உச்சா’ ‌போகணும் என்றால் பொறுமையைப் போதித்துப் பழக்காமல், கிடைத்த இடத்தில் செய்ய வைத்து, இது தவறேயில்லை என்பதைக் குழந்தை முதலே மனதில் பதித்து விடுகிறோம். ஆகவே பெற்றோர் வளர்க்கும் முறையிலும் தவறு இருக்கிறது என்பது என் மனதுக்குத் தோன்றுகிற விஷயம். பின்னாளி்ல் எனக்குப் பிறக்கும் மகன் இப்படிச் செய்தால் முதுகுத் தோலை உரித்து விடுவேன். ‘‘ஐயோ... பாவம்டி!’’ ‘‘ஏய், மனஸ்! என்னை மாதிரி ராட்சசிக்குப் பிள்ளையாப் பிறந்தா அனுபவிச்சுதான் ஆகணும், தெரிஞ்சுக்கோ’’ ‘‘நான் ‌சொன்னது பிள்ளைய இல்லம்மா... உன் கழுத்துல தாலிகட்டப் போற அப்பாவி ஜீவனை நினைச்சு...’’ ‘‘அடிங்... எடு அந்தச் செருப்பை!’’

இன்னொரு கெட்ட பழக்கம்- நெரிசலான ட்ராஃபிக் மத்தியில போய்ட்டிருக்கும் போது சிக்னல்ல வண்டி நின்னுட்டாப் போதும், தலையைச் சாய்ச்சு வாயில இருக்கற எதையாவது துப்பறதும், பஸ்ல ஜன்னல் வழியா துப்பறதும். அறிவு கெட்ட மடையர்கள்...! பின்னால யாராவது இருக்காங்களான்னு கூடப் பாக்காம பல சமயங்கள்ல இப்படித் துப்பிடறாங்க. அதனோட சில துளிகள் தப்பித் தவறி சுடிதார் முனைல பட்டுட்டாக் கூட அருவருப்பா இருக்கு. அரசாங்கம் மட்டும் எனக்கு ஒரு பிஸ்டலையும், கேஸ் போட மாட்டோம்னு அனுமதியும் குடுத்துட்டா, நிறையப் பேரை இரக்கமேயில்லாம சுட்டுத் தள்ளிடுவேன்.  ‘‘புதிய பூலான் தேவி கிளம்பிட்டாய்யா...’’ ‘‘தோ பாரு மனஸ்! சீரியஸாப் பேசிட்டிருக்கறப்ப ஜோக் அடிக்காத!’’

‘‘ஜோக் அடிக்கலை நிரூ. சீரியஸாவே கேக்கறேன். பொம்பளைங்க இப்படித் துப்பறதை நீ பார்த்ததே இல்லையா என்ன? அதுக்கென்ன சொல்ற?’’ ''அதுவா..? பழம், பூ விக்கறவங்க மாதிரி சில அடித்தட்டு பெண்கள் இப்படிச் செய்யறதுண்டு. அது சதவீதத்துல மிகக் குறைவு.'' இவனுங்களை மாதிரி டிராஃபிக் நடுவுல, பான்பராக் மாதிரி கண்டதையும் மென்னுட்டு - சில சமயம் வண்டி ஓடிட்டிருக்கறப்ப கூட - அப்படியே தலையக் குனிஞ்சு துப்பற அநாகரீகம் 90 சதம் ஆண்கள் கிட்டத்தான் பாக்கறேன். எல்லாம் தான் ஸ்ட்ராங்கர் ஸெக்ஸ், ஆண்கள் எதையும் பண்ணலாம்கற திமிர் மனோபாவம். இதைப் பாக்கறப்பல்லாம் கோபமும், வெறுப்பும் சமவிகிதத்தல வருது.

சிங்கப்பூர் மாதிரி நாடுகள்ல இப்படி ரோட்டோரத்துல துப்பினா, குப்பை போட்டா அபராதம்னு இருக்கறதால சாலைகள் சுத்தமா இருக்கு. இங்கயும் அப்படிப் பண்ணினா சரியா இருக்கும்கறது என்னோட எண்ணம். ஆனா அப்படிப் பண்றதுக்கு முன்னால அரசாங்கம் எல்லாச் சாலைகள்லயும் நிச்சயமா ஒரு பெரிய குப்பைத் தொட்டி வைக்கணும். அப்படி்ல்லாம் ஒரு நல்ல ஆட்சி என்னோட பேரன், பேத்திகள் காலத்துலயாவது அமைஞ்சா சந்தோஷம்தான். ஹும்...!

மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "நான் வெறுக்கும் ஆண்கள்!"

18 August 2012

மகிழ்ச்சிக்கு மேல மகிழ்ச்சி!

டந்த ஒரு வாரமா என்னால வலைப் பக்கம் அதிகம் உலவ இயலாமல் போயிடுச்சு. ஆனா அடுத்தடுத்து ரெண்டு சந்தோஷ நிகழ்வுகள் என்னை மகிழ்ச்சியில துள்ளிக் குதிக்க வெச்சிடுச்சு. என் தங்கை போன்ற யுவராணி தமிழரசன் எனக்கு ‘ஸன்ஷைன் அவார்ட்’ கொடுத்திருக்காங்க.


தைப் பார்த்து சந்தோஷமா நன்றி சொல்லி, அந்த மகிழ்ச்சி அடங்குவதற்கு முன்னாலேயே நான் ரொம்ப மதிக்கற சிறுகதை மன்னர் வை.கோபாலகிருஷ்ணன் சார் எனக்கு ‘லீப்ஸ்டர்‘ அவார்டைக் கொடுத்து இன்னும் சந்தோஷக் கடல்ல ஆழ்த்திட்டாரு.


ந்த ரெண்டு விருதுகளையும் என்மேல இருக்கற அன்பால என்னோட பகிர்ந்துட்டிருக்கற இந்த உறவுகளுக்கு என் மனமார்ந்த நன்றி. இன்னும் பொறுப்பா நல்ல விஷயங்கள் நிறைய எழுதணும்கற உணர்வு மனசுக்குள்ள இப்ப பயமா வளர்ந்துட்டிருக்கு. எனக்கு விருது தந்த இவங்க ரெண்டு பேருக்காகவும் சத்குரு ஜக்கி வாசுதேவ் எழுதியதுல எனக்குப் பிடிச்ச இந்த விஷயத்தை இங்க பகிர்ந்துக்கறேன்.

                    மனதைக் கட்டுப்படுத்த வேண்டுமா?

ன் மனம் தேவையில்லாததை எல்லாம் நினைக்கிறது. என் மனதை நான் எப்படிக் கட்டுப்படுத்துவது? தியானம் பழக வேண்டுமென்றால் மனதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிறார்களே..?

முதலில் உங்கள் மனதை ஏன் கட்டுப்படுத்த முயற்சிக்கிறீர்கள்? கெட்ட விஷயங்களை நினைக்கக் கூடாது, மனதைக் கட்டுப்படுத்த பழக வேண்டும் என்றெல்லாம் ஆன்மீகவாதிகள் ‌என்று சொல்லப்படுபவர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள். ஆனால் அப்படி முயற்சிக்கும் போதெல்லாம் மனம் அந்த விஷயங்களைத்தான் முழு நேரமும் நினைக்க ஆரம்பிக்கும். உங்கள் மனதின் செயலைப் பொறுத்தவரையில் வகுத்தல், கழித்தல் எல்லாம் கிடையாது. அங்கே கூட்டல், பெருக்கல் மட்டும்தான். உங்கள் மனதிலிருந்து அதிரடியாக ஓர் எண்ணத்தையாவது உங்களால் நீக்க முடியுமா? முடியவே முடியாது. இல்லையா? ஏதாவது ஒன்றைக் குறித்து இன்று நினைக்கக் கூடாது என்று நீங்கள் முடிவு செய்தால் அன்று முழுவதும் அதைப் பற்றியேதான் நினைப்பீர்கள். மனதின் அடிப்படைத் தன்மைகளைப் புரிந்து கொள்ளாமல் இப்படித்தான் தவறாக முயறசித்துக் கொண்டு இருக்கிறோம்.

தியானம் செய்யும் போது என் இதயம் துடிப்பதை நிறுத்த வேண்டும் என்று எப்போதாவது எண்ணுகிறீர்களா? என் சிறுநீரகம் தன் செயலை நிறுத்த வேண்டும் என எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? கிடையாது. அவை தத்தம் செயலைத் தொடர்ந்து நடத்த அனுமதித்தீர்கள் தானே? பிறக மனமும் தனது வேலையைச் செய்ய நீங்கள் ஏன் அனுமதிக்கக் கூடாது? உங்களால் எப்போதும் மனதைக் கட்டுப்படுத்த முடியாது. இதுவரை யாராவது தன் மனதைக் கட்டுப்படத்தி இருக்கிறார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா? யாரும் அப்படிச் செய்ததில்லை. அப்படிச் செய்யவும் முடியாது.

இந்த மனம் ஒரு புழுவிலிருந்து, ஒரு பூச்சியிலிருந்து, ஒரு குரங்கிலிருந்து தற்போது மனிதன் வரை இத்தகைய பரிணாம வளர்ச்சி அடைய லட்சக்கணக்கான வருடங்கள் எடுத்திருக்கிறது. இவ்வளவு மகத்தான முயற்சிக்குப் பின் இத்தகைய மனம் .உங்களுக்குக் கிடைத்திருக்கும் போது அதைக் கட்டுப்படுத்த ஏன் முயற்சிக்கிறீர்கள்? அது முழுத் தீவிரத்துடன் இருக்க வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். ஆனால் அற்புதமாக இருக்க வேண்டிய மனம் தற்போது உங்களுக்குத் துன்பத்தை உற்பத்தி செய்கிற இயந்திரமாக மாறிவிட்டத.

உங்களின் எல்லாத் துன்பங்களும் உங்கள் மனதில்தானே உற்பத்தியாகின்றன? மனதை எப்படி இயக்குவது என்று உங்களுக்குத் தெரியாததால்தான் அங்கிருந்து துன்பங்கள் உற்பத்தியாகின்றன. இதே மனதை வைத்து ஆனந்தம் எப்படி உற்பத்தி செய்வது என்று தெரிந்து விட்டால் பிறகு மனதைக் கட்டுப்படுத்த எண்ணுவீர்களா? ஒருபோதும் மாட்டீர்கள்! எனவே உங்கள் மனதை எப்படிச் சரியாக இயக்க வேண்டும் என்பதைத்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

உங்கள் மனதைக் கட்டுப்படுத்தத் தேவை இல்லை. சில எளிமையான பயிற்சிகள் உள்ளன. அவற்றைக கடைப்பிடித்தால் உங்களுக்கும் உங்கள் மனதுக்கும் சிறிய இடைவெளி இருக்கும். அந்த இடைவெளியை நீங்கள் உருவாக்கி விட்டால் பிறகு உங்கள் துன்பங்கள் அனைத்தும் நிரந்தரமாக முடிவுக்கு வந்து விடும்.

மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "மகிழ்ச்சிக்கு மேல மகிழ்ச்சி!"

8 August 2012

நல்லதாய் நாலு விஷயம்!


‘‘சும்மா மொக்கைக் கதையா எழுதிட்டு இருக்காதடி, படிக்கறவங்களுக்கு பிரயோஜனப்படற மாதிரி நல்லதா நாலு விஷயம் சொல்லு. உருப்படியா இதுவரைக்கும் நீ என்னமாவது எழுதியிருக்கியாடி?’’ அப்படின்னு சும்மாச் சும்மா கிண்டல் பண்ணி எங்க அம்மா ரொம்ப வெறுப்பேத்தறாங்க மை லார்ட்! அதனால இநத சிங்கம் சிலுத்துக்கிட்டு சிங்கிளாக் கௌம்பிருச்சு...

 இந்தத் தடவை உங்களுக்கு நல்லதா நாலு விஷயம் சொல்லப் போறதா முடிவு பண்ணிட்டேன்... ‘ஹும்...! உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை’ன்னு யாரோ முனகறாங்க. என்னங்க பண்றது... ஆல் இஸ் Fate! நீங்க தப்பவே முடியாது.  ஆனா பாருங்க... எனக்குப் பிடிச்ச நெல்லிக்காய்தான் இதுலயும் ஹீரோயின்! நெல்லியைப் பத்திச் சொல்லப் போறா இந்த கில்லி! எப்பூடி...? ஹி... ஹி... ஹி...

                                                                      (1)

லையில முடி கொட்டுதேன்னு கவலையா உங்களுக்கு? இல்ல... நிரூ மாதிரி அடர்த்தியான தலைமுடி வேணும்னு ஆசைப்படறீங்களா? ரெண்டுக்கும் நான் வழி சொல்றேன். உங்களோட தலைக்குள்ள ஏராளமான எண்ணங்கள் தொடர்ச்‌சியா ஓடறதால தலை சூடாயிடறது இயல்பான விஷயமுங்க. (இந்த வம்புக்குத்தான் நான் எதையும் சிந்திக்கறது இல்லன்னு நீங்க சொன்னா, அதுக்கு நான் பொறுப்பில்ல) முடி கொட்டறதையும் நிறுத்தி, தலைக்கு குளிர்ச்சியையும் தந்து கூந்தலின் வளர்ச்சியைத் தூண்டி... இப்படி த்ரீ இன் ஒன் வேலைய நெல்லிக்காய் பண்ணுதுங்கற தகவலை நான் சொன்னா ஆச்சரியப்படுவீங்களா!

முடி கொட்டுதேன்னு கவலைப்பட்டுக்கிட்டு கூரையப் பாத்துட்டு உக்காந்துட்டு இருந்தீங்கன்னா.. அந்தக் கவலையாலேயே இன்னும் அதிகமா முடி கொட்டிப் போகுமுங்க. அதனால கவலைய விட்டுட்டு, நான் சொல்ற இந்த நெல்லிக்காய் தைலத்தை தயார் பண்ணி தலையில தேச்சுப் பாருங்க... ‘இதென்ன மாயாஜாலம்?’ன்னு ஆச்சரியப் படுவீங்க நிச்சயமா!

பச்சை நெல்லிக்காய், துளசி இலை, கொட்டை நீக்கிய முற்றிய கடுக்காய், கறிவேப்பிலை ஆகியவற்றை தலா 100 கிராம் எடுத்துக்கங்க. என்ன.. எடுத்துக்கிட்டாச்சா? இப்ப நாலையும் சேர்த்து கிரைண்டர்ல போட்டு / மிக்ஸில போட்டு நன்றாக அரையுங்க. அரைச்சதும் கிடைக்கற விழுதை மெல்லிய துணியில் மூட்டையாக் கட்டித் தொங்க விடுங்க. அதுக்கு நேர் கீழா ஒரு பாத்திரத்தை வையுங்க. அதுலருந்து துளித் துளியா சாறு சொட்டும். அந்தச் சாற்றைச் சேமிச்சு, அதோட அளவுக்கு மூன்று மடங்கு தேங்காய் எண்ணெயைக் கலந்து காய்ச்சுங்க. இந்தக் காய்ச்சி, ஆறிய எண்ணெயைத் தினமும் தலையில் தடவி தலைசீவினீங்கன்னா, முடி கொட்டறது நின்னு போறதோட மட்டுமில்லீங்க...அடர்த்தியா வளரவும் ஆரம்பிச்சுடும்.

                                                                        (2)

னிக்காலம் வந்துடுச்சுன்னா.... பெரும் கொடுமைங்க! சில பேருக்கு தலையில பனித் துளியைப் போல பொடுகுகள் வந்து இம்சையக் கொடுக்கும். இந்த இம்சையிலிருந்து விடுதலை கொடுத்து நிம்மதியைத் தருகிறது நான் சொல்ற இந்த நெல்லிக்காய் பேஸ்ட்:

வெந்தயப் பொடி - 1 ஸ்பூன், கடுக்காய் பொடி - அரை டீஸ்பூன், கடலை மாவு -  1 டீஸ்பூன்... இவ்வளவு தாங்க... எடுத்துக்கிட்டீங்களா? ரைட், இப்ப இந்த மூணையம் கலக்கற அளவுக்கு கொஞ்சம் எலுமிச்ச்பழச் சாறு, அந்தச் சாறோட அளவுக்கு நெல்லிக்காய் சாறு சேர்த்து பேஸ்ட் ஆக்குங்க. இந்த பேஸ்ட்டை தயார் பண்ணினதும், தலைக்கு இதை ‘பேக்’ ஆகப் போட்டு 10 நிமிஷம் கழிச்சு தண்ணி விட்டு அலசுங்க. இப்படி ரெண்டு, மூணு தரம் செஞ்சு பாருங்களேன்... ‘நோ பொடுகு! இட்ஸ் கான்! போயே போச்சு! போயிந்தி!’ம்பீங்க.

இந்த பேஸ்ட்ல இருக்கற மூலப் பொருட்கள்ல வெந்தயம், கடுக்காய், கடலை மாவு மூணும் தலையை சுத்தப்படுத்தி செதிள்களை நீக்கற சக்தி கொண்டவைங்க. நெல்லிக்காய் தலைமுடியின் நுனிப் பிளவை நீக்கி முடியை கருகருன்னு வெச்சுக்கற சக்தி கொண்டதுங்க. எலுமிச்சைச் சாறுக்கு தலையில அரிப்பு எதுவும் வராம தடுக்கற சக்தி இருக்கு. அதனால இந்த பேஸ்ட்டை உபயோகிச்சா அனாவசியமா தலையச் சொறிய மாட்டீங்க. (அம்மாகிட்ட பணம் கேட்டு தலையச் சொறியறது இந்தக் கணக்குல வராது, சொல்லிப்புட்டேன்)

                                                                         (3)

நிறையப் பேருக்கு பெரிய பிரச்சனையா இருக்கறது இளநரைங்கற விஷயமங்க. தலைக்கு டை அடிச்சாலோ, அதுனாலயே பக்கவிளைவுகள் வேற வரலாம். இதுக்கும் கூட நெல்லிக்காய் ஒரு கை கண்ட மருந்தா இருக்குதுங்க. என்னது... எப்படின்னா கேக்கறீங்க?

மருதாணி இலை - 1 கப், கொட்டை நீக்கின பெரிய நெல்லிக்காய் - 5, முழு சீயக்காய் - 4, சுத்தம் செஞ்ச புங்கங்கொட்டை - 1 இதெல்லாத்தையும் நைட் ஃபுல்லா தண்ணியில ஊறப் போடுங்க. அடுத்த நாள் இதையெல்லாம் அரைச்சு விழுதாப் பண்ணிக்குங்க. இந்த விழுதை தலைக்கு ‘பேக்’ ஆகப் போட்டு, 10 நிமிஷம் கழிச்சு அலசுங்க. வாரத்துக்கு ஒரு முறை இந்த மாதிரி குளியல் போட்டீங்கன்னா... இளநரைமுடி அத்தனையும் நல்லா கருகருன்னு ஆயிடும். அப்புறம் இளநரைன்ற பேச்சையே உங்க தலைமுடி எடுக்காதுங்க.

                                                                         (4)

ங்களுக்குப் பல் துலக்கற பழக்கம் உண்டுதானே...! நோ.. நோ... இதுக்கெல்லாம் கைய ஓங்கக் கூடாது. ஒத்துக்கறேன்... நீங்க ஒழுங்கா பல் துலக்கறவங்கதான்! சில பேருக்கு என்ன காரணத்தினாலேயோ பற்கள்ல காவி ஏறி, சிரிச்சாங்கன்னா மத்தவங்க பயப்படற மாதிரி இருக்கும் பற்கள். அதுனாலேயே உம்மணாமூஞ்சியா சிரிக்காம இருப்பாங்க. அவங்களை சிரிக்க வெக்கற சக்தி நம்ம நெல்லிக்காய்க்கு உண்டுங்கறேன்...

கடுக்காய் தோல், ‌தான்தோன்றிக்காய் (நாட்டு மருந்துக் கடைகள்ல கேட்டா கிடைக்குமுங்க), நெல்லிக்காய் மூணு ஐட்டத்தையும் சம அளவுக்கு எடுத்துக்கங்க. இதுங்களை வெய்யில்ல நல்லாக் காய வையுங்க. அப்புறம் நல்லா அரைச்சு, பொடியாக்கி வெச்சுக்கங்க. -இந்த பல்பொடியை உபயோகிச்சுப் பல் தேய்ச்சு வந்தீங்கன்னா... ‘முத்துப் போல பற்கள்’ன்னு சொல்லுவாங்களே... அந்த மாதிரி பளீர் வெண்மையில பற்கள் பிரகாசிக்குமுங்க. அப்புறமென்ன... ஒரே ஹி... ஹி... தான்!

எழுத்தாக்கம் : நிரூ,
ஆதாரம் : ஹெல்த் & பியூட்டி மாத இதழ், மே 2012.

மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "நல்லதாய் நாலு விஷயம்!"

4 August 2012

நான்... கொசு!


டென்னிஸ்‌ பேட் போலிருந்த அதை காற்றில் ஒரு வீசு வீசினாள் அவள். பட் பட் என்ற சத்தம் கேட்டதும் பூரிப்பாய்த் தன் கணவனைத் திரும்பிப் பார்த்தாள். ‘‘எப்பூடி?’’

‘‘ஆமா... நீ பெரிய சானியா மிர்ஸா! சர்வீஸ் போட்டு கேமை ஜெயிச்சுட்டே. ஏண்டி... கொசுவை அடிக்கற பேட்டை வெச்சுட்டு இத்தனை அமர்க்களம்?’’ என்றார் அவர்.

“அமர்க்களமா..? ஈ தொல்லை அதிகமா இருக்குன்னு மருந்தடிச்சுப் பாத்தேன். கொஞ்சம் தான் போச்சு. கொசுவையாவது அழிச்சுடலாம்னு பாக்கறேன்...”

“நான் ஈ பாத்தப்பறம் எல்லா ஈயும் ஹெல்மட் போட்டுக்க பழகிடுச்சுடி. அதான் அழிக்க முடியலை...” என்று சொல்லி ஈயென்று சிரித்தார் அவர்.

“அப்படிச் சிரிக்காதீங்க பயமா இருக்குது...” என்றதும் வாயை மூடினார். “நான் கடைவரைக்கும போய்ட்டு வர்றேன்...” என்றார்.

‘‘என்னது...? வடையா? நேத்துதானே பண்ணிக் குடுத்தேன். மறுபடி கேட்டா என்ன அர்த்தம்ங்கறேன்?’’ என்று அவள் அலறினாள். ‘‘கஷ்டம்டா சாமி...’’ என்று தலையில் அடித்துக் கொண்டு சத்தமாகப் பேசினார். ‘‘கடைக்குப் போயிட்டு வர்றேன்னு சொன்னேன்டி ச.தி.சுந்தரி’’

‘‘கடைக்கா..? அதை தெளிவா சொல்றதுக்கென்ன... இப்படி என் பேரைச் சுருக்காதீங்கன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?’’

‘‘நாசமாப் போச்சு. ‌சவுந்தர்யலட்சுமி திரிபுரசுந்தரின்னு உன் பேரை முழுசாச் சொல்லி முடிக்கறதுக்குள்ள அரை நாளாயிடும்...’’

‘‘இங்க மட்டும் என்ன வாழுதாம்..? சீனிவாச சுந்தரவரத நரசிம்மன்னு உங்க பேரை யாராவது முழுசாச் சொல்லியிருக்காங்களா? கோபக்காரர்ங்கறதால சிம்மம்னுதானே கூப்பிடறாங்க?’’

‘‘சரி... சரி... ’’ என்றார் அவர். ‘‘அன்னிக்கு பாங்க்ல அக்கவுண்ட் ஓபன் பண்ண ஃபார்ம் குடுத்தான். நான் திருமதின்னு போட்டு என் பேரோட உங்க பேரைச் சேர்த்து எழுதறதுக்கு எக்ஸ்ட்ரா ஷீட் கேக்க வேண்டியதாப் போ்ச்சு... சிரிக்கறான் அந்த ஆளு...’’

‘‘விடுடி! நான் ‌‌போயிட்டு அரை மணி நேரத்துல வர்றேன்... எக்ஸிபிஷன் போகணும்னியே... பசங்களை ரெடி பண்ணி வை..,’’ என்று சத்தமாகப் பேசிய (கத்திய?) வரின் மூக்கில் மோதிக் கீழே விழுந்தது அந்தப் ப்ளையிங் டிஸ்க். தொடர்ந்து ‘ஓ’வென்ற கூச்சலுடன் ஓடிவந்தன அவர் பெற்ற ஆறு செல்வங்களும்! ‘‘சனியன்களா... வீட்டுக்குள்ளயா விளையாடறது? ரோட்டுக்குப் போங்க...’’ என்று பெயருக்கேற்றபடி அவர் கத்த (கர்ஜிக்க?) கண்ணை மூடிக் கொண்டு ஓடிவிட்டன அத்தனையும்!

‘‘இன்னுமா ரெடியாகலை? அலங்காரம் பண்ண இவ்வளவு நேரம? எப்ப எக்ஸிபிஷன் போயிட்டு எப்ப வர்றது?’’ என்று சிம்மம் கத்திக் கொண்டிருந்தார். ‘‘அடாடாடா... எல்லாத்துலயும் கஞ்சியக் கால்ல கொட்டிண்ட மாதிரி அவசரம் உங்களுக்கு. போய் கார்ல உக்காருங்க. பசங்களைக் கூட்டிட்டு வர்றேன்...’’ என்று அவள் பதிலுக்குக் கத்த, அவர் போகும்போது எதிரே வந்தாள் வேலைககாரி அமிர்தவல்லி. (ஏன் வேலைக்காரின்னா, முனியம்மா, முனீஸ்வரின்னுதான் பேர் வெக்கணுமா?).

‘‘ஏம்மா... பைய நான் வீட்டுக்கு எடுத்துட்டுப் போகட்டுமா?’’ என்று அவள் கேட்க, அசுவாரஸ்யமாகத் தலையசைத்தபடி, ‘‘பசங்களா கிளம்புங்க. அப்பா கத்தறார் பாருங்க...’’ என்றாள் சுந்தரி. ‘‘ஓ’’வென்ற உற்சாகக் கூச்சலுடன் வாண்டுகள் வாசலுக்கு ஓட, அவளும் தொடர்ந்தாள்.

க்ஸிபிஷனில் ஸ்டால் ஸ்டாகப் புகுந்து நிறையப் பைகளை வாங்கியபடி வரும்போது யதேச்சையாகக் கவனித்த சிம்மம் சொன்னார்- ‘‘சுந்தரி... ஏதோ குறையறது போலருக்கே... சரி பாரு...’’ என்று. ‘‘இல்லியே... சரியாத்தானே வெச்சிருக்கேன்...’’ என்று அவள் பைகளை எண்ணத் தொடங்க, கோபமாக தலையில் தட்டினார்: ‘‘அடியேய்... நான் சொன்னது இதில்லை. நாம பெத்த புத்திர சிகாமணிகளை! சரியா இருக்கான்னு எண்ணிப் பாக்கச் சொன்னேன்’’

ஒவ்வொன்றாகக் கவனித்த சுந்தரி அலறினாள். ‘‘என்னங்க... சின்னவனைக் காணோம்...’’

‘‘யாரு, அந்தக் குட்டிப் பிசாசா?’’

‘‘ஆமாங்க...’’

‘‘அடிப்பாவி! திங்க்ஸை வாங்கிக் குவிக்கறதுலயே குறியா இருந்தியே... குழந்தைகளைக் கொஞ்சமாவது கவனிக்க மாட்டியா?’’ என்று அவர் கத்த, ‘‘நான் மட்டுமா பெத்தேன்? பெத்த அப்பான்னு எதுக்கு இருக்கீங்க? நீங்க கவனிச்சிருக்கலாம்ல..?’’ என்று அவள் எகிற, மற்ற பிள்ளைகள் சுற்றி நின்று கூச்சலிட, ஒரே களேபரம். அவர்களைச் சுற்றி ஒரு கூட்டமே கூடிவிட, கூட்டத்தில் ஒருவர் தமிழ்நாட்டு மரபுப்படி இலவச ஆலோசனை சொன்னார்: ‘‘சார், எக்ஸிபிஷன் அனவுன்ஸ்மென்ட் ஸ்டால்ல போய் மைக்ல சொன்னீங்கன்னா... யாராவது பையனப் பாத்தாலும் கூட்டிட்டு வந்துடுவாங்க...’’ என்று.

இவர்கள் அனவுன்ஸ்மெண்ட் ஸ்டாலுக்குச் சென்ற சில நிமிடங்களில் ஒலிபெருக்கி அலறியது. ‘‘நீல டிராயரும், நீல கட்டம்போட்ட சட்டையும் அணிந்த ஏழு வயது குட்டிப் பிசாசு எங்கிருந்தாலும் ஸ்டாலுக்கு வரவும். அப்பாப் பிசாசு... மன்னிக்கவும், அப்பா இங்கே காத்திருக்கிறார்...’’ என்றது.

‘‘ஐயோ... ஐயோ...’’ என்று தலையிலடித்துக் கொண்டாள் சுந்தரி. ‘‘ஏன்னா... கிரிதர ராஜகோபாலன்னு அவனுக்கு வெச்ச பேர்ல வீட்லதான் கூப்பிட மாட்டீங்க. இங்கயாவது அப்படிச் சொல்லியிருக்கலாம்ல? அதென்ன குட்டிப்பிசாசு?’’

‘‘குட்டிப் பிசாசுன்னு கூப்பிட்டே பழகிடுச்சா? அவனுக்கு வெச்ச பேர் மறந்து போய்டுத்துடி. ஹி... ஹி...’’ என்று பெரிதாக இளித்து அசடு வழிந்தது சிம்மம்.

அறிவிப்பு செய்து இரண்டு மணி நேரத்துக்கு மேல் காத்திருந்தும் பையன் கிடைப்பதாக இல்லை. போலீசில் புகார் செய்து விட்டு நொந்து நூலாகி வீடு திரும்பும் போது இரவு மணி எட்டரையாகி விட்டது.

வாசலிலேயே தோளில் தூங்கிக் கொண்டிருந்த ‘குட்டிப் பிசாசு’டன் காத்திருந்தாள் அமிர்தவல்லி.

“ஏம்மா... எக்ஸிபிஷன் போய்ட்டுவர இம்மா நேரமா? பாவம் புள்ள... பசின்னு கேட்டுது. சாப்பாடு தந்ததும் தூங்கிடுச்சு பாரு...” என்று அவள் முறையிட. குழந்தையை வாங்கிக் கொஞ்சிய சுந்தரி. அவளிடம் கோபமாகக் கேட்டாள். “உன்கிட்ட எப்படிடி குழந்தை வந்துச்சு... நீயும் எக்ஸிபிஷன் வந்தியா?”

“சரியாப் போச்சு... என்கூட என் வீட்டுக்கு வரேங்கறான். பையனை கூட்டிட்டு போகட்டான்னு கேட்டப்ப நீங்கதானே சரின்னீங்க?” என்று அவள் சொல்ல. “பையன்னா கேட்டே? பைய எடுத்துட்டு போகவான்னு கேட்டேன்னு நினைச்சுல்ல சரின்னுட்டேன்...” என்று அசடு வழிந்தாள் சுந்தரி. கைகளால் தலையில் மடேர் மடேரென்று அடித்துக்  கொண்டது சிம்மம்.

மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "நான்... கொசு!"

27 July 2012

உங்களுக்கு பிளட்பிரஷர் இருக்கா?

ன்மீகம் பற்றிய என் கருத்துக்களை நான் சென்ற பதிவில் வெளியிட்டது என் நண்பர்களில் பலருக்கு கோபத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியிருப்பதை உணர முடிந்தது. அதில் இருந்த தவறுகளை பொருட்படுத்தாமல் கருத்திட்ட அனைவருக்கும் என் நன்றி! நண்பர்களின் கருத்துக்களிலிருந்து நான் கற்றுக் கொண்டதும் தெளிவடைந்ததும் பற்றி தனியாகப் பதிவே எழுதுகிறேன். அதனால் கோபமும் வருத்தமும் அடைந்த அனைவருக்கும்.... ஸாரி! வெரிவெரி ஸாரி! கருத்துக்கள் மாறுபட்டாலும் வார்த்தைகளைக் கையாள்வதில் கவனம் வேண்டும் என்பது நான் கற்ற பாடம். (நீரூ... டைரியத் தூக்கிக் கடாசுடி லூசு!). அடுத்து ஒரு அதிபயங்கர மொக்கையோட வர்றேன்.... இப்ப இங்க உங்களுக்கு உபயோகமான ஒரு மேட்டர் தர்றேன்!

                           ரத்த அழுத்தத்தை விரட்டும் வழி

ம் உடலில் உள்ள சின்னச் சின்ன குறைபாடுகளை கண்டுகொள்ளாமல் விடும்போது அது பெரிய ஆபத்துகளை உருவாக்குகிறது. அந்த வகையில் மிகவும் ஆபத்தானது ரத்த அழுத்தம். சாதாரண விஷயம் போல தோன்றினாலும் இதை கட்டுக்குள் வைக்காவிட்டால் இதயம், மூளை, சிறுநீரகம் மற்றும் கண்கள் என முக்கிய உறுப்புகள் பாதிக்க வாய்ப்புள்ளது என்கிறார் மருத்துவ நிபுணர் குமரன் அப்புசாமி. ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் 40 வயதுக்கு மேல்தான் வரும் என்று சொன்னது அந்தக் காலம். இப்போது 25 வயதிலேயே ஹார்ட் அட்டாக் பயமுறுத்தத் தொடங்கிவிட்டது. இதற்கு அடிப்படை காரணம் ரத்த அழுத்தப் பிரச்னை.

ரத்த அழுத்தத்தை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் விடும்போது இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய் சுருங்கி மாரடைப்பு உண்டாகிறது. மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய் சுருங்கி மூளைக்கு போகும் ரத்தம் குறைந்தால் பக்கவாதம் ஏற்படுகிறது. மேலும் மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் வெடித்து மரணம் ஏற்படும் ஆபத்தும் உள்ளது. ரத்த அழுத்தம் அளவுக்கு அதிகமாக உயர்வது, குறைவது இரண்டுமே பிரச்னைதான். வழக்கமாக மாரடைப்புக்கு பிறகு இதயம் ரத்தத்தை பம்பிங் செய்வது குறையும். அப்போது ரத்த அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது. இதயம் வீங்கும் பட்சத்திலும் குறைந்த ரத்த அழுத்தம் வரலாம்.

குறைந்த ரத்த அழுத்தத்தால் அடிக்கடி மயக்கம் ஏற்படலாம். அட்ரீனல் சுரப்பி எனப்படும் ஹார்மோன் சுரப்பியில் டியூமர் வரலாம். இதனாலும் ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இயல்பாகவே அதிகளவு டென்ஷன், கோபம் உள்ளவர்களுக்கு ரத்த அழுத்தப் பிரச்னை தோன்றும். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு கிட்னி கெட்டுப் போகவும் வாய்ப்புள்ளது. சிறு வயதில் உடலை வருத்தி வேலை செய்யாமல் இருப்பது, அளவுக்கு அதிகமாக அசைவ உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடலில் சேரும் கொழுப்பு, தவறான உணவு முறை, அடிக்கடி குளிர்பானங்களை உட்கொள்வதால் ரத்தத்தில் அதிகரிக்கும் உப்பின் அளவு, மது மற்றும் போதைப் பழக்கங்கள், அதிக உடல் எடை போன்ற காரணங்களால் சிறு வயதிலேயே ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. ரத்த அழுத்த அறிகுறி உள்ளவர்கள், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வதுடன் உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும்.

முதலில் உங்கள் உடல் எடை, உயரத்துக்கு ஏற்றதுதானா என்பதை சோதித்து சரி செய்யவும். தினமும் சில மணி நேரம் வாக்கிங் அல்லது ஏதாவது ஒரு உடற்பயிற்சியை கட்டாயம் செய்யவும். உணவில் நிறைய காய்கறிகள், பழ வகைகள் சேர்க்கவும். சாப்பாட்டில் உப்பு குறைவாக பயன்படுத்த வேண்டியது அவசியம். மருத்துவரின் ஆலோசனையுடன் அதிக உடல் எடையை குறைக்கவும். புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் அது ரத்தக் குழாயை சுருங்க செய்யும். உடனடியாக புகைபிடிக்கும் பழக்கத்தை விடவும். இதேபோல் மிகை ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மதுப்பழக்கத்தையும் விட வேண்டும். மதுவை விட முடியாதவர்கள் மதுவின் அளவை படிப்படியாக குறைத்துக் கொள்ளவும்.

ஓட்ஸ் ஒரு கப், மோர் 20 மி.லி. அரைப்பதற்கு இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் ஒரு கட்டு கொத்தமல்லி. இவற்றை எண்ணெயில் வதக்கி அரைத்து வைக்கவும். ஓட்ஸை தனியாக மிக்சியில் அரைத்து மோரில் கலந்து வைக்கவும். இத்துடன் அரைத்த கலவையை சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து தேவையான உப்பு சேர்த்து கலந்து வைத்துள்ள ஓட்ஸ் கலவையை சேர்த்து உப்புமா பதத்துக்கு கிளறி இறக்கவும். இதில் தேவையான அளவு நார்ச்சத்து உள்ளதால் எச்.டி.எல். எனப்படும் நல்ல கொழுப்பை அதிகரிக்கும்.

பத்து முருங்கைக்காய்களை வேக வைத்து, உள் பகுதி சதையை சேகரிக்கவும். கடலைப்பருப்பு இரண்டு கப் ஊற வைத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். முருங்கைக்காய் சதைப்பகுதியை அரைத்த மாவில் சேர்க்கவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சிறிதளவு, அரிசி மாவு 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு ஏற்ப சேர்த்து வடைக்கு தேவையான பதத்தில் பிசைந்து எண்ணெயில் பொறித்து எடுக்கவும். இதில் தேவையான இரும்புச் சத்து உள்ளதால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

காலி பிளவர் - 1 கப், பச்சை பட்டாணி - 1 கப், பீன்ஸ், கேரட் தேவையான அளவு, குடைமிளகாய் - ஒரு கப், பட்டை, கிராம்பு, சோம்பு, வரமிளகாய், கொத்தமல்லி, ஏலக்காய், சுக்கு சிறிதளவு ஆகியவற்றை நன்றாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்கறி வகைகளை பாதியளவு வெந்தபின் இன்னொரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கருவேப்பிலை, வெங்காயம் மற்றும் காய்கறிகள் சேர்த்து வதக்கவும். மசாலா பொருட்களையும் சேர்த்து வதக்கி மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். இதில் போதுமான அளவு நார்ச்சத்து இருப்பதால் உடலில் கெட்ட கொழுப்பு சேருவதை தடுக்கும்.

தவறான உணவு முறை காரணமாக உடலில் சேரும் கெட்ட கொழுப்பு, உடல் எடை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் சிறு வயதிலேயே ரத்த அழுத்தப் பிரச்னை தோன்றுகிறது. மன உளைச்சல், டென்ஷன் மற்றும் அதிகபட்ச கோபமும் ரத்த அழுத்த பிரச்னையை உருவாக்குகிறது. நீண்ட நாள் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் ரத்த அழுத்தம் வரலாம். இதன் தொடர்ச்சியாக மாரடைப்பு, பக்கவாதம்கூட ஏற்படக் கூடும். இதுபோன்ற பிரச்னைகளை துவக்கத்திலேயே தடுக்க அதிக உடல் எடையை குறைக்க வேண்டும். அதற்கு டயட்டில் கவனம் செலுத்தவும். உடலில் நல்ல கொழுப்பு சேருவதற்கான உணவுகளை கண்டறிந்து சேர்த்துக் கொள்ளவும்.

உப்பு அதிகமாக சேர்க்கப்படும் ஊறுகாய், வத்தல், வடகம் ஆகியவற்றை தவிர்க்கவும். உணவு தயாரிப்பில் பயன்படுத்தும் எண்ணெயின் அளவை குறைக்கவும். அசைவ உணவு அடிக்கடி எடுத்துக் கொள்வதை கட்டுப்படுத்தவும். எண்ணெயில் பொறித்த உணவுகளையும் தவிர்ப்பது அவசியம். பால் மற்றும் பால் பொருட்களின் அளவையும் குறைப்பது நல்லது. கீரை மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கெட்ட கொழுப்பு கரைந்து நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும். பழங்கள் நிறைய எடுத்துக் கொள்ளவும். பீசா, பர்கர் உள்ளிட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். தினமும் குறைந்தபட்சம் 1 மணி நேரம் வாக்கிங் அவசியம்.

மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "உங்களுக்கு பிளட்பிரஷர் இருக்கா?"

20 July 2012

ஆடிவெள்ளி - தொடர் பதிவு!


ன் மனசுல தோணற சில விஷயங்களை நான் மத்தவங்க கிட்ட ஷேர் பண்ணிக்கறது கிடையாது. அப்படி ஷேர் பண்ணிக்கிட்டா செமத்தியா திட்டு விழும்கறதால டைரில மட்டும் எழுதி வெச்சுக்கறது என் பழக்கம். தென்றல் சசிகலா அக்கா தன்னோட ‘ஆடிவெள்ளி’ங்கற பதிவுல என்னைத் தொடரச் சொன்னதும் என் டைரிப் பக்கம் ஒண்ணை ஷேர் பண்ணா சரியா இருக்குமனு தோணிச்சு. இங்க தரேன். கல் வீசறவங்க தாராளமா வீசலாம்....

நிரஞ்சனாவின் டைரியிலிருந்து...


பொதுவா நான் பெரிய பக்திமான், பக்திப்புலி எதுவும் கிடையாது. வெள்ளிக்கிழமை கோயில்களுக்குப் போகணும்னோ, விசேஷ நாட்கள்ல போகணும்னோ எந்தக் கட்டாயமும் வெச்சுக்கறதில்லை. அம்மாவோ இல்ல மத்த ரிலேஷன்ஸோ கூட வந்தாத்தான் போவேன். வீட்லயும் ஸ்லோகம் சொல்றது, சாமி கும்பிடறதுங்கற பழக்கம் அம்மாகிட்டத்தான் உண்டு. எனக்கு இல்லை. இதுக்காக அம்மாட்ட திட்டு வாங்கினதும் உண்டு. அவங்க மனசு கோணக் கூடாதுன்னுதான் அம்மாவோட கோயிலுக்குப் போறது வழக்கம். நானாப் போக மாட்டேன். இப்படிப்பட்ட எனக்கு இந்த ஆடி மாசத்துல மட்டும் ‘கடவுள் இல்லை, இல்லவே இல்லை’ன்னு கூச்சலிட்டுட்டு நாத்திகமா ஆயிடலாம்னுதான் தோணும்.

இன்னிக்குத் தேதியில தமிழ்நாட்டுல முக்கிய நகரங்கள்ல எல்லாம் நெருக்கம் நெருக்கமா வீடுகள் கட்டப்பட்டிருக்கு. ஏறக்குறைய ரெண்டு தெருக்களுக்கு ஒரு கோயில் (சின்னதோ, பெரிசோ) உண்டு. எல்லாத்துலயும் பெரிசா கூம்பு மைக் வெச்சு, அதிகாலையிலயே பாட்டைப் போட்ட அலற ஆரம்பிச்சுதுன்னா, மதியம் வரைக்கும் ஓயறதில்லை. ஒரு புத்தகத்தை எடுத்தா கான்சென்ட்ரேட் பண்ணிப் படிக்க முடியாது. இந்தப் பக்கம் தாத்தாவானா தூக்கம் கலைஞ்ச எரிச்சல்ல, எழுந்து புலம்பிட்டிருப்பாரு.

‘இந்த சனியன் பிடிச்ச கோயிலை இடிச்சுட்டு வந்தா என்ன’ன்னு எனக்கு கோபம் பொங்கும். ஆனா வாய்விட்டுச் சொல்ல முடியாது. ஒருமுறை சொன்னதுக்கு, ‘‘பொண்ணா லட்சணமாவா திங்க் பண்ற நீ? தீவிரவாதி ரேஞ்சுக்குப் பேசறியே... கொஞ்சமாவது பக்தி இருக்கா உனக்கு?’’ன்னு ஆரம்பிச்சு அரை மணி நேரம் அம்மா டோஸ் விட்டாங்க. நிஜமா எனக்குப் புரியலைங்க. திங்க் பண்றதுலகூட பெண்ணா இருந்து திங்க் பண்றது வேற, ஆணா இருந்து திங்க் பண்றது வேறயா? மூளைங்கற வஸ்து எல்லாருக்கும் ஒரே மாதிரிதானே வைக்கப்பட்டிருக்குது?

சரி... பேசவந்த விஷயத்துக்கு வர்றேன். ஏன் இந்துக் கோயில்கள்ல இவ்வளவு ஆர்ப்பாட்டங்கள், கொண்டாட்டங்கள்ங்கற விஷயம் எனக்கு எப்பவுமே புரியாத புதிர்தான். சர்ச்ல ஸ்பீக்கர் வெச்சு பாடினாலும், பேசினாலும் அந்த பில்டிங்கைத்தாண்டி ஓசை வராது. மசூதிகள்ல தொழுகைக்கு அழைக்க நேரம் மட்டும்தான் ஸ்பீக்கர் சத்தம் எழும். நம்ம இந்துக் கோயில்கள்லதான் இப்படி ஸ்பீக்கர் வெச்சுக் கத்தறதும், அமர்க்களம் பண்றதும். தவிர, திருவிழான்னா, சாமிய மேளம், வாத்தியம் முழங்க ஊர்வலமா எடுத்துட்டு வர்றதும், அது கிராஸ் பண்ற வரைக்கும், ட்ராபிக்கே ஸ்தம்பிக்க ‌வெக்கறதும் ஏன்? ஜீசஸ் சிலைய ஊர்வலமா எடுத்துட்டு வந்து பாத்திருக்கீங்களா நீங்க? இந்துக்கள் பெரும்பான்மையா இருக்கற தேசம்ங்கறதால இப்படியா? சாமியக் கும்பிடணும்னு விரும்பறவங்க கோயிலுக்குப் போய்க் கும்பிட்டுக்கட்டும். அது ஏங்க தெருவுக்கு வரணும்?

இதே ஆடி மாசத்துல இஸ்லாமியர்கள் பக்தி செலுத்த பட்டினி இருந்து, ஆறு வேளையும் தொழுது ரம்ஜான் விரதம் இருப்பாங்க நம்ம பயபுள்ளைங்க இந்த மாசத்துல ஆர்ப்பாட்டம் பண்ணி, ஏரியாவையே அலற வெச்சு தங்களோட பக்திய வெளிப்படுத்துவாங்க... கொஞ்சம் யோசிச்சுப் பாத்தா... பிள்ளையாருக்கு கொழுக்கட்டை பிடிக்கும்னும். கிருஷ்ணருக்கு வெண்ணை பிடிக்குமனும் சொல்லி அவங்க பேரைச் சொல்லி இவங்க சாப்பிடுவாங்க. ஏன் எந்தக் கடவுளுக்கும் கட்லெட். ப்ரைட் ரைஸ்லாம் பிடிக்காதா? கூழ்தான் பிடிக்குமா? ஏன்னா... கடவுள் தத்துவத்தை உருவாக்கின முன்னோர்கள் காலத்துல இந்த ஃபுட்லாம் இல்ல. அதனாலதான் கடவுள்கள் இதை சாப்பிடலை.

இது பத்தாதுன்னு ஒரு கும்பலே கைல ஒரு நோட்டை எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வீடு படையெடுத்துடுவாங்க- கோயில் திருவிழாவுக்கு வசூல் பண்றோம்னு. அந்தப் பணம்லாம் கோயிலுக்குப் போய்ச் சேருதோ... இல்ல ‘களவாணி’ படத்து விமல் குரூப் மாதிரி ‘நீராகாரம்’ சாப்பிடப் போய்த் தொலையுதோ... சம்பந்தப்பட்ட சாமிகளுக்கே வெளிச்சம்!

சின்னப் பிள்ளைங்க பொம்மைகளை வெச்சுக்கிட்டு, அதுங்களை சாப்பிட வெக்கறதாயும், சண்டை போட்டுக்கறதை சமாதானம் பண்றதாகவும் தனியா ஒரு பொம்மை உலகத்தை நிர்மாணிச்சுக்கிட்டு வாழும். எனக்கு கோயில்களைப் பாத்தா அப்படித்தான் பெரியவங்க நிர்மாணிச்சுட்டிருக்கற பொம்மை உலகமா தோணுது. குழந்தைங்களோட சின்ன சைஸ் பொம்மைகளுக்குப் பதிலா பெரிய சைஸ் விகரகங்கள். அதைக் குளிப்பாட்டறதும், தூங்க வெக்கறதும்...! ஒரு பக்கம் புராணங்கள்ல சாமி தூங்கவே தூங்காது தூங்கற மாதிரி நடிக்கும்னு பெருமையடிச்சுப்பாங்க. இன்னொரு பக்கம் ராத்திரியானா சாமியை சயன அறைல விடறதுக்கு ஒரு சம்பிரதாயம்!  நீங்க வேணும்னா தூங்கப் போங்கப்பா... அவங்களும் தூங்கியாகணுமா என்ன?

 ‘‘சாமிக்கு கோயில்ல சமையலறை (மடப்பள்ளி) கட்டிருயிருக்கீங்க. சாமி தூங்கறதுக்கு சயன அறைன்னு கட்டியிருக்கீங்க. சாமிக்கு ஒரு பாத்ரூம் கட்டினீங்களாடா? சாமிக்கு அதெல்லாம் போகணும்னா என்னடா பண்ணுவாரு...?’’ன்னு பெரியார் கேட்டது சரியான கேள்விதான். இதுக்கு பதில் யாரும் சொன்னதாத் தெரியலை. இறை நம்பிக்கைன்ற விஷயத்துல இப்படி எனக்குள்ள நிறைய கேள்விகள் இருக்கறதாலதான் நான் சாமி கும்பிடறதையும், கோயில்களுக்குப் போறதையும் அம்மாவோட விருப்பத்துக்காகத்தான் செஞ்சுட்டிருக்கேன்.

அதே சமயம் இன்னொண்ணையும் இங்க சொல்லி முடிக்கறேன். கடவுள் உருவங்கள்ல விநாயகரும் கிருஷ்ணனும் எனக்கு ரொம்பவே பிடித்தமானவை. கண்ணன் பத்தி பாரதியார் பாடின பாட்டுக்கள்லருந்து கோவை சரளா அக்கா எழுதின கவிதைகள் வரை அனைத்தையும் விரும்பி ரசிக்கறவ நான். நிரஞ்சனா ஒரு முரண்பாட்டு மூட்டை.

இந்த விஷயம் பத்தி தங்களோட கருத்துக்களைத் தொடர்ந்து சொல்ல நான் அழைக்கறவங்க... 1) தோழி அதிஸயா 2) நண்பர் சீனு  3) (விரும்பினால்) கோவை சரளா அக்கா.

மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "ஆடிவெள்ளி - தொடர் பதிவு!"

14 July 2012

புதிரான ‘மாஸ்’ சைகாலஜி!


நிரஞ்சனாவின் டைரியிலிருந்து...

கரத்தின் மத்தியில குறுக்கும் நெடுக்குமா விர்விர்ன்னு வாகனங்கள் பறந்துக்கிட்டிருக்கற ஒரு சாலை. அந்த பரபரப்பான சாலையில. ரோட்டோரமா தயங்கி நிக்கிறா நிரஞ்சனா. வாகனங்களுக்குக் குறுக்கே புகுந்து கடக்கறதுன்னா ஒரே பயமா இருக்குது நிரூவுக்கு. ஏதாவது வண்டி நிக்காமலோ, பிரேக் பிடிக்காமலோ இடிச்சு, நிறையப் பேர் மத்தியில கீழ விழுந்து அடிபட்டுடுச்சுன்னா என்ன பண்றதுன்னு மனசுல ஒரு உதறல் அவளுக்கு. டிராபிக் எப்படா குறையும்னு சுத்திமுத்தி பாத்துட்டிருக்கா. ‌சில நிமிஷங்கள்ல அவளைச் சுத்தி ஏழெட்டுப் பேர் அவளை மாதிரியே டிராபிக்கை கடக்கறதுக்காக நிக்கிறாங்க. இப்ப எல்லாரும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கிட்டு, கையைக் காட்டியபடி சாலையின் குறுக்கே போகறாங்க. நிரூவும் அவங்களோடவே ஓடிடறா. விரைஞ்சுட்டிருக்கற வாகனங்கல்லாம் அவங்க கடந்து போற வரைக்கும் நிக்கிதுங்க.

ல்லூரியில முதல் வருடத்தில் சேர்றதுக்காக வர்ற அந்தப் பொண்ணோட முகத்தில பயம் பரதநாட்டியம் ஆடிட்டிருக்கு. திருவிழாவுல காணாமப் போன குழந்தை மாதிரி சுத்திச் சுத்திப் பாத்தபடி மெதுவா தயங்கித் தயங்கி நடந்து வர்றா. அவளுக்கு எதிர்ல வந்து நிக்கறா ப்ரியா. ‘‘ஹாய், நான் ப்ரியா. இங்க தேர்ட் இயர் படிக்கிறேன். உன் பேர் என்னம்மா?’’ன்னு கேக்கறா. அவளோட அழகான புன்னகை முகத்தையும், இனிமையான குரலையும் பாத்ததும் அந்தப் பெண்ணுக்குத் தெம்பு வருது. அவ பேச ஆரம்பிக்கிறதுக்குள்ள ப்ரியாவோட க்ளாஸ் மேட்ஸ் அங்க வந்துடறாங்க. ‘‘ஏய்... ப்ரியா! ஃபர்ஸ்ட் இயர் பார்ட்டி ஒண்ணப் பிடிச்சுட்டியா?’’ன்னு குஷியாக் கேட்டுக்கிட்டே ராகிங் பண்ண ஆரம்பிக்கிறாங்க. ப்ரியாவும் வேற வழியில்லாம அவங்களோட சேர்ந்துக்கறா.

டைத்தெருவோட ஓரத்துல பெட்டிக் கடை வெச்சிருக்கான் மாரி. திடீர்னு ரோட்டுல ஒரு கும்பல் ஆவேசமா ஓடி வருது. ‘‘தலைவரு இறந்துட்டாராம். இங்க என்னடான்னா... கடையத் திறந்தாடா வெச்சிருக்கீங்க? மூடுங்க...’’ன்னு கத்திக்கிட்டு கைல கிடைச்ச கல்லு, கட்டை எல்லாத்தையும் திறந்துருக்கற கடைங்க மேல வீசுது. கார்களை மறிச்சு கண்ணாடியை ‌உடைக்கிது. மாரி பதறிப் போய் கடையை அடைக்கிறான். மனசுக்குள்ள ‘உன் தலைவன் செத்தா அவன் வீட்டுலதானடா இழவு. அதுக்கு என் பொழப்பை ஏண்டா பாவிகளா கெடுக்கறீங்க?’ன்னு கதறல். கூட்டத்துக்கிட்ட கேக்கவா முடியும்? கேட்டா உயிர் மிஞ்சாதேன்னு பயந்து ஓடிடறான் இடத்தை விட்டு.

ரு தனியார் தொலைக்காட்சி நடத்தற இசை நிகழ்ச்சி மேடை அது. காம்பயரிங் பண்ணற பொண்ணு வந்து நிக்கறா. பாடப் போறவங்களைப் பத்தி அறிவிக்கிறா. கூட்டம் சத்தம் போடுகிறது. ‘‘ஹலோ சென்னை... இவ்வளவுதானா உங்க சத்தம்...! உற்சாகமா குரல் கொடுங்க...’’ என்று அவள் கூற (கத்த?) கூட்டம் மொத்தமும் இப்போது அரங்கமே அதிர்ற அளவுக்கு, வீட்டில் டி.வி. பார்ப்பவர்களின் ஸ்பீக்கர்கள் கிழியற அளவுக்கு ‘ஓஓஓஓ’ன்னு கத்துது.

-இந்த மாதிரி சம்பவங்கள்ல பாக்கறப்ப ‘கூட்டம்’ அல்லது ‘குழு’வோட மனப்பான்மை என்னை ஆச்சரியப்பட வெக்குது. தனியா டிராபிக்கை க்ராஸ் பண்ண பயப்படற நிரஞ்சனா கூட்டத்தோட சேர்ந்ததும் தைரியமா க்ராஸ் பண்றா. ராகிங் பண்ணத் தயங்கற ப்ரியா கூட்டம் சேர்ந்ததும் தானும் கலந்துக்கறா. தனியா ஒரு ரவுடி வந்தா ஒரு கை பாக்கற தைரியமுள்ள மாரி, கூட்டத்துக்கு பயந்து ஓடிடறான். அமைதியா இசையை ரசிக்க வந்தவங்க கூட கூட்டமா கத்தறப்ப தாங்களும் குரல் கொடுக்க வேண்டியிருக்கு.

பிக்பாக்கெட் செஞ்ச ஒருத்தன் மாட்டிக்கிட்டா, அவனை ஒருத்தன் அடிச்சுக் கொன்னா அது கொலை, ஆனா ஒருத்தன் அடிக்க ஆரம்பிச்சதும் உடனே நாலஞ்சு பேரா சேந்து வீரத்தக் காட்ட ஆரம்பிச்சுடுவாங்க. கூட்டம் அடிக்கறதுல அவன் செத்துட்டா அது கொலையில்ல... தப்பிச்சுரலாம்.

இந்தக் குழு மனோபாவத்தை நான் என் குடும்பத்துலயே பாத்து ஆச்சரியப்பட்டிருக்கேன். ரொம்பக் Calmஆ இருக்கற எங்கப்பா நான் கிரிக்கெட் பாக்கும் போது விராட் கோலி அதிரடியா செஞ்சுரி போட்டாக்கூட கை தட்ட மாட்டார். அதுவே வீட்ல ஒரு விசேஷம்னு பாமிலி மெம்பர்ஸ் எல்லாரும் கூடியிருக்கற போது டிவியில கிரிக்கெட் மேட்ச் ஓடி, டோனி செஞ்சுரி போட்டதுக்கு எல்லாரும் கைதட்டி சத்தம் போட்டா, அப்பாவும் கை தட்டிச் சிரிக்கறதைப் பாத்து வியந்திருக்கேன்.

என்னோட இந்த கவனிப்பை ரொம்பத் தயக்கத்துக்கப்புறம் என் ஃப்ரெண்ட் உஷாகி்ட்ட பகிர்ந்துக்கிட்டேன் ஒரு நாள். அவ சொன்னா... ‘‘சி்ன்ன வயசுல என்னோட க்ளாஸ் மிஸ் சொல்லியிருக்காங்க. நீ ஒரு ரோட்டுல நின்னுக்கி்ட்டு, சுவத்தில வராட்டி த்ட்டியிருக்கறதையே உத்துப் பாத்துட்டு பத்து நிமிஷம் இரு. உன்னைச் சுத்தி நாலஞ்சு பேரு நின்னு அந்த மாதிரி பாக்க ஆரம்பிச்சுடுவாங்க. சத்தம் காட்டாம நீ அங்கருந்து நகந்துட்டாக் கூட அந்தக் கூட்டம் அங்கருந்து நகராதுன்னு சொல்லியிருக்காங்கடி. அதான் மாஸ் சைக்காலஜி’’ அவ ‌சொன்னது ரொம்பவே வியப்பா இருந்துச்சு எனக்கு. Is it true?

இந்த மாதிரி கூட்டம்னு ஒண்ணு சேரும் போது அதுல இருக்கறவங்களோட சொந்த அடையாளங்கள், முகங்கள், குணங்கள் மறைஞ்சு கூட்டத்துக்குன்னு தனியா ஒரு முரட்டுத்தனம் உண்டாயிடறது எனக்கு ஆச்சரியத்தைத் தர்றதா இருக்கு. கூட்டம் அப்படிங்கற விஷயத்துக்கு எத்தனையோ தலைகள் இருந்தாலும் மூளைங்கற ஒண்ணு மட்டும் இருக்கறதி்ல்லைன்னு எப்பவோ படிச்சதுதான் நினைவுக்கு வருது.

மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "புதிரான ‘மாஸ்’ சைகாலஜி!"

11 July 2012

கம கம கதம்பம் - 3


                        ஆஹா... பிரம்மச்சாரிகள்!

ரு காலத்துல ஃபேஷனா இருந்தது காணாமப் போய் மறுபடி இன்னொரு காலத்துல ஃபேஷனா உருமாறி வரும்னு கேள்விப்பட்டிருக்கேன். சில ட்ரெண்டுகளும் கூட அப்படி ஆகுமோ என்னமோ... தெரியலை. பழைய படங்கள்லயும் சரி, சினிமாக்கள்லயும் சரி ஒரு விஷயத்தை நான் கவனிச்சிருக்கேன்- ‘‘பேச்சிலர்க்கெல்லாம் வீடு கொடுக்கறதில்லப்பா. ஃபேமிலிக்குத் தான் நாங்க வீடு கொடுப்போம்’’ என்று ஹவுஸ் ஓனர்கள் சொல்வதாக வரும். அந்த நிலைமை இப்போது அப்படியே உல்டாவாகி விட்டிருக்கிறது. ‘‘ஃபேமிலிக்கெல்லாம் நாங்க வீடு தர்றதில்லை. பேச்சிலர்ஸ் வந்தாப் பரவாயில்லை’’ என்று ஹவுஸ் ஓனர்கள் அறிவிக்காத குறைதான்.

ஒரு குடும்பத் தலைவன் மூக்கால அழுதுக்கிட்டே ஆறாயிரம் ரூபா வாடகை தர்றான்னு வெச்சுக்கங்க. அதே நாலு பேச்சிலர்களைக் குடி வெச்சா, ஆளுக்கு ரெண்டாயிரம் போட்டு, எட்டாயிரம் தந்துடறாங்க. அதிக வாடகை தவிர, பேச்சிலர்ஸ் மோஸ்ட்லி சமையல் பண்றதில்லங்கறதால தண்ணி செலவும் குறைச்சல். இப்டில்லாம் கணக்குப் ‌போட்டு வீட்டு ஓனர்கள் இப்பல்லாம் அதிகமா பேச்சிலர்ஸ்க்கே வீடுதர ஆரம்பிச்சிட்டாங்க. இந்த ட்ரெண்ட் மாறுதா இல்லயான்னு பாத்துட்டு என் 50வது வயசுல ஒரு பதிவு போட்டுடறேன். தவறாம அப்பவும் வந்து கமெண்ட் போட்றணும் எல்லாரும். ஓ.கே.வா? (நான் இருக்கற ஏரியாவுல கவனிச்சுப் பாத்ததை வெச்சுத்தான் இந்த மேட்டர் எழுதியிருக்கேன். உங்க ஏரியாவுல அப்படி இல்லன்னா சந்தோஷம்தான்)

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

                சோம பானம் தெரியுமா?

சோமம் என்றால் பச்சை இலை. இமயமலை அருகில் உள்ள சிறு மலைகளில் வளர்ந்து செழித்துக் கிடக்கிறது! சோமம் என்ற வார்த்தைக்கு போதை-ம்யக்கம் என்று பொருள். இந்த சோமச் செடியைக் கசக்கிப் பிழிந்து சாறெடுத்து புளிக்கச் செய்து வைத்துக் குடிப்பார்கள். இதுதான் ஆரம்ப காலத்து மது! அதனால் சோமபானம் என்று இந்த மதுவுக்குப் பெயர்! இதைக் குடித்து அரசர்களும் மந்திரிகளும் அந்தக் காலத்தில் ஆட்டம் போட்டார்கள். நாடும் நட்பும் இழந்து கஷ்டமும் பட்டார்கள். பகை வளர்த்து அடிக்கடி சண்டை இட்டும் கொண்டார்கள்.

இந்த சோமபானம் உடலுக்குத் தீங்கு தராதது! .உடல் பலத்தையும், நலனையும் பாதுகாக்க வல்லது. இதைப் பின்பற்றி கள் பானம் மனிதன் கண்டுபிடித்தான். இதுவும் உடல் பலம் அளித்தது. அளவோடு குடித்தால் ஆயுளும் தந்தது! இன்றைக்கு விஞ்ஞான யுகத்தில் கெமிக்கலில் மது தயாரித்து வேக மரணத்துக்கு வழி கண்டுபிடித்து விட்டான் மனிதன்! இந்த கெமிக்கல் மதுக்கள் இளமையை ஊஞ்சலாடச் செய்து- மரணத்தைக் கூடவே வைத்துக் கொள்ள உதவுகிறது.

      -எதேச்சையா கண்ல பட்ட ‘ஸ்ரீகாளி முரசு’ங்கற புத்தகத்துல இருந்த தகவல்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

         சங்கரன் பிள்ளையின் பேசும் நாய்

த்குரு ஜகி வாசுதேவ் சொல்லும் சங்கரன்பிள்ளை ஜோக்குகள் நிறையவே பிரபலம். அதிலிருந்து ஒன்று இங்கே .உங்களுக்காக:

பேசும் நாய் விற்கப்படும்’ என்று சங்கரன் பிள்ளை வீட்டு வாசலில் அறிவிப்புப் பலகை மாட்டப்பட்டிருந்தது. இதைப் பார்த்த ஒரு நாய்ப் பிரியர், ‘‘நாயைப் பார்க்கணும்’’ என்றார். ‘‘கொல்லைப் பக்கம் கட்டிப் போட்டிருக்கிறேன். போய்ப் பாரும்!’’ என்றார் சங்கரன் பிள்ளை.

வந்தவர் கொல்லைப் பக்கம் போய் நாயைப் பார்த்து, ‘‘நீ பேசுவியாமே’’ என்று கேட்டார்.

நாயும், ‘‘ஆமா... ஆமா... ’’ என்றது.

‘‘உன்னைப் பற்றிச் சொல்லேன்’’ என்றார் நாய்ப் பிரியர்.

‘‘சின்ன வயசிலயே என்னால் பேச முடியும்னு தெரிஞ்சுக்கிட்டேன். அரசாங்கத்துக்கு உதவ நினைச்சேன். அவங்க என்னை நாய் உளவுப் பிரிவில் சேர்த்துக்கிட்டாங்க. விமானத்தில் நாடு விட்டு நாடு அனுப்புவாங்க. உலகத்தின் பல தலைவர்களின் வீட்டு வாசலில் போய்க் காத்திருப்பேன். யாருமே நாயை உளவாளின்னு நினைக்க மாட்டாங்கல்ல... எட்டு வருஷம் இப்படி உலகம் முழுக்க சுத்தினேன். அப்புறம் ரொம்பக் களைபபாயிடுச்சு. அதனால விமான நிலையத்திலேயே சந்தேகப்படுற மாதிரி ஆளுங்களை வேவு பார்த்து உதவி செஞ்சேன். பதக்கம்லாம் கொடுத்துக் கெளரவிச்சாங்க. அப்புறம் ஒரு பெண் நாயைக் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அப்புறம் நிறையக் குட்டிகள் போட்டோம். இப்ப நான் ரிட்டயர்ட் ஆகப் போ்றேன்’’ என்றது.

வந்தவர் வியப்பில் ஆழ்ந்தார். எப்பேர்ப்பட்ட திறமையான நாய் இது என ஆச்சரியப்பட்டார். உடனே அதை வாங்க முடிவு பண்ணி சங்கரன் பிள்ளையிடம் விலை கேட்டார். அவர், ‘‘250 ரூபாய்’’ என்று சொல்ல, ‘‘அப்படியா? 250 ரூபாய்தானா? ஏன் இவ்வளவு மலிவான விலை?’’ எனக் கேட்டார்.

‘‘ஏன்னா, இது நிறையப் பொய் பேசும்’’ என்றார் சங்கரன் பிள்ளை.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

    நெல்லி சாப்பிடுங்கோ ஃப்ரெண்ட்ஸ்!

வீட்டில் நெல்லி மரம் வளர்ப்பது மிகுந்த நன்மை தரும். பெருமாளுக்கு நெல்லி இலையால் அர்ச்சனை செய்யலாம். அவருக்குப் பிடித்தமான நைவேத்தியம் நெல்லிக் கனி. வீட்டின் வாசலில் நெல்லி மரம் இருந்தால் பில்லி, சூனியம் ஆகியவை நெருங்காது என்பது நம்பிக்கை. ஏகாதசியில் நெல்லிக் கனியை தண்ணீரில் போட்டு வைத்து, மறுநாள் துவாதசி அன்று எடுத்துச் சாப்பிட்டால் காசியில் குடியிருப்பதற்கு ஒப்பான பலன் கிடைக்கும். நெல்லி மரம் உள்ள வீட்டில் லட்சுமி தங்குவாள் என்பது ஐதீகம்.

-வேற வேற புத்தகங்கள்லருந்து நான் திரட்டின தகவல்கள் இது. எனக்குப் பிடிச்ச நெல்லிக் கனியைத் தரும் மரத்தை வீட்ல வளர்த்தா எவ்வளவு நல்லது பாருங்க... நெல்லிக்காயை வெச்சு சமையல்கூட பண்ணலாம்னு இந்தப் பதிவுல பார்த்துத் தான் தெரிஞ்சுக்கிட்டேன். நீஙகளும் நெல்லிக் கனியை.... வெயிட்... வெயிட்... ஓவரா நெல்லி புராணம் பாடற இவளை நெல்லியாலேயே அடிச்சா என்னன்னு யாரோட மைண்ட் வாய்ஸோ எனக்குக் கேக்குது. அடுத்த மேட்டருக்கு எஸ்கேப்...!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

           ஐயோ பாவம் முதியவர்கள்!

சில வயசானவங்க தங்களோட முதுமையை ஏத்துக்க மறுக்கறது ஏன்னே புரியலை உதாரணத்துக்கு எங்க பக்கத்து வீட்ல இருக்கற ஒரு பாட்டி. அவங்களை மகனும் மருமகளும் எந்தக் குறையும் சொல்லாம தாங்கறாங்க. ஆனா இவங்களுக்குள்ள ‘நமக்கு வயசாய்டுச்சே. முன்ன மாதிரி எந்த வேலையும் செய்ய முடியலையே‘ன்ற காம்ப்ளக்ஸ் இருக்கும போல... அதனால அவங்க சொல்லச் சொல்லக் கேக்காம எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுக்கிட்டு செய்வாங்க. அதனால ஏதாவது தப்பாகி திட்டும் வாங்கிப்பாங்க.

உதாரணத்துக்கு நேத்து மகனும் மருமகளும் கிளம்பிப் போனதும் தன் செல்லுக்கு ரீசார்ஜ் பண்றேன்னுட்டு கடைக்குப் போயி நம்பர் எழுதிக் குடுத்திருக்காங்க. வீட்டுக்கு வந்து அரை மணி நேரம் கழிச்சும் ரீசார்ஜ் ஆகலையேன்னு கடையில போய் கேட்டப்ப. கடைக்காரர் இவங்க எழுதின நம்பரைப் படிக்க, அப்பத்தான் தான் கடைசி நம்பரை 5க்கு பதிலா 3 எழுதிக் கொடுத்துட்டது புரிஞ்சது. அப்புறம் என்ன... அந்த நம்பருக்கு போன் பண்ணினா ஒரே ’ஸ்விட்ச் ஆஃப்’ மெஸேஜ்தான். கடைக்காரரும் கை விரிச்சுட்டாரு. சாயங்காலம் மகன் வந்ததும் 300 ரூபா நஷ்டமானதைச் சொல்லிப் புலம்ப... ‘என்ட்ட சொல்லிருந்தா நான் பண்ணியிருக்க மாட்டேனா’ன்னு மகன சத்தம் போட்டாரு. அந்தப் பாட்டியைப் பாக்கவே பாவமா இருந்துச்சு எனக்கு. முதுமைய ஏத்துக்கிட்டு இயல்பா அமைதியா இருக்க இந்த மாதிரி சில முதியவங்களால ஏன் முடியலைன்னுதான் தெரியலை.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

    ச்சும்மா... கொஞ்சம் ஹெல்த் டிப்ஸ்!

* கொதிக்கும் எண்ணெய் காலில் பட்டுப் புண்ணாகி விட்டதா..? பச்சை .உருளைக் கிழங்கை அரைத்துப் புண்ணின் மேல் வைத்துக் கட்டுங்கள். புண் ஆறி விடும்.

* உருளைக்கிழங்கு வாயுப் பொருளல்ல. குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு மிகத் தேவையானது. உருளைக் கிழங்கிலுள்ள புரதப் பொருள், தானியங்களிலுள்ள புரதப் பொருள்களை விடச் சிறந்தது. உருளைக் கிழங்கு மற்ற தானியங்களைவிட சுலபமாக ஜீரணமாகும். சோறை வைத்துக் கொண்டு உதவி காய்கறிகளை வைத்துக் கொள்வது போல உருளைக் கிழங்கை வைத்துக் கொண்டு உதவிக்கு காய்கறிகளை வைத்துக் கொள்ளலாமே! உருளைக் கிழங்கு மனிதன் உணவில் தவிர்க்க முடியாத பங்கினைப் பெற்றிருக்கிறது.

* பல் ஈறுகளில் வீக்கம் இருக்கிறதா? உப்புப் பொடியையும், மஞ்சள் பொடியையும் சம பாகமாகக் கலந்து பல் துலக்கிய பிறகு ஈறுகளில் வைத்துத் தேய்த்துவிட்டு வாயைக் கொப்புளித்துக் கொண்டு வந்தால் ஈறு சம்பந்தப்பட்ட தொல்லைகள் நீங்கி விடும்!

                                            -இந்தத் தகவல்களையெல்லாம் எனக்குச் சொன்னது
                                                                                       ‘கல்கண்டு’ புத்தகமுங்கோ!

மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "கம கம கதம்பம் - 3"

6 July 2012

உங்களுக்காக ஒரு குட்டிக் கதை!


                   மகிழ்ச்சிக்கு வழி...

“நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் அவன்.

“ என்ன காரணம்?” என்று கேட்டார் ஒரு பெரியவர்.

“மற்றவர்கள் எனக்குத் துன்பம் கொடுக்கிறார்கள்”

“உனக்குத் துன்பம் கொடுப்பது உன்னுடைய மனம்தான்”

“அப்படியா சொல்கிறீர்கள்?“

“ஆமாம்!”

“அப்படியானால் துன்பத்திலிருந்து விடுபட என்ன வழி?”

“மனதைப் புரிந்து கொள்... அது போதும்.”

“எப்படிப் புரிந்து கொள்வது?” என்றான் அவன்.

“இந்தக் கதையைக் கேள்“ என்று அவர் சொன்னார் - “ஆசையாக ஒரு பூனையை வளர்த்தார் ஒருவர். அந்தப் பூனை ஒருநாள் எலியைப் பிடித்து கவ்விக் கொண்டு வந்தது, அவருக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது.

மறுநாள் அந்தப் பூனை, அவர் ஆசையாக வளர்த்த ஒரு கிளியைக் கவ்கிக் கொண்டு வந்தது, அவருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது,

இன்னொரு நாள் அந்தப் பூனை எங்கேயோ சென்று காட்டிலேயிருந்து ஒரு குருவியைப் பிடித்துக் கவ்விக் கொண்டு வந்தது. இப்போது அவர் மகிழவுமில்லை; வருந்தவுமில்லை.

எதையாவது பிடிப்பது பூனையின் சுபாவம் என்பதைப் புரிந்து கொள்ள அவருக்குக் கொஞ்ச காலம் ஆயிற்று.

தனக்குப் பிடிக்காத எலியைப் பிடிக்கிறபோது இன்பம். தனக்குப் பிடித்தமான கிளியைப் பிடிக்கிறபோது துன்பம், தனக்குச் சம்பந்தமே இல்லாத குருவியைப் பிடிக்கிறபோது இன்பமுமில்லை... துன்பமுமில்லை...” -அவர் கதையை முடித்தார். இவன் சிந்திக்கத் தொடங்கினான்.

துன்பச் சிறையின் கதவுகள் திறக்கப்படுகிற ஓசை அவன் செவிகளில் விழுந்தது.

“மனதைப் புரிந்து கொள்கிறவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.”

-கதையும் கருத்தும் நல்லா இருக்கே. இவ்வளவு புத்திசாலியா நிரூன்னு ஆச்சரியப்படறீங்களா... இல்லிங்க... ‘உள்ளமே உலகம்’ங்கற புத்தகத்துல தென்கச்சி கோ.சுவாமிநாதன் எழுதியிருந்த இந்தக் கதை படிச்சதும் பிடிச்சது. ஷேர் பண்ணிக்கிட்டேன். உங்களுக்குப் பிடிச்சிருக்கா...?


மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "உங்களுக்காக ஒரு குட்டிக் கதை!"

4 July 2012

தோழி தந்த விருது!

லைப்பதிவுகளில் எழுத ஆரம்பித்த பின்னர் எனக்கு நிறைய நட்புகளும் உறவுகளும் கிடைச்சிருக்குங்கறதுல ரொம்ப ரொம்ப சந்‌தோஷம் எனக்கு. அந்த சந்தோஷத்தின் சதவீதம் இப்போ அதிகமாய்டுச்சு. நல்ல நல்ல சமையல் குறிப்புகளை காய்கறிகளின் மருத்துவ பயன்களுடன் அழகிய பதிவுகளாக எழுதிவரும் என் இனிய தோழி விஜி பார்த்தி தான் பெற்ற விருது ஒன்றை எனக்குக் கொடுத்திருக்காங்க.


 ‘என் உறவுகளுடன் பகிர்ந்து கொள்கிறேன்’ என்று சொல்லி விஜி தந்திருக்கும் இந்த விருதினால எனக்கு இரட்டிப்பு சந்தோஷம். ஏன்னா இதை நான் விரும்பும் ஐந்து பேருக்குக் கொடுக்கலாம்னு சொல்லியிருக்காங்க.. நான் என்னைவிட நல்லா எழுதற என்னுடைய உறவுகள் ஐவருக்கு இதைப் பகிர்ந்து கொடுக்க ஆசைப்படறேன்..

1) தன் அன்பினால் என்னை உருக வைத்தவர், நீண்ட இடைவெளி விட்டு பதிவுகள் எழுதினாலும் சுவாரஸ்யமாக ரசிக்கும்படி எழுதுபவர்-.

                         கலை அக்கா!  (கிராமத்துக் கருவாச்சி)

2) இவர் எழுதும் அழகுத் தமிழ்க் கவிதைகள் என்னை மயங்க வைக்கும். உரைநடையில் எழுதினாலோ மனதில் பிரமிப்பை ஏற்படுத்தும் இவரது எழுத்து-

                     கோவை மு.சரளாதேவி அக்கா! (பெண் என்னும் புதுமை)

3) நான் வலையுலகில் நுழைந்தது முதல் இன்று வரை என்னைத் தட்டிக் கொடுத்து என் எழுத்தை ஊக்கப்படுத்துபவர் இவர். Sweet Sister என்று நான் அன்போடு அழைப்பவர்-

                              ஸாதிகா அக்கா! (எல்லாப் புகழும் இறைவனுக்கே)

4) இவரின் கவிதைத் திறமும், ரசிப்புத் திறமும் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். நான் விரும்பிப் படிக்கும் தளங்களில் இவருடையதும் ஒன்று-

                                   மகேந்திரன் அண்ணா! (வசந்த மண்டபம்)

5) என் பதிவுகளில் இவர் கருத்துச் சொல்லியிருக்கிறாரா என்று ஆவலுடன் தேடுவேன். மற்ற தளங்களுக்குச் சென்றாலும் இவரது கருத்து இருக்கிறதா என்றுதான் முதலில் பார்ப்பேன். அவ்வளவு சரியாக, அழகாக கருத்துச் சொல்லி ஊக்குவிப்பவர் இவர்-

                                           செய்தாலி அண்ணா! (செய்தாலி)

இந்த ஐந்து பேரும் அன்போடு நான் தரும் விருதை ஏற்றுக் கொண்டு என்னைப் பெருமைப்படுத்தும்படி வேண்டிக்கறேன். எனக்கு விருது கொடுத்த என்னுயிர்த் தோழி விஜிக்கு ‘நன்றி’ன்னு சொன்னா... ரொம்பவே சம்பிரதாயமாக இருக்கும். நேர்ல இருந்தால் என் செய்கைகளினால அன்பைத் தெரிவித்திருப்பேன். தூரத்தில் இருப்பதால்... வேறு வழியில்லாமல்... My Heartful Thanks to VIJIMMA.

இதனை ஏற்று கொண்டவர்கள் பின்வரும் விதிமுறைகளை பின்பற்றவும்.
  1. விருதை வழங்குபவருக்கு நன்றி சொல்ல வேண்டும் 
  2. விருதை பெற்று கொண்டதன் அடையாளமாக அதன் சின்னத்தை உங்கள் பிளாக்கில்  பொறித்து கொள்ளலாம்
  3. உங்களுக்கு பிடித்த 5 பிளாகர்களுக்கு இந்த விருதை வழங்கலாம்
 எனக்கு விருது கொடுத்த விஜிக்காக நான் கேட்ட கதை ஒன்றை இங்கே டெடிகேட் செய்கிறேன்.

ரு தமிழன் துபாய் சென்றிருந்தபோது அங்கே நடக்கவிருந்த ஒட்டக ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ள பெயர் கொடுத்திருந்தான். அதற்காக ஒரு ஒட்டகத்தை வாடகைக்கு எடுக்க விரும்பினான். ஒட்டகத்தின் உரிமையாளர் சொன்ன தொகை மிக அதிகமாக இருந்ததால், ‘‘ஏன்ப்பா இவ்வளவு அநியாயமாக் கேக்கறே?’’ என்று கேட்டான். அதற்கு ஒட்டக உரிமையாளன், ‘‘‌என் ஒட்டகம் சாதாரணமானதில்லைங்க. மத்தவங்கல்லாம் ஒட்டகத்தை அடிச்சு ஓட்டுவாங்க. என் ஒட்டகத்தை நீங்க அடிச்சு ஓட்ட வேண்டாம். அது காதுகிட்ட குனிஞ்சு ‘அப்பாடா’ன்னு ஒரு வார்த்தை சொன்னா வேகமா ஓடும். இந்த வார்த்தையை சொல்லச் சொல்ல ஓட்டத்தோட வேகம் அதிகமாகும். அதே மாதிரி அதோட காதுல ‘கடவுளே’ன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டா ஓட்டத்தை நிறுத்திடும்’’ என்றான்.

தமிழன் மகிழ்ந்து போய் அவன் கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டு, ஒட்டகத்தை எடுத்துச் சென்றான். பந்தயம் துவங்கியதும் அதன் காதில் ‘அப்பாடா’ என்றான். வேகமாக ஓடியது. அதையே மீண்டும் மீண்டும் சொல்ல, வேகத்தின் அளவு கூடிக் கொண்‌டே போனது. அந்த சுவாரஸ்யத்தில் பந்தயப் பாதையை விட்டு ஒட்டகம் விலகி விட்டதை சற்று தாமதமாகத்தான் கவனித்தான். அதேசமயம் ஒட்டகம் ஒரு பெரிய மணல் மேட்டின் உச்சியை நோக்கி ஓடிக் கொண்டிருப்பதையும் கவனித்தான். பதட்டத்தில் அவனுக்கு நிறுத்தும் வார்த்தை மறந்து‌ போய்விட, அ‌தன் லகானைப் பிடித்து இழுத்து நிறுத்த முயன்றான். முடியவில்லை. என்னென்னவோ சொல்லி கத்திப் பார்ததான். நிற்கவில்லை அது.

இன்னும் நாலடியில் ஒட்டகம் கீழே விழுந்து விடும் நிலை. தன்னை மறந்தவனாய், ‘‘கடவுளே! நான் செத்தேன்!’’ என்றான். அடுத்த கணம்... கால்களை மணலில் ஊன்றி தேய்த்துக் கொண்டு ஒட்டகம் ஓட்டத்தை நிறுத்தி விட்டது. சரியாக சரிவுக்கு ஓரங்குலம் முன்னால் நின்றிருந்தது. கீழே விழுந்திருந்தால் தானும், ஒட்டகமும் இறந்திருப்போம் என்பதை உணர்ந்ததும், அவன் தன்னை மறந்து பெருமூச்சு விட்டு, ‘‘அப்பாடா! தப்பிச்சேன்’’ என்றான்.
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "தோழி தந்த விருது!"

25 June 2012

வாய் சொன்னதும். மனசுல வந்ததும்!


திரைப்படங்களில் ஆபாசமான காட்சிகளோ, ஆட்சேபத்திற்குரிய காட்சிகளோ வராமல் தடுப்பதற்கு சென்சார் ‌போர்ட் என்ற அமைப்பு இருக்கிறது. தொலைக்காட்சிகளுக்கும் அது மாதிரி சென்சார் போர்டு ஒன்றை ஏற்படுத்தினால் தேவலைன்னுதான் தோன்றுகிறது. சீரியல்களில் முன்னெல்லாம் ஒருத்தரை ஒருத்தர் அழிக்க நினைக்கும், குடும்பத்துக்குள்ளேயே கொலைகாரத் திட்டம் போடும் கேரக்டர்களை வைத்து கதை பண்ணிக் கொண்டிருந்தாங்க. இப்ப... டூயட், ஃபைட் சீனெல்லாம் வர ஆரம்பிச்சுடுச்சு. பத்தாக்குறைக்கு தண்ணியடிக்கிற மாதிரி, தம்மடிக்கிற மாதிரி சீன்கள்- இதுல கீழே இதெல்லாம் கெடுதல்ன்னு ஒரு ஸ்லைடு மட்டும் ‌கரெக்டா போட்டுடறாங்கப்பா.

இதுங்களாவது பரவாயில்லைங்க. இதைவிடக் கேவலமா இருக்குதுங்க விளம்பரப் படங்கள். ஒரு குறிப்பிட்ட கம்பெனியோட பாடி ஸ்ப்ரேவை ஒருத்தன் யூஸ் பண்ணினால், வேற கிரகத்துலருந்தும், எங்கயோ காட்டுப் பிரதேசத்துலருந்தும் எல்லாப் பெண்களும் (அதும் எல்லா சனியன்களும் மினி டிரஸ்தான் போட்டிருக்குமாம்) இவன் வீட்டுக்கு ஓடி வந்து இவன் முன்னால அசிங்கமா டான்ஸ ஆடிக் காட்டுமாம். என்ன ஒரு கேவலமான சிந்தனை! பெண்கள்ன்னா அவ்வளவு எளிதாப் போய்டுச்சா இவங்களுக்கு? சோப்பு, ஷேவிங் க்ரீம்லருந்து எல்லா விளம்பரங்கள்லயும் பெண்களை Misuse பண்றாங்க. இதுக்கெல்லாம் மகளிர் சென்சார்போர்டு ஒண்ணு அமைச்சு கன்ட்ரோல் பண்ணினா, இதெல்லாம் மாறிச்சுன்னா... ரொம்ப நல்லா இருக்கும். ஹும்...!

அதே மாதிரி சில விளம்பரங்களோட கான்செப்ட்படி யோசிச்சா விபரீதமா அர்த்தம் வருது. ‘காம்ப்ளான் சாப்பிடற குழந்தைங்க மத்த குழந்தைங்களை விட இருமடங்கு வளர்றாங்க’ன்னு விளம்பரம் சொல்லுது. அதன்படி பாத்தா, காம்ப்ளான் குடிக்காதவங்க ஐந்தடி உயரம் வளர்றாங்கன்னா, காம்ப்ளான் சாப்பிட்டவங்கல்லாம் 10 அடி உயரமாவா வளர்ந்திருக்காங்க? அப்படி யாரும் இதுவரைக்கும் கண்ணுல படலியேங்க... ஒரே கன்ப்யூஷன்ப்பா!

===========================================

ல சந்தர்ப்பங்கள்ல நாம மனசுக்குள்ள ஒரு எண்ணம் இருந்தாலும், வெளியில வேற ஒரு பதிலைச் சொல்ல வேண்டியிருக்கும். இதப் பத்தி யோசிச்சதுல தோணினது இது. ஒரு ஐ.டி. கம்பெனியில இன்டர்வியூ நடக்குது. அங்க ஹெச்.ஆர். கேக்கற கேள்விங்களுக்கு இன்டர்வியூவுக்கு வந்திருககற இளைஞன் பதில் சொல்றான். நான் பிராக்கெட்டுக்குள்ள கொடுத்திருக்கறது அவன் மனசுல ஓடற பதில்கள்.

கேள்வி : ஏன் எங்க கம்பெனிக்கு அப்ளை பண்ணினீங்க?

பதில் : உங்கள் நிறுவனம் இந்தத் துறையில் முன்னணி நிறுவனமாய் இருக்கறதால. (எல்லா கம்பெனிக்கும்தான் அப்ளை பண்ணேன். நீங்க ஒண்டிதான் கூப்ட்டீங்க)

கேள்வி: எங்கள் நிறுவனத்தில் ‌வேலை செய்ய ஏன் விரும்புகிறீர்கள்?

பதில் : இது சவாலான வேலை என்பதாலும், என்னை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்று நம்புவதாலும். (நான் எங்கய்யா விரும்பறேன்? வேலை தர்றேன்னு எவன் கூப்ட்டாலும் சேர்ந்துடுவேனே....)

கேள்வி: உங்களை நான் ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

பதில் : என்னிடம் உங்கள் நிறுவனத்தின் தேவைக்கேற்ற எல்லாத் தகுதிகளும் இருப்பதால். (எப்படியும் இந்த போஸ்டுக்கு யாரையாவது எடுக்கணு்ம். என்னை எடுத்துத் தொலைங்களேன்யா...)

கேள்வி : உங்கள் பலம் என்ன?

பதில் : சின்ஸியராய் உழைப்பது. (ஃபிகருங்களைக் கரெக்ட் பண்றதுதான்...)

கேள்வி : சமீபத்தில் நீங்கள் சந்தித்த சவால் என்ன? எப்படி சமாளித்தீர்கள்?

பதில் : பக்கத்து வீட்டு ஆன்ட்டிக்கு ஆபரேஷன் நடந்தப்ப நிறைய ப்ளட் தேவைப்பட்டது. அதுக்காக என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையம் பிடிச்சு, ப்ளட் பாங்குக்கு அலைஞ்சு ரத்தம் சேகரிச்சுத் தந்து அவங்க உயிரைக் காப்பாத்தினேன். (திடீர்னு கர்ள் ஃப்ரண்ட் போன் பண்ணி சினிமாவுக்கு டிக்கெட் புக் பண்ணுன்னுட்டா. கைல சுத்தமா காசில்ல. அந்த தியேட்டர்ல கரப்பான் பூச்சி இருக்குதுன்னு ‌சொல்லி, பீச்சுக்குத் தள்ளிட்டுப் போயிட்டேன். ஹி... ஹி...)

கேள்வி: உங்களுக்கு வேலை தந்தா என்ன எதிர்பார்ப்பீர்கள்?

பதில் : எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. கம்பெனிக்கு ஸின்ஸியரா நான் இருந்தா, தானே எல்லாம் கிடைச்சுடும். (லேட்டா வந்தா கண்டுக்காதீங்க. சீக்கிரம் புறப்பட்டாலும் கேக்காதீங்க. மாசம் ஒரு ஹைக் குடுத்தா சந்தோஷம். வீக் எண்ட் பார்ட்டிக்கு ஸ்பான்ஸர் பண்ணினா இன்னும் சந்தோஷம்)

கேள்வி : எங்கள் நிறுவனம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

பதில் : இந்தத் துறையில் நம்பர் ஒன் என்று தெரியும். (உங்க கம்பெனில 55 கேர்ள்ஸ் ‌வொர்க் பண்றாங்கன்றது தெரியும். கரெக்டா ஸார்?)

கேள்வி: உங்களுக்கு வேலை தராவிட்டால் என்ன செய்வீர்கள்?

பதில்: என்னிடம் ஏதோ குறையிருக்கிறது என்பதை உணர்ந்து இன்னும் என்னை தகுதியாக்கிக் கொள்ள முயல்வேன். (‌‌பின்ன உன் சட்டையப் பிடிச்சா உலுகக முடியும்? போய்யா......ன்னு நாலு கெட்ட வார்த்தை சொல்லித் திட்டிட்டுப் போயிட்டே இருக்க வேண்டியதுதான்!)

மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "வாய் சொன்னதும். மனசுல வந்ததும்!"

9 June 2012

கமகம கதம்பம்-2

டந்த ஒரு வாரமா ஒரு வி.ஐ.பி.யோட வருகையினால பெங்களூரு ரொம்பவே குளிர்ந்து போச்சு. அந்த வி.ஐ.பி.யோட பேரைச் சொல்லலாம்னா... தன்னடக்கம் தடுக்குது! ஆனா ஒண்ணுங்க.. (ஆனா ஒண்ணுதான். ஆவன்னாதான் ரெண்டுன்னு கவுண்டமணி மாதிரி யாரும் கடிக்கக் கூடாது) அங்கருக்குற க்ளைமேட்டுலருந்து சென்னைக்குள்ள வந்ததுமே ‘ஏன்தான் வந்தோமோ’ன்னு இங்கருக்கற வெயில் சலிச்சுக்க வெக்குது. இப்ப... நான் படிச்ச புத்தகங்களலருந்து ‘சுட்ட’ கதம்பச் செய்திகள் உங்களுக்காக...
  
                           ஐஸ்ஹவுஸின் வரலாறு

னிக்கட்டி ராஜா என்று புகழ் பெற்ற ‘பிரெடிரிக் ட்யூடர்’ என்னும் அமெரிக்கர் ஒரு சிறந்த வியாபாரி. 1783 லிருந்து 1864 வரை உலகின் பல பாகங்களுக்கும் ஐச் கட்டிகளை ஏற்றுமதி செய்தவர். நியூ இங்கிலாந்து பகுதியிலிருந்து உருவான ஐச்கட்டிகளைச் செங்கற்களைப் போல அடுக்கி அவை உருகாமலிருக்க மரத்தூள், தவிடு போன்றவை கொண்டு மூடி வைப்பார்.

இப்படி கப்பல் மூலம் கொண்டு வரும் டன் கணக்கான ஐஸ்கட்டிகளைப் பாதுகாக்க அவர் மதறாஸ், பம்பாய், கொல்கத்தா ஆகிய நகரங்களிலும் ஐஸ்ஹவுஸ்களைக் கட்டினார். அவற்றுள் சென்னையில் மட்டுமே அவர் கட்டிய ஐஸ்ஹவுஸ் இன்னும் பாரம்பரியமிக்க இடமாக இருக்கிறது.

1880-ல் ஐஸ் வியாபாரம் தொய்வு கண்டபின் பிலிகிரி ஐயங்கார் என்ற வழக்கறிஞர் அக்கட்டடத்தை வாங்கி, தம் நண்பரான நீதிபதி கெர்னனின் நினைவாக ‘கெர்னன் மாளிகை’ என்று பெயரிட்டார்.  பின்னர் அக்கட்டடத்தில் சில மாற்றங்களைச் செய்தார் என்றாலும் குடியிருப்பதற்குத் தகுந்த காற்றோற்றம் இல்லை.

வசதியற்ற, படிப்பில் பின் தங்கிய மாணவர்கள் தங்குமிடமாக அதை மாற்றி 1893ல் மேலும் திருத்தங்கள் பல செய்வதற்காக ரூ.7,000 கடன் வாங்கினார். ‘மைசூர் ஐயங்கார் அறக்கட்டளை’ என்ற பெயரில் ஒரு லட்சத்த்துக்கு மேல் நிதி திரட்டி சமுதாய நலப்பணிகளும் கல்விப் பணியும் செய்துவந்தார்.

சுவாமி விவேகானந்தரின் வருகைக்குப் பின்னரே ‘ஐஸ்ஹவுஸ்’ வரலாற்றுச் சிறப்பும், பாரம்பரிய மிக்கதொரு புண்ணிய பூமியாகவும் மாறி ராம கிருஷ்ண இயக்கத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்றது எனலாம்.

                                                                                           - ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்

                பிள்ளையாரை நீரில் ஏன் கரைக்கிறார்கள்?

`நித்ய பூஜை' செய்யாமல் விக்ரஹங்களை வைத்திருக்கக் கூடாது. மண்ணால் செய்யப்பட்ட விக்ரஹம் என்றால் அதை நீர்நிலையில் சேர்ப்பித்துவிட வேண்டும். அதுவும் ஊர்வலமாக எடுத்துச் சென்றுதான் நீர்நிலையில் சேர்க்கவேண்டும் என்று ஆகம சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே, விநாயகரை கடலில் கொண்டு சென்று கரைப்பது என்பது விநாயகருக்கு இழைக்கப்படும் கொடுமை அல்ல. ஆகம விதிகளின்படி செய்யும் பக்தி வழிபாட்டின் ஓர் அங்கமே. `விசர்ஜன ஊர்வலம்' என்பது வடநாட்டில் ரொம்பப் பிரசித்தி. பத்மபுராணத்தில் கதை ஒன்று உண்டு-

ஒரு சமயம் பார்வதிதேவி கங்கையில் நீராடியபோது தன் அழுக்கைத் திரட்டி பொம்மையாக்க, அது யானைத் தலையும் மனித உருக்கொண்டும் அமைந்தது. அதை அன்னை கங்கையில் எறிய, பேருருக் கொண்டு விநாயகர் வெளிப்பட்ட தாகவும், அப்போது பார்வதியும் கங்கையும் அவரை பிள்ளையாக ஏந்திக் கொண்டனராம். இக்காரணத்தால் பார்வதி, கங்கை இருவருமே அவருக்கு அன்னையராயினர். இதனாலேயே சதுர்த்தி முடிந்ததும் பிள்ளையாரைக் கங்கையில் கரைக்கும் வழக்கம் ஏற்பட்டதாம்.


                       வினாத்தாள் வாங்கியவுடன்
                       எழுதத் தொடங்குவது சரியா?

வினாத்தாளை வாங்கியவுடன் சிலர் பதில் எழுத ஆரம்பித்து விடுவார்கள். முழுவதுமாக எழுதி முடித்தவுடன் வினாவை  மறுபடியும் வாசித்தால் அவர்கள் எழுதிய பதிலுக்கும் கேட்ட வினாவுக்கும் சம்பந்தமில்லை என்பது தெரியும். வினாவின் தொடக்கத்தை மட்டுமே வாசித்து விட்டு எழுதியதால் வந்த வினை.

வினாத்தாளை முழுவதுமாக படியுங்கள். முதல் பத்து நிமிடங்கள் எந்த வினாவுக்கும் பதில் எழுதாமல் எல்லா வினாக்களையும் வாசித்து நன்றாகத் தெரிந்த பரிச்சயமான வினாக்களை தேர்ந்தெடுக்க வேண்டும். வினாக்களின் தன்மை, அவற்றுக்கு எந்த விதத்தில் எந்த முறையில் பதிலளிப்பது என்பதைத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.

பல மாணவர்கள் மிகவும் நன்றாக எழுதக்கூடிய விடையில் மட்டும் தேர்வின் பாதி நேரத்தை செலவழித்து விட்டு மற்ற வற்றிற்கு அரக்கப்பரக்க சுருக்கி விடையளித்து ஒரு சில வினாக்கள் விடுபட பரிதாபமாகத் தோல்வியைத் தழுவி யிருக்கிறார்கள்.

                                                                        -தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் 
                                                                          வழிகாட்டிப் புத்தகத்திலிருந்து...

                 எந்த உபாதைக்கும் கவலை வேண்டாம்!

லை சுற்றல்:  சுக்கு, மிளகு, திப்பிலி, விலாமிச்சை வேர், சீரகம் ஆகியவைகளை 5 கிராம் வீதம் பவுடராக்கி தினசரி காலை மாலை கரண்டி சாப்பிட தலை சுற்றல் குணமாகும்.

இருமல் குணமாக:  அரச மரத்துப் பட்டையைக் காய வைத்து வறுத்து கரியானவுடன் தூளாக்கி 1 டம்ளர் நீரில் 1 கரண்டி போட்டுக் கொதித்ததும் வடிகட்டி சர்க்கரை பால் சேர்த்துக் குடிக்க இருமல் குணமாகும்.

ஜலதோஷம்:  ஜலதோஷம் காய்ச்சல் தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்துப் பொடியாக்கி பனங்கல்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் ஜலதோஷம் பணால்.

சளிகட்டு நீங்க: தூதுவளை, ஆடாதோடா இலை, சங்கன் இலை, கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்துச் சாப்பிட இரைப்பு சளிகட்டு நீங்கும்.

தலைவலி, மூக்கடைப்பு நீங்க:  நெல்லிக்காயில் கொட்டையை நீக்கி 1/2 லிட்டர் சாறு எடுத்து அதில் அளவாக உப்பு சேர்த்து 3 நாள் வெயிலில் காய வைத்து பின் தேங்காய் எண்ணெயை கொதிக்க வைத்து அதில் நெல்லி சாறு கலந்து கொதிக்க வைத்துக் கொண்டு மூக்கில் நுகர தலைவலி மூக்கடைப்பு விலகும்.

நெஞ்சு சளி:  தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவ குணமாகும்.

                                              -எளிய சித்த மருத்துவக் குறிப்புகள் புத்தகத்திலிருந்து
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "கமகம கதம்பம்-2"

1 June 2012

நவீன நரகாசுர ஊர்வலங்கள்!


ரொம்ப நாளா என் மனசுல உறுத்திட்டிருக்கற விஷயத்தை இப்ப உங்ககூட பகிர்ந்துக்கப் போறேன். முந்தா நாளா நான் மைலாப்பூர்லருந்து தி.நகருக்கு பஸ்ல வந்துட்டிருந்தேன். அப்போ ரோட்ல எதிர்ல ஒரு சவ ஊர்வலம் கிராஸ் பண்ணிச்சு. நடுரோட்டில வெடிகளை வெடிச்சு, டிராஃபிக்கை ஸ்தம்பிக்க வெச்சுட்டு கிராஸ் பண்ணினாங்க. 

முன்னால ‘உற்‌சாகத்தோட’ ஆடிட்டு வந்த ரெண்டு பேரு மாலையில இருந்து பூக்களைப் பிச்சு சுத்திலும் எறிஞ்சுட்டே போனாங்க. அதில ஒரு பூ ஜன்னலோரம் உட்கார்ந்திருந்த என் மடில வந்து விழ... அருவெறுப்போட தூக்கி எறிஞ்சேன். அந்த சவ ஊர்வலம் கிராஸ் பண்ணி, ட்ராஃபிக் கிளியராகி பஸ் நகர்றதுக்குள்ள எனக்கு லேசா மயக்கமே வந்துடுச்சு.

பொதுவா... நம்மைச் சேர்ந்த சொந்தங்கள்ல ஒண்ணு பிரிஞ்சிடுச்சுன்னா... அது பெரிய வேதனை இல்லையா? அந்த நபரின் இறுதி ஊர்வலம் அமைதியாத்தா‌னே நடக்கணும்? புராண காலத்துல நரகாசுரன்னு ஒருத்தன் தான் இறந்த தினத்தை மக்கள் துக்கம் எதுவுமில்லாம பட்டாசு வெடிச்சு, ஸ்வீட் சாப்பிட்டு கொண்டாடணும்னு வரம் கேட்டானாம். அதான தீபாவளின்னு ஒரு விஷயம் கேள்விப்பட்டிருக்கேன்.

 இப்படி இறந்தவரோட சவ ஊர்வலத்துல வெடியெல்லாம் வெடிச்சு கொண்டாடிட்டுப் போனா, அவங்க இறப்பினால உறவினர்களுக்கு துக்கம் இல்லை... சாவைக் கொண்டாடறாங்கன்னுதானே அர்த்தம் ஆவுது? இறந்து போனவங்க நரகாசுரன் மாதிரி ஏதாவது அசுரர்களா என்ன?

இந்த என் ஆதங் கத்தை எங்கம்மா கிட்ட (வழக்கம்போல) ஷேர் பண்ணிக் கிட்டப்ப ஒரு விஷ யம் சொன்னாங்க. ‘‘நிரூமா! மன்னர்கள் காலத்துல எல்லாம் முறையான சாலை கள் கிடையாது. வெளியூர்லருந்து வர்ற உறவினர்கள் ரோட்ல பூ கிடக்கறதைப் பாத்தா, பிண ஊர்வலம் புறப்பட்டுடுச்சுன்னு தெரிஞ்சுக்கிட்டு, அந்தப் பூக்களை ஃபாலோ பண்ணி, மயானத்துக்கு வருவாங்க. அதுக்காகத்தான் பாதையில பூக்களைத் தூவிக்கிட்டுப் போனாங்க. இதைத் தவிர பூக்களைத் தூவி இறந்தவரை சொர்க்கத்துக்கு அனுப்பறதுன்னும் ஒரு நம்பிககை உண்டு’’ அப்டின்னாங்க. முன்னோர்கள் காலத்துல ரோட்டு வசதி இல்லாததால அப்படிப் பண்ணினாங்கன்னா... இப்பவும் என்ன, ஏதுன்னு எதுவும் யோசிக்காம அதை அப்படியே தொடரணுமா என்ன?

இறந்த உடலை அதிக நாட்கள் வீட்ல வெச்சுக்காம உடனே புதைக்கவோ, எரிக்கவோ செய்யறதுக்குக் காரணமே இறந்த உடல்களிலிருந்து பரவும் கிருமித் தொற்று அதிகம்கறதுதான். அப்படிப்பட்ட பிணங்களின் மேல போடப்பட்ட மாலைகளை பிய்ச்சு, ரோடு பூரா எறிஞ்சுட்டுப் போறது என்ன நாகரீகம்னு புரியலை. பூவோட இதழ்களை உதிர்த்தாக் கூட கொஞ்சம் பரவாயில்லன்னு சொல்லலாம். பூக்களையே சுத்துப்பக்கம் யார் இருக்காங்கன்னுகூட கவனிக்காம, இப்படி வெறித்தனமா வீசிட்டுப் போறங்களே... என்ன அநியாயம்!

இந்த மாதிரி ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு, மத்தவங்களுக்குத் தொல்லை கொடுத்துட்டுப் போறவங்களுக்கு ‘நம்ம -------- இறந்தப்ப. சும்மா அமர்க்களமா எடுத்துட்டுப் போயி ஊ‌ரையே கலக்கிட்டோம்ல...’ என்று பெருமையடித்துக் கொள்வதைத் தவிர வேறு என்ன பிரயோஜனம்னு தெரியலை! இப்படி மத்தவங்களை எரிச்சலும் கோபமும் பட வெச்சுட்டு இறப்பு ஊர்வலம் நடத்தணும்னு எந்த மதத்திலயும், எந்த ஆன்மீக புத்தகங்களும் சொன்னதா எனக்குத் தெரியலை.

நான் பார்த்த ஒரு சினிமாவுல அதோட கதாநாயகி ரோட்ல ஆம்புலன்ஸ் கிராஸ் பண்றதைப் பார்த்தா, அதுல போறவங்களுக்கு என்ன கஷடமோ, அது உடனே சரியாகணும்னு சாமிகிட்ட ஒரு செகண்ட் வேண்டிக்கிட்டு அப்புறம்தான் நடப்பான்னு ஒரு விஷயம் சொல்லியிருந்தாங்க. அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதுமாதிரி சவ ஊர்வலங்கள் கிராஸ் பண்ணினா, ‘ஐயோ பாவம், யாரோ என்னவோ... ஒரு உயிர் போயிடுச்சே’ன்னு மனசுல பரிதாபமும் துயரமும் வரணும். இந்த மாதிரி ஊர்வலங்களைப் பாக்கிறப்பல்லாம் எனக்கு அந்தச் சவங்களின் மேலேயே வெறுப்பும் கோபமும்தான் வருது.

‘‘ரொம்பக் கொடூரமா சிந்திக்கறடி நீ’’ன்னு எத்தனை பேர் என்னை அடிக்கப் போறீங்களோ... இல்ல, ‘‘சரியாச் சொன்ன நிரூ!’’ன்னு எத்தனை பேர் கை குலுக்கப் போறீ்ங்களோ... தெரியலை. ஆனா... இந்த விஷயத்தை உங்க எல்லார் கிட்டயும் பகிர்ந்துக்கிட்டதுல எனக்கு மனசு ரொம்ப லேசாயிடுச்சு. பொறுமையாப் படிச்சதுக்கு ரொம்ப தாங்க்ஸ்!
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "நவீன நரகாசுர ஊர்வலங்கள்!"

30 May 2012

கதை சொல்லப் போறேன்!

ஹாய்... ஒரு பழைய்ய புத்தகத்துலருந்து ‘சுட்ட’ கேள்வியை நான் இங்க குடுத்திருக்கேன். ரொம்ப ஸிம்பிளான இந்தக் கேள்விக்கு விடை கண்டுபிடிக்கணும் நீங்க. யோசிச்சுக கண்டுபிடிச்சுட்டா, எனக்குச் சொல்லுங்க. சாக்லெட் தர்றேன்.
 
 
 
இப்ப... கணக்குப் போடற வரைக்கும் உங்களுக்கு போரடிக்காம இருக்க ஒரு கதை சொல்லப் போறேன்.

கதறிய கழுதை!

ரு வியாபாரி தன்னோட வீட்ல ஒரு கழுதையையும், நாயையும் வளர்த்துட்டிருந்தான். நாய் கழுதையோட நட்பா பழகிட்டிருந்தது. ஆனா விஸ்வாசத்தைக் காட்டி நல்ல பேர் வாங்கறதுக்காக கழுதை பேசறதை முதலாளி கிட்ட போட்டக் கொடுத்துடும். இந்த விஷயம் தெரியாம கழுதை நாயை நம்பிட்டிருந்தது.

அந்த வியாபாரி எப்ப வியாபாரத்துக்காகப் போனாலும் கழுதை மேல தன் சுமைகளை ஏத்திக்கிட்டுப் ‌போவான். ஒவ்வொரு முறை சுமை அதிகமாக சுமத்தப்படும் போதும் கழுதை கனம் தாங்காமல் முனகல் குரல் எழுப்பும். வியாபாரியும் அதன் மேல பரிதாபப் படற மாதிரி நடிச்சு, அதோட சுமையிலருந்து கொஞ்சத்தைக் குறைப்பான். அப்பாவிக் கழுதையும் தனக்காக சுமையக் குறைச்சிருக்கானேன்னு கஷ்டப்பட்டு பாரத்தைச் சுமந்துக்கிட்டு நடை போடும்.

அந்தக் கழுதை தனக்கு இருந்த ஒரு மனக்குறைய தன் தோழன் (என்று நம்பி) நாயிடம் சொன்னது. ‘‘இந்த முதலாளி என்னைக் கடுமையா வேலை வாங்கறான். ஆனா எனக்குச் சரியான சாப்பாடு தர்றதில்லை. ஆறிப் போன சோறும், அழுக்கான தண்ணியும் தான் தர்றான். அதை நினைச்சாத்தான் கடுப்பா வருது’’ அப்படின்னு கழுதை சொன்னதும், ‘‘அடப்பாவமே!’’ன்னு அதுக்கு ஆதரவாப் பேசின நாய், வழக்கம் போல முதலாளிகிட்ட போட்டுக் குடுத்துடுச்சு.

அந்த மனுஷன் பாத்தான். ஒரு ஐடியா பண்ணினான். அடுத்த நாள் கழுதையக் கட்டிப் போட்டுட்டு, அதனோட மூக்குக் கிட்ட சாப்பாட்டையும், தண்ணியையும் காட்டிட்டு வீட்டுக்குக் கொண்டு போயிட்டான். அதுவும் கயிறு அனுமதிக்கற தூரம் வரை ஓடி வந்து ஏமாந்துடுச்சு. இப்படியே அதை சாப்பாடு, தண்ணி தராம அஞ்சாறு நாள் பட்டினி போட்டான். காஞ்சு ‌போய்க் கிடந்த கழுதையோட மனசுல, ‘‘அது கிடைச்சாலே போதுமே, அதுக்காக கஷ்டப்பட்டாலும் பொறுத்துக்கலாமே... இப்படிக் கிடைக்காம கஷ்டப்படறது கொடுமையால்ல இருக்கு?’’ன்னு நினைப்பு ஓடிச்சாம்.

அதுக்கப்புறமா ஒருநாள் வந்து கழுதையோட கட்டை அவுத்துவிட்டுட்டு, அதுக்கு எதிரா ஆறின சோறையும், அழுக்குத் தண்ணியையும் வெச்சான். காஞ்சு ‌போயிருந்த கழுதை மடமடன்னு சாப்பிட்டுட்டு, தண்ணியைக் குடிச்சிடுச்சு. முதலாளியைப் பார்த்து அது கண்ணீர் விட்டு, ‘‘ஐயா... நான் இனிமே எதுவும் கேக்க மாட்டேன். இந்த பழைய சோறும், அழுக்குத் தண்ணியும் எனக்குக் கிடைச்சாலே போதும்...’’ன்னு கதறி அழுதுச்சாம். தன்னோட தந்திரம் பலிச்சுப் போச்சேன்ற சந்தோஷத்துல நாயைக் கூட்டிட்டு வீட்டுக்குள்ள போனானாம் மனுஷன்.

-என்ன, சின்னப் பசங்களுக்கு சொல்ற ‘பஞ்சதந்திரக் கதை’ மாதிரி இருக்கேன்னு நினைக்கறீங்களா? ரெண்டு நாளா பஸ்(நெரிசல்)லதான் போய் வந்துட்டிருக்கேன். பஸ் பிரயாணத்தின் போது இந்தக் கதை மனசுல தோணிச்சு. உங்ககிட்ட ஷேர் பண்ணிக்கிட்டேன். மத்தபடி மனசுல வேற எதையும் நினைச்சுக்கிட்டு இந்தக் கதைய நான் சொல்லலைப்பா..!

இப்ப, அந்தக் கணக்கைச் சரியாப் போட வராதவங்களுக்காக இங்க விடையைத் தர்றேன்:


மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "கதை சொல்லப் போறேன்!"

28 May 2012

விடை தெரியாக் கேள்விகள்!


ங்கம்மா எனக்கு ஃப்ரெண்ட் மாதிரி. எந்த விஷயம்னாலும் மனம் விட்டுப் பேசக்கூடிய சுதந்திரம் எனக்கு உண்டு. ஒருநாள் அம்மாகூட பேசிட்டிருந்தப்ப, இப்படிச் சொன்னாங்க. ‘‘நிரூ! நீ படிப்பை முடி்க்கப் போற ஸ்டேஜ்ல இருக்க. இனி வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டா ஒரு கல்யாணத்தைப் பண்ணி வெச்சுடணும் உனக்கு. அதனால கொஞ்சம் கொஞ்சமா சமைக்கக் கத்தக்கோ...’’ அப்படின்னாங்க.

எனக்கு நிஜமாவே புரியலை. ‘‘கல்யாணம் பண்ணிக்கறதுக்கும் நான் சமைக்கக் கத்துக்கறதுக்கும் என்னம்மா சம்பந்தம்?’’னனு நான் கேட்டேன். அம்மா என்னை வினோதமாப் பாத்துட்டு, ‘‘என்னடி நீ... கல்யாணமாகி புருஷன் வீட்டுக்குப் போயிட்டேன்னா, அங்க உள்ளவங்களுக்கு சமைச்சுப் போட வேண்டாமா? அதுக்கு நீ கத்துக்கணும். இல்லையா?’’ன்னாங்க. ‘‘ஏம்மா... ஒரு சுரேஷ் கிட்டயோ, இல்ல ரமேஷ் கிட்டயோ அவங்கம்மா வந்து, நீ வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டடா. கல்யாணம் பண்ற வயசு வந்துடுச்சு. அதனால சமைக்கக் கத்துக்கோன்னு சொல்வாங்களாம்மா? என்னை மட்டும் ஏன் சொல்றே?’’

‘‘லூஸ் மாதிரி உளறாதடி. நான் என்ன உலகத்துல இல்லாததையா சொல்லிட்டேன். இதான்டி நடைமுறை... கல்யாணமாச்சுன்னா நீதான் புருஷன் வீட்டுக்குப் போகணுமே தவிர, அவன் உன் வீட்டுக்கு வரப் போறதில்ல. புரிஞ்சுதா?’’

‘‘அதுலதாம்மா பல விஷயங்கள் புரியலை. கல்யாணமானா என் லைஃபே மாறுது. நான் அவங்க வீட்ல இருந்து வேலக்குப் போய் சம்பாதிச்சுத் தரணும், அவங்க வீட்ல உள்ளவங்ககிட்ட மரி‌யாதையா நடந்துக்கணும், தவிர அவங்களுக்கு வாய்க்கு ருசியா சமைச்சும் போடணும். ஆனா ஆம்பளைங்க மட்டும், கல்யாணமாகிடுச்சுன்னா தங்களோட ரொட்டீன்ல எந்த மாற்றமும் இல்லாமதான் இருப்பாங்க. இது எப்படி சரியாகும்?’’

‘‘நாங்க இப்படில்லாம் கேள்வி கேட்டதில்லை. ஆசைப்பட்டு உங்களையெல்லாம் நிறையப் படிக்க வெக்கறோம் பாரு... அதான் இப்படிலலாம் பேசற...’’ன்னாங்க அம்மா.

‘‘அது இல்லம்மா... அனு அககாவைப் பாத்துட்டிருக்க தானே... (அவங்க எங்க குடும்ப நண்பரோட மகள்) விஸ்காம் படிச்சாங்க. நல்ல திறமைசாலி, அருமையான க்ரியேட்டர்.  ஷார்ட் ஃபிலிம் பண்ணினாங்க. சினிமா டைரக்டராகனும்ணு எத்தனை கனவுகள் அவங்களுகு்கு! கல்யாணம் பண்ணி வெச்சப்ப நல்ல சம்பளத்துல வேலைக்குப் போயிட்டுத்தான் இருந்தாங்க. கல்யாணமாகி ஒன் இயர்ல குழந்தை உண்டானதும், ‘பிரசவத்துக்கும், அதுக்கப்புறம் குழந்தையப் பாத்துக்கவும் நிறைய லீவு போடணும். அதனால வேலைய ரிசைன் பண்ணிடு. குழந்தை கொஞ்சம் வளர்ந்ததும் வேலைக்குப் போயிக்கலாம்’னு அவங்க ஹஸ்பெண்ட் வீட்ல சொன்னாங்க. சரின்னு வேற வழியில்லாம அவங்களும் வேலைய ரிஸைன் பண்ணினாங்க. குழந்தை பிறந்து வளர்ந்து ஒரு வருஷம் முடிஞ்சதும், வேலைக்கு மறுபடி போகலாமான்னு நினைக்கறப்ப, திரும்ப வயித்துல குழந்தை. இப்பக் கேட்டா, ‘ரெண்டு குழந்தைங்களையும் பாத்துக்கிட்டாப் போதும்டி. வேலைக்குப் போற இன்ட்ரஸ்ட்டே போயிடுச்சு’ங்கறாங்க. இப்படி தன்னைத் தொலைச்சுட்டு ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழறது அவசியம்தானாம்மா?  கல்யாணம்னு ஒண்ணைப் பண்ணிக்காம பிரம்மச்சாரியாவே இருந்துட்டா ரொம்ப நிம்மதியா இருக்கலாமேன்னுதான் எனக்குத் தோணுது’’ன்னேன்.

இந்த முறை நிஜமாவே அம்மாவுக்கு கடுமையா கோபம் வந்துட்டுது. என் தலையில ஒரு தட்டு தட்டி, ‘‘உனக்குச் செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பாப் போச்சுடி. இன்னொரு தடவை இப்டில்லாம் உளறிட்டு இருந்தயின்னா தொலைச்சுடுவேன் நிரூ. உனக்கு எப்ப எதைச் செய்யணும்னு எங்களுக்குத் தெரியும். எதித்துப் பேசாம சொன்ன பேச்சைக் கேக்கக் கத்துக்கோ’’ன்னு கோபமாச் சொல்லிட்டுப் போயிட்டாங்க. நானும் கோபமா அதுக்கப்புறம் நாலு நாள் அம்மாகூடப் பேசலை. அதுக்கும் மேல கோபம் செல்லுபடியாகாம அம்மாவோட கொஞ்சிட்டுத்தான் இருக்கேன்னாலும் கேள்விகள் மட்டும் எனக்குள்ள சுத்திக்கிட்டேதான் இருக்குது.

நான் நினைச்சதும் பேசினதும் தப்பா? சரியா? நீங்க என்ன நினைக்கறீங்கன்றதைச் சொல்லுங்க ப்ளீஸ்! அதுலருந்தாவது எனக்கு ஒரு தெளிவு கிடைக்குதான்னு பாக்கறேன்!
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "விடை தெரியாக் கேள்விகள்!"

24 May 2012

கமகம கதம்பம்!


சின்ன வயசுலருந்தே எனக்கு நெல்லிக் காய்ன்னா ரொம்பப் பிடிக்கும். அம்மா எனக்காக நிறைய நெல்லிக்காய் வாங்கி, தேன்ல ஊற வெச்சுக் கொடுப்பாங்க. நெல்லிக்காய் பத்தின சில அரிய தகவல்கள் இதோ:

ரத்தத்தைப் பலப்படுத்தும் ஆறு சுவைகளில் இனிப்பு, புளிப்பு, கைப்பு, துவர்ப்பு, உவர்ப்பு ஆகிய ஐந்தும் நெல்லிக்காயில் உள்ளன. இனிப்பும் .உவர்ப்பும் பித்தத்தையும், புளிப்பு வாயுவையும், துவர்ப்பும் கைப்பும் கபத்தையும் போக்கக் கூடியவை.ஆக, வாத-பித்த-கபம் மூன்று தோஷங்களையும் போக்கக் கூடிய சக்தி நெல்லிக்காயில் இருப்பதால் இது மிகவும் சிறந்தது. இதில் A, B, C ஆகிய வைட்டமின்கள் இருக்கின்றன. மற்றக் கனிகளைப் போல இல்லாமல் நெல்லிக்காய் வாடினாலும் அதில் வைட்டமின் குன்றுவதில்லை. பின்ன... சும்மாவா நெல்லிககாயை ஒளவையாருக்குக் கொடுத்தார் அதியமான்?  நீங்களும் நெல்லிக்காய் வாங்கி நிறையச் சாப்பிடுங்க ஃப்ரெண்ட்ஸ்!

*   *    *   *   *    *

‘மது‌ரைவீரன்’ படப்பிடிப்புக்கு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் அவரது துணைவியார் டி.ஏ.மதுரமும் வந்திருந்த போது மதுரை மீனாட்சி கோயிலை சுற்றிப் பார்த்தார்கள். அப்போது அங்கிருந்த இசைத் தூண்களை அவர்களுக்குக் காட்டினார்கள் உடன் வந்தவர்கள். அந்தத் தூண்களைக் கையால் தட்டிப் பார்த்த என்.எஸ்.கே., ‘‘இதுக்குள்ள ஒரு செய்தி இருக்கு’’ என்று சொல்லிவிட்டு, ‘‘இது தும்தும், அது பம்பம், இது தீம்தீம், அது தோம்தோம்’’ என்று தூண்களை தட்டிக் காட்டினார்.

எல்லாரும் புரியாமல் அவரைப் பார்க்கவும், ‘‘என்ன புரியலையா? தும்தும் பம்பம் - துன்பம், தீம்தீம் தோம்தோம் - தீர்ந்தோம். சேர்த்துச் சொன்னா துன்பம் தீர்ந்தோம். அதாவது இசையை அனுபவித்தால் துன்பம் தீர்ந்து விடும் என்று இந்தக் கல்லும் கதை சொல்லுகிறது’’ என்றார் கலைவாணர். அந்த நகைச்சுவை மேதையின் பேச்சை ரசித்துக் கை தட்டினார்கள் சுற்றிலுமிருந்தவர்கள்.

*   *    *   *   *    *

ர்ஜுனனுக்கு ஒரு மனக்குறை. ‘‘நானும் என் வீடு தேடி வருபவர்களுக்கு இல்லையென்னாமல் தானம் செய்கிறேன். ஏன் என்னைக் கொ‌டை வள்ளல் என்ற சொல்வதில்லை? கர்ணனை மட்டும் அப்படிச் சொல்கிறார்களே... அவன் என்ன .உசத்தி?’’ என்று ஸ்ரீ கிருஷ்ணரிடம் கேட்டான். மறுதினம் காலை அர்ஜுனனை கோட்டைக்கு வெளியே அழைத்துச் சென்ற கிருஷ்ணர், கையை அசைத்து இரண்டு தங்க மலைகளை வரவழைத்தார். ‘‘அர்ஜுனா! இன்று சூரியன் மறைவதற்குள் இந்த இரண்டு மலைகளையும் நீ வறியவர்களுக்கு தானம் செய்துவிட வேண்டும். நீ கொடை வள்ளல் என்றால் உன்னால் முடியும்’’ என்றார். அர்ஜுனன் பறையறிவித்து மக்களை வரச் செய்து, வெட்டி வெட்டிக் கொடுத்துக் கொண்டேயிருந்தான்.

பகல் முழுவதும் சளைக்காமல் அர்ஜுனன் வெட்டி வெட்டி தானம் செய்தும்கூட ஒரு மலையில் பாதி தான் கரைந்திருந்தது. மாலை மங்குவதற்கு இன்னும் சற்று நேரம் தான் இருந்தது. அர்ஜுனன் களைப்பாகி, ‘‘என்னால் முடியவில்லை கண்ணா!’’ என்றான். கண்ணன் உடனே ஆளையனுப்பி கர்ணனை அழைத்து வரச் சொன்னார். கர்ணன் வந்து வணங்கி நிற்க, அர்ஜுனனிடம் சொன்ன அதே வார்த்தைகளைக் கர்ணனிடமும் சொன்னார் கண்ணன். கர்ணன் ஒரு கணமும் யோசிக்காமல், யாசகம் கேட்டு வந்த இருவரிடம், ‘‘இந்த மலையை நீ வைத்துக் கொள், அந்த மலையை அவன் எடுத்துக் கொள்ளட்டும்...’’ என்று சொல்ல, அவர்கள் அவனைப் புகழ்ந்து வாழ்த்தி விட்டுச் சென்றனர். ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனைத் திரும்பிப் பார்க்க, அவரின் பார்வையின் பொருளும், கர்ணனின் கொடைச் சிறப்பும் அர்ஜுனனுக்குத் தெளிவாகப் புரிந்தது.

*   *    *   *   *    *

மேஸான் மழைக் காடுகள் உலகிலுள்ள பிராணவாயுவில் 20 சதவீதத்தை உற்பத்தி செய்கிறது. அமேஸான் நதி எவ்வளவு அதிகத் தண்ணீரைக் கடலில் பாய்ச்சுகிறது என்றால் நதி கடலில் சங்கமித்த இடத்திலிருந்து 100 மைல் தூரத்தில் கூடக் கடலிலிரந்து இனிப்பத் தண்ணீர் (Fresh Water) பெறலாம். அமேஸான் நதியிலுள்ள நீர் அதையடுத்த எட்டுப் பெரிய நதிகளின் நீரின் மொத்த அளவை விட அதிகம். அமெரிக்காவிலுள்ள எல்லா நதிகளின் நீரின் மொத்த அளவைவிட மூன்று மடங்கு நீர் அமேஸான் நதியில் உள்ளது.

*   *    *   *   *    *

ரெண்டு நாள் முன்னால நான் வீட்டுக்குப் போக டைமாயிடுச்சேன்னு ஸ்கூட்டிய வேகமா ஓட்டிட்டுப் போய்ட்டிருந்தப்ப பைக்ல வந்துட்டிருந்த ஒரு ஆளை முந்திட்டேன். நான் கடந்ததும் சிக்னல்ல ரெட் விழுந்துட்டுதனால மத்த வாகனங்கள் தேங்கிடுச்சு. கொஞ்ச தூரம் போயிருப்பேன்... ‘ரொய்ய்ய்ய்ங்’ன்ற சத்தத்தோட படுவேகமா என் வண்டிய உரசற மாதிரி வந்து ஓவர்டேக் பண்ணிட்டு, பெருமையாத் திரும்பிப் பார்த்துட்டுப் போனான் அதை ஒட்டின இளைஞன்.

 நான் பயந்துபோய் வண்டியை ஓரமா நிறுத்தி, ஆசுவாசப்படுத்திக்கிட்டு ரெண்டு நிமிஷம் கழிச்சு வண்டியை எடுத்தேன். ஆம்பளைங்களோட இந்த சைக்காலஜிதான் எனக்குப் புரியறதே இல்லை. ஒரு பெண் ஓவர்டேக் பண்ணிட்டுப் போயிட்டா எந்த விதத்துல உங்களுக்கு கிரீடம் குறைஞ்சு போகுது? ஏன் இப்படி வெறித்தனமா பைக் ஓட்டணும்? (என் மூஞ்சியை ‌‌ஸைட் அடிக்க வந்திருப்பான்னு நெனைக்காதீங்க. மீ ஹெல்மெட் போட்டு முகத்தை மறைச்சுட்டு வண்டி ஓட்டற டைப்பாக்கும்!)

*   *    *   *   *    *

O.K. Friends! நான் கிளம்பறதுக்கு முன்னாடி.... Let us end with a smile...

ராமு : ‘‘என் வொய்ஃபுக்கு சமைக்கத் தெரியும். சமைக்க மாட்டேங்கறாடா...’’

சோமு : ‘‘நீ குடுத்து வெச்சவண்டா. என் வொய்ஃபுக்கு சமைக்கத் தெரியாது. ஆனா சமைக்கறாடா..!’’

மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "கமகம கதம்பம்!"
 

கலை அக்கா தந்த பரிசுகள்!

கலை அக்கா தந்த பரிசுகள்!

என் தோழி விஜி தந்த விருது!

என் தோழி விஜி தந்த விருது!