Pages

Ads 468x60px

30 May 2012

கதை சொல்லப் போறேன்!

ஹாய்... ஒரு பழைய்ய புத்தகத்துலருந்து ‘சுட்ட’ கேள்வியை நான் இங்க குடுத்திருக்கேன். ரொம்ப ஸிம்பிளான இந்தக் கேள்விக்கு விடை கண்டுபிடிக்கணும் நீங்க. யோசிச்சுக கண்டுபிடிச்சுட்டா, எனக்குச் சொல்லுங்க. சாக்லெட் தர்றேன்.
 
 
 
இப்ப... கணக்குப் போடற வரைக்கும் உங்களுக்கு போரடிக்காம இருக்க ஒரு கதை சொல்லப் போறேன்.

கதறிய கழுதை!

ரு வியாபாரி தன்னோட வீட்ல ஒரு கழுதையையும், நாயையும் வளர்த்துட்டிருந்தான். நாய் கழுதையோட நட்பா பழகிட்டிருந்தது. ஆனா விஸ்வாசத்தைக் காட்டி நல்ல பேர் வாங்கறதுக்காக கழுதை பேசறதை முதலாளி கிட்ட போட்டக் கொடுத்துடும். இந்த விஷயம் தெரியாம கழுதை நாயை நம்பிட்டிருந்தது.

அந்த வியாபாரி எப்ப வியாபாரத்துக்காகப் போனாலும் கழுதை மேல தன் சுமைகளை ஏத்திக்கிட்டுப் ‌போவான். ஒவ்வொரு முறை சுமை அதிகமாக சுமத்தப்படும் போதும் கழுதை கனம் தாங்காமல் முனகல் குரல் எழுப்பும். வியாபாரியும் அதன் மேல பரிதாபப் படற மாதிரி நடிச்சு, அதோட சுமையிலருந்து கொஞ்சத்தைக் குறைப்பான். அப்பாவிக் கழுதையும் தனக்காக சுமையக் குறைச்சிருக்கானேன்னு கஷ்டப்பட்டு பாரத்தைச் சுமந்துக்கிட்டு நடை போடும்.

அந்தக் கழுதை தனக்கு இருந்த ஒரு மனக்குறைய தன் தோழன் (என்று நம்பி) நாயிடம் சொன்னது. ‘‘இந்த முதலாளி என்னைக் கடுமையா வேலை வாங்கறான். ஆனா எனக்குச் சரியான சாப்பாடு தர்றதில்லை. ஆறிப் போன சோறும், அழுக்கான தண்ணியும் தான் தர்றான். அதை நினைச்சாத்தான் கடுப்பா வருது’’ அப்படின்னு கழுதை சொன்னதும், ‘‘அடப்பாவமே!’’ன்னு அதுக்கு ஆதரவாப் பேசின நாய், வழக்கம் போல முதலாளிகிட்ட போட்டுக் குடுத்துடுச்சு.

அந்த மனுஷன் பாத்தான். ஒரு ஐடியா பண்ணினான். அடுத்த நாள் கழுதையக் கட்டிப் போட்டுட்டு, அதனோட மூக்குக் கிட்ட சாப்பாட்டையும், தண்ணியையும் காட்டிட்டு வீட்டுக்குக் கொண்டு போயிட்டான். அதுவும் கயிறு அனுமதிக்கற தூரம் வரை ஓடி வந்து ஏமாந்துடுச்சு. இப்படியே அதை சாப்பாடு, தண்ணி தராம அஞ்சாறு நாள் பட்டினி போட்டான். காஞ்சு ‌போய்க் கிடந்த கழுதையோட மனசுல, ‘‘அது கிடைச்சாலே போதுமே, அதுக்காக கஷ்டப்பட்டாலும் பொறுத்துக்கலாமே... இப்படிக் கிடைக்காம கஷ்டப்படறது கொடுமையால்ல இருக்கு?’’ன்னு நினைப்பு ஓடிச்சாம்.

அதுக்கப்புறமா ஒருநாள் வந்து கழுதையோட கட்டை அவுத்துவிட்டுட்டு, அதுக்கு எதிரா ஆறின சோறையும், அழுக்குத் தண்ணியையும் வெச்சான். காஞ்சு ‌போயிருந்த கழுதை மடமடன்னு சாப்பிட்டுட்டு, தண்ணியைக் குடிச்சிடுச்சு. முதலாளியைப் பார்த்து அது கண்ணீர் விட்டு, ‘‘ஐயா... நான் இனிமே எதுவும் கேக்க மாட்டேன். இந்த பழைய சோறும், அழுக்குத் தண்ணியும் எனக்குக் கிடைச்சாலே போதும்...’’ன்னு கதறி அழுதுச்சாம். தன்னோட தந்திரம் பலிச்சுப் போச்சேன்ற சந்தோஷத்துல நாயைக் கூட்டிட்டு வீட்டுக்குள்ள போனானாம் மனுஷன்.

-என்ன, சின்னப் பசங்களுக்கு சொல்ற ‘பஞ்சதந்திரக் கதை’ மாதிரி இருக்கேன்னு நினைக்கறீங்களா? ரெண்டு நாளா பஸ்(நெரிசல்)லதான் போய் வந்துட்டிருக்கேன். பஸ் பிரயாணத்தின் போது இந்தக் கதை மனசுல தோணிச்சு. உங்ககிட்ட ஷேர் பண்ணிக்கிட்டேன். மத்தபடி மனசுல வேற எதையும் நினைச்சுக்கிட்டு இந்தக் கதைய நான் சொல்லலைப்பா..!

இப்ப, அந்தக் கணக்கைச் சரியாப் போட வராதவங்களுக்காக இங்க விடையைத் தர்றேன்:


மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "கதை சொல்லப் போறேன்!"

28 May 2012

விடை தெரியாக் கேள்விகள்!


ங்கம்மா எனக்கு ஃப்ரெண்ட் மாதிரி. எந்த விஷயம்னாலும் மனம் விட்டுப் பேசக்கூடிய சுதந்திரம் எனக்கு உண்டு. ஒருநாள் அம்மாகூட பேசிட்டிருந்தப்ப, இப்படிச் சொன்னாங்க. ‘‘நிரூ! நீ படிப்பை முடி்க்கப் போற ஸ்டேஜ்ல இருக்க. இனி வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டா ஒரு கல்யாணத்தைப் பண்ணி வெச்சுடணும் உனக்கு. அதனால கொஞ்சம் கொஞ்சமா சமைக்கக் கத்தக்கோ...’’ அப்படின்னாங்க.

எனக்கு நிஜமாவே புரியலை. ‘‘கல்யாணம் பண்ணிக்கறதுக்கும் நான் சமைக்கக் கத்துக்கறதுக்கும் என்னம்மா சம்பந்தம்?’’னனு நான் கேட்டேன். அம்மா என்னை வினோதமாப் பாத்துட்டு, ‘‘என்னடி நீ... கல்யாணமாகி புருஷன் வீட்டுக்குப் போயிட்டேன்னா, அங்க உள்ளவங்களுக்கு சமைச்சுப் போட வேண்டாமா? அதுக்கு நீ கத்துக்கணும். இல்லையா?’’ன்னாங்க. ‘‘ஏம்மா... ஒரு சுரேஷ் கிட்டயோ, இல்ல ரமேஷ் கிட்டயோ அவங்கம்மா வந்து, நீ வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டடா. கல்யாணம் பண்ற வயசு வந்துடுச்சு. அதனால சமைக்கக் கத்துக்கோன்னு சொல்வாங்களாம்மா? என்னை மட்டும் ஏன் சொல்றே?’’

‘‘லூஸ் மாதிரி உளறாதடி. நான் என்ன உலகத்துல இல்லாததையா சொல்லிட்டேன். இதான்டி நடைமுறை... கல்யாணமாச்சுன்னா நீதான் புருஷன் வீட்டுக்குப் போகணுமே தவிர, அவன் உன் வீட்டுக்கு வரப் போறதில்ல. புரிஞ்சுதா?’’

‘‘அதுலதாம்மா பல விஷயங்கள் புரியலை. கல்யாணமானா என் லைஃபே மாறுது. நான் அவங்க வீட்ல இருந்து வேலக்குப் போய் சம்பாதிச்சுத் தரணும், அவங்க வீட்ல உள்ளவங்ககிட்ட மரி‌யாதையா நடந்துக்கணும், தவிர அவங்களுக்கு வாய்க்கு ருசியா சமைச்சும் போடணும். ஆனா ஆம்பளைங்க மட்டும், கல்யாணமாகிடுச்சுன்னா தங்களோட ரொட்டீன்ல எந்த மாற்றமும் இல்லாமதான் இருப்பாங்க. இது எப்படி சரியாகும்?’’

‘‘நாங்க இப்படில்லாம் கேள்வி கேட்டதில்லை. ஆசைப்பட்டு உங்களையெல்லாம் நிறையப் படிக்க வெக்கறோம் பாரு... அதான் இப்படிலலாம் பேசற...’’ன்னாங்க அம்மா.

‘‘அது இல்லம்மா... அனு அககாவைப் பாத்துட்டிருக்க தானே... (அவங்க எங்க குடும்ப நண்பரோட மகள்) விஸ்காம் படிச்சாங்க. நல்ல திறமைசாலி, அருமையான க்ரியேட்டர்.  ஷார்ட் ஃபிலிம் பண்ணினாங்க. சினிமா டைரக்டராகனும்ணு எத்தனை கனவுகள் அவங்களுகு்கு! கல்யாணம் பண்ணி வெச்சப்ப நல்ல சம்பளத்துல வேலைக்குப் போயிட்டுத்தான் இருந்தாங்க. கல்யாணமாகி ஒன் இயர்ல குழந்தை உண்டானதும், ‘பிரசவத்துக்கும், அதுக்கப்புறம் குழந்தையப் பாத்துக்கவும் நிறைய லீவு போடணும். அதனால வேலைய ரிசைன் பண்ணிடு. குழந்தை கொஞ்சம் வளர்ந்ததும் வேலைக்குப் போயிக்கலாம்’னு அவங்க ஹஸ்பெண்ட் வீட்ல சொன்னாங்க. சரின்னு வேற வழியில்லாம அவங்களும் வேலைய ரிஸைன் பண்ணினாங்க. குழந்தை பிறந்து வளர்ந்து ஒரு வருஷம் முடிஞ்சதும், வேலைக்கு மறுபடி போகலாமான்னு நினைக்கறப்ப, திரும்ப வயித்துல குழந்தை. இப்பக் கேட்டா, ‘ரெண்டு குழந்தைங்களையும் பாத்துக்கிட்டாப் போதும்டி. வேலைக்குப் போற இன்ட்ரஸ்ட்டே போயிடுச்சு’ங்கறாங்க. இப்படி தன்னைத் தொலைச்சுட்டு ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழறது அவசியம்தானாம்மா?  கல்யாணம்னு ஒண்ணைப் பண்ணிக்காம பிரம்மச்சாரியாவே இருந்துட்டா ரொம்ப நிம்மதியா இருக்கலாமேன்னுதான் எனக்குத் தோணுது’’ன்னேன்.

இந்த முறை நிஜமாவே அம்மாவுக்கு கடுமையா கோபம் வந்துட்டுது. என் தலையில ஒரு தட்டு தட்டி, ‘‘உனக்குச் செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பாப் போச்சுடி. இன்னொரு தடவை இப்டில்லாம் உளறிட்டு இருந்தயின்னா தொலைச்சுடுவேன் நிரூ. உனக்கு எப்ப எதைச் செய்யணும்னு எங்களுக்குத் தெரியும். எதித்துப் பேசாம சொன்ன பேச்சைக் கேக்கக் கத்துக்கோ’’ன்னு கோபமாச் சொல்லிட்டுப் போயிட்டாங்க. நானும் கோபமா அதுக்கப்புறம் நாலு நாள் அம்மாகூடப் பேசலை. அதுக்கும் மேல கோபம் செல்லுபடியாகாம அம்மாவோட கொஞ்சிட்டுத்தான் இருக்கேன்னாலும் கேள்விகள் மட்டும் எனக்குள்ள சுத்திக்கிட்டேதான் இருக்குது.

நான் நினைச்சதும் பேசினதும் தப்பா? சரியா? நீங்க என்ன நினைக்கறீங்கன்றதைச் சொல்லுங்க ப்ளீஸ்! அதுலருந்தாவது எனக்கு ஒரு தெளிவு கிடைக்குதான்னு பாக்கறேன்!
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "விடை தெரியாக் கேள்விகள்!"

24 May 2012

கமகம கதம்பம்!


சின்ன வயசுலருந்தே எனக்கு நெல்லிக் காய்ன்னா ரொம்பப் பிடிக்கும். அம்மா எனக்காக நிறைய நெல்லிக்காய் வாங்கி, தேன்ல ஊற வெச்சுக் கொடுப்பாங்க. நெல்லிக்காய் பத்தின சில அரிய தகவல்கள் இதோ:

ரத்தத்தைப் பலப்படுத்தும் ஆறு சுவைகளில் இனிப்பு, புளிப்பு, கைப்பு, துவர்ப்பு, உவர்ப்பு ஆகிய ஐந்தும் நெல்லிக்காயில் உள்ளன. இனிப்பும் .உவர்ப்பும் பித்தத்தையும், புளிப்பு வாயுவையும், துவர்ப்பும் கைப்பும் கபத்தையும் போக்கக் கூடியவை.ஆக, வாத-பித்த-கபம் மூன்று தோஷங்களையும் போக்கக் கூடிய சக்தி நெல்லிக்காயில் இருப்பதால் இது மிகவும் சிறந்தது. இதில் A, B, C ஆகிய வைட்டமின்கள் இருக்கின்றன. மற்றக் கனிகளைப் போல இல்லாமல் நெல்லிக்காய் வாடினாலும் அதில் வைட்டமின் குன்றுவதில்லை. பின்ன... சும்மாவா நெல்லிககாயை ஒளவையாருக்குக் கொடுத்தார் அதியமான்?  நீங்களும் நெல்லிக்காய் வாங்கி நிறையச் சாப்பிடுங்க ஃப்ரெண்ட்ஸ்!

*   *    *   *   *    *

‘மது‌ரைவீரன்’ படப்பிடிப்புக்கு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் அவரது துணைவியார் டி.ஏ.மதுரமும் வந்திருந்த போது மதுரை மீனாட்சி கோயிலை சுற்றிப் பார்த்தார்கள். அப்போது அங்கிருந்த இசைத் தூண்களை அவர்களுக்குக் காட்டினார்கள் உடன் வந்தவர்கள். அந்தத் தூண்களைக் கையால் தட்டிப் பார்த்த என்.எஸ்.கே., ‘‘இதுக்குள்ள ஒரு செய்தி இருக்கு’’ என்று சொல்லிவிட்டு, ‘‘இது தும்தும், அது பம்பம், இது தீம்தீம், அது தோம்தோம்’’ என்று தூண்களை தட்டிக் காட்டினார்.

எல்லாரும் புரியாமல் அவரைப் பார்க்கவும், ‘‘என்ன புரியலையா? தும்தும் பம்பம் - துன்பம், தீம்தீம் தோம்தோம் - தீர்ந்தோம். சேர்த்துச் சொன்னா துன்பம் தீர்ந்தோம். அதாவது இசையை அனுபவித்தால் துன்பம் தீர்ந்து விடும் என்று இந்தக் கல்லும் கதை சொல்லுகிறது’’ என்றார் கலைவாணர். அந்த நகைச்சுவை மேதையின் பேச்சை ரசித்துக் கை தட்டினார்கள் சுற்றிலுமிருந்தவர்கள்.

*   *    *   *   *    *

ர்ஜுனனுக்கு ஒரு மனக்குறை. ‘‘நானும் என் வீடு தேடி வருபவர்களுக்கு இல்லையென்னாமல் தானம் செய்கிறேன். ஏன் என்னைக் கொ‌டை வள்ளல் என்ற சொல்வதில்லை? கர்ணனை மட்டும் அப்படிச் சொல்கிறார்களே... அவன் என்ன .உசத்தி?’’ என்று ஸ்ரீ கிருஷ்ணரிடம் கேட்டான். மறுதினம் காலை அர்ஜுனனை கோட்டைக்கு வெளியே அழைத்துச் சென்ற கிருஷ்ணர், கையை அசைத்து இரண்டு தங்க மலைகளை வரவழைத்தார். ‘‘அர்ஜுனா! இன்று சூரியன் மறைவதற்குள் இந்த இரண்டு மலைகளையும் நீ வறியவர்களுக்கு தானம் செய்துவிட வேண்டும். நீ கொடை வள்ளல் என்றால் உன்னால் முடியும்’’ என்றார். அர்ஜுனன் பறையறிவித்து மக்களை வரச் செய்து, வெட்டி வெட்டிக் கொடுத்துக் கொண்டேயிருந்தான்.

பகல் முழுவதும் சளைக்காமல் அர்ஜுனன் வெட்டி வெட்டி தானம் செய்தும்கூட ஒரு மலையில் பாதி தான் கரைந்திருந்தது. மாலை மங்குவதற்கு இன்னும் சற்று நேரம் தான் இருந்தது. அர்ஜுனன் களைப்பாகி, ‘‘என்னால் முடியவில்லை கண்ணா!’’ என்றான். கண்ணன் உடனே ஆளையனுப்பி கர்ணனை அழைத்து வரச் சொன்னார். கர்ணன் வந்து வணங்கி நிற்க, அர்ஜுனனிடம் சொன்ன அதே வார்த்தைகளைக் கர்ணனிடமும் சொன்னார் கண்ணன். கர்ணன் ஒரு கணமும் யோசிக்காமல், யாசகம் கேட்டு வந்த இருவரிடம், ‘‘இந்த மலையை நீ வைத்துக் கொள், அந்த மலையை அவன் எடுத்துக் கொள்ளட்டும்...’’ என்று சொல்ல, அவர்கள் அவனைப் புகழ்ந்து வாழ்த்தி விட்டுச் சென்றனர். ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனைத் திரும்பிப் பார்க்க, அவரின் பார்வையின் பொருளும், கர்ணனின் கொடைச் சிறப்பும் அர்ஜுனனுக்குத் தெளிவாகப் புரிந்தது.

*   *    *   *   *    *

மேஸான் மழைக் காடுகள் உலகிலுள்ள பிராணவாயுவில் 20 சதவீதத்தை உற்பத்தி செய்கிறது. அமேஸான் நதி எவ்வளவு அதிகத் தண்ணீரைக் கடலில் பாய்ச்சுகிறது என்றால் நதி கடலில் சங்கமித்த இடத்திலிருந்து 100 மைல் தூரத்தில் கூடக் கடலிலிரந்து இனிப்பத் தண்ணீர் (Fresh Water) பெறலாம். அமேஸான் நதியிலுள்ள நீர் அதையடுத்த எட்டுப் பெரிய நதிகளின் நீரின் மொத்த அளவை விட அதிகம். அமெரிக்காவிலுள்ள எல்லா நதிகளின் நீரின் மொத்த அளவைவிட மூன்று மடங்கு நீர் அமேஸான் நதியில் உள்ளது.

*   *    *   *   *    *

ரெண்டு நாள் முன்னால நான் வீட்டுக்குப் போக டைமாயிடுச்சேன்னு ஸ்கூட்டிய வேகமா ஓட்டிட்டுப் போய்ட்டிருந்தப்ப பைக்ல வந்துட்டிருந்த ஒரு ஆளை முந்திட்டேன். நான் கடந்ததும் சிக்னல்ல ரெட் விழுந்துட்டுதனால மத்த வாகனங்கள் தேங்கிடுச்சு. கொஞ்ச தூரம் போயிருப்பேன்... ‘ரொய்ய்ய்ய்ங்’ன்ற சத்தத்தோட படுவேகமா என் வண்டிய உரசற மாதிரி வந்து ஓவர்டேக் பண்ணிட்டு, பெருமையாத் திரும்பிப் பார்த்துட்டுப் போனான் அதை ஒட்டின இளைஞன்.

 நான் பயந்துபோய் வண்டியை ஓரமா நிறுத்தி, ஆசுவாசப்படுத்திக்கிட்டு ரெண்டு நிமிஷம் கழிச்சு வண்டியை எடுத்தேன். ஆம்பளைங்களோட இந்த சைக்காலஜிதான் எனக்குப் புரியறதே இல்லை. ஒரு பெண் ஓவர்டேக் பண்ணிட்டுப் போயிட்டா எந்த விதத்துல உங்களுக்கு கிரீடம் குறைஞ்சு போகுது? ஏன் இப்படி வெறித்தனமா பைக் ஓட்டணும்? (என் மூஞ்சியை ‌‌ஸைட் அடிக்க வந்திருப்பான்னு நெனைக்காதீங்க. மீ ஹெல்மெட் போட்டு முகத்தை மறைச்சுட்டு வண்டி ஓட்டற டைப்பாக்கும்!)

*   *    *   *   *    *

O.K. Friends! நான் கிளம்பறதுக்கு முன்னாடி.... Let us end with a smile...

ராமு : ‘‘என் வொய்ஃபுக்கு சமைக்கத் தெரியும். சமைக்க மாட்டேங்கறாடா...’’

சோமு : ‘‘நீ குடுத்து வெச்சவண்டா. என் வொய்ஃபுக்கு சமைக்கத் தெரியாது. ஆனா சமைக்கறாடா..!’’

மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "கமகம கதம்பம்!"

19 May 2012

நான் பெற்ற இன்னொரு பரிசு!

ஹாய் எவ்ரிபடி! ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட உங்க முன்னாடி வந்திருக்கேன் நிரூ! சந்தோஷத்துக்குக் காரணம் இந்த விருது...


என் அன்பிற்கும் பாசத்துக்கும் உரிய, கலை அக்கா (கிராமத்துக் கருவாச்சி) எனக்கு இந்த விருதைக் கொடுத்திருக்காங்க. ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட அன்போட விருது தந்த அக்காவுக்கு நிறைய நிறைய நி்றைய நன்றி சொல்லிக்கறேன்.

ஆனா... அவங்க இந்த விருதை ஏன் தந்தாங்கன்றது உங்களுக்கெல்லாம் தெரியாதுதானே... சொல்றேன். உங்க மானிட்டரைக் கொஞ்சம் உத்துப் பாருங்க... கரெக்ட், அப்படித்தான். இப்ப வேகமா ஒரு கொசுவத்தி சுத்தறது உங்க கண்ணுக்குத் தெரிஞ்சிருக்குமே...  ‌எஸ்! ப்ளாஷ்பேக்தான்.

மூணாம் வகுப்பு படிக்கிற சமயம் நிரூவோட ஸ்கூல்ல ஆண்டு விழா வர்றதுன்னு பல போட்டிகள் வெச்சாங்க. மாறுவேடப் போட்டின்னு சொன்னதும், அவ ரொம்ப இன்ட்ரஸ்ட்டா ‘நான் கலந்துக்கறேன் மிஸ்’ன்னு சொல்லிட்டு வந்துட்டா. வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட விஷயத்தைச் சொன்னதும், அம்மா ‘‘காந்தித் தாத்தா வேஷம் போட்டா நல்லா இருக்கும் நிரூ. எப்படிப் பேசணும்னு நான் சொல்லித் தர்றேன்’’ன்னு சொன்னாங்க.  காந்தி வேஷம் போட்டா, இடுப்புல ஒரு துண்டை மட்டும் கட்டி, கைல ஒரு தடியக் கொடுத்தாப் போதும், ‌மாறு வேஷத்துக்கு வேற செலவு பண்ண வேணாம்கற அம்மாவோட சூப்பர் ப்ளான் அவளுக்குத் தெரியாம அப்பாவி நிரூவும் சந்தோஷமா ஒத்துக்கிட்டா.

‘‘என் பெயர் மோகன்தாஸ் கரமசந்த் காந்தி. நான் வெள்ளையரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்க உழைத்தேன். என்னை மகாத்மா என்று அழைக்கிறார்கள்’’ இதுதான் அம்மா சொல்லிக் கொடுத்த டயலாக். இதை மூணு நாளா சொல்லச் சொல்லி ப்ராக்டிஸ் கொடுத்தாங்க. நிரூவும் சரியாவே சொன்னா. அம்மாவுக்கு செம குஷி. ஆனா ஆண்டு விழா அன்னிக்கு காலையில நிரூவுக்கு அதிர்ச்சி காத்திருந்துச்சு. காந்தி வேஷத்துக்காக மொட்டை போட்டுக்கணும்னாங்க அம்மா.

நிரூவுக்கு பயங்கர கோபம். மாட்டேன்னா. ‘‘நிரூவுக்கு அழகான ஹேர். மொட்டைல்லாம் வேணாம். தலையில துண்டைக் கட்டி மொட்டைத் தலை மாதிரி பண்ணிடலாம்’’ன்னு நிரூவுக்கு சப்போர்ட் பண்ணாரு அவ மாமா. அம்மா அதெல்லாம் கேக்காம பிடிவாதமா, ‘‘சும்மாருங்கண்ணா. வளர்ற குழந்தைதானே... சீக்கிரம் வளர்ந்துடும்’’ன்னுட்டு மொட்டை போட வெச்சுட்டாங்க.

நிரூவுக்கு கோபமான கோபம். அழுகையான அழுகை. ஃபங்ஷனுககு வந்து ஸ்டேஜ் கிட்ட காந்தியா நின்னப்பவும் அவ கோபம் அடங்கலை. அவ பேரை அனவுன்ஸ் பண்ணி, கூப்பிட்டாங்க. மெதுவா நடந்து போய் ஆடியன்ஸைப் பாத்து நிக்கறா. கைதட்டல் கிடைச்சுது. ஆனா பாருங்க... கோபத்துல பேச வேண்டிய டயலாக் மறந்துடுச்சு. ‘‘நான்... நான்... மோகன்தாஸ் காந்தி’’ன்னு சொல்லிட்டு முழிக்கிறா.

ஸ்டேஜ்ல சைட்ல இருந்த அம்மா, கோபமா, ‘‘சுதந்திரத்துக்குப் பாடுபட்டேன்னு சொல்லேண்டி’’ன்னு சின்னக்குரல்ல சீறினாங்க. நிரூ ஒரு செகண்ட்கூட லேட்டாக்காம, ‘‘சுதந்திரத்துக்கப் பாடுபட்டேன்னு சொல்லேண்டி’’ன்னு மைக்ல சத்தமாச் சொல்லிட்டா. ஆடியன்ஸ்லருந்து ஒரே சிரிப்புச் சத்தம். வெக்கப்பட்டுக்கிட்டு ஸ்டேஜுக்குப் பின்னாடி ஓடிட்டா நிரூ.

‘‘கடைசி நேரத்துல ‌‌சொதப்பிட்டியேடி... உனக்கு ஒரு பிரைஸும் கிடைககாது.’’ன்னு அம்மா திட்டிககிட்டே இருக்க, அந்த நேரத்துல பரிசுகளை அறிவிச்சிட்டிருந்தாரு ஹெச்.எம். மாறுவேடப் ‌போட்டியில நிரூவுக்கு ஆறுதல் பரிசு கிடைச்சுது. ஏன்னா... பரிசு தரலைன்னு ‘ஆங்ங்ங்...’ன்னு சைரன் குரல்ல நிரூ அழ ஆரம்பிச்சா, அவளோட சத்தத்துல பதினெட்டு பட்டி ஜனங்களும் ராவெல்லாம் தூங்க முடியாம சண்டைக்கு வருவாங்கன்னு ஹெச்.எம்.முக்குத் தெரியும். அதனாலதான் பரிசு கொடுத்தார். ‘‘அந்த பயம் இருக்கட்டும்...’’னு நிரூவும் பரிசை வாங்கிட்டு சந்தோஷமா வீட்டு்க்கு வந்தா.

இந்த விஷயம் கலைக்காவுக்குத் தெரிஞ்சதாலதான் நிரூவுக்கு விருது கொடுத்திருக்காங்க. முன்னயாவது ஸ்கூல்ல அழுதா பதினெட்டு பட்டியும் அலறும். ‘‘எனக்கு விருது தரலையே...’’ன்னு கலை அக்காவோட தளத்துல இப்ப நிரூ அழுதான்னு வைங்க... நெட் மூலமா அகில உலகமும் எதிரொலிக்குமே, உலகம் தாங்காதேன்னு பயந்து போயித்தான் கலைக்கா எனக்கு விருது தந்திருக்காங்க. ஹா... ஹா....

அச்சச்சோ...  வேணாம் கலைக்கா... இதுக்கெல்லாம் கோபப்பட்டு கருக்கு மட்டையத் தூக்காதீங்க. என்னைப் பத்தி எதாச்சும் எழுதணும்னு சொன்னீ்ங்களேன்னுதான் இப்படிச் சொன்னேன். நீங்க அன்பா, பாசமாதான் கொடுத்தீங்கன்னு நம்ம மக்களுக்கெல்லாம் நல்லாவே தெரியும். சரிதானே ஃப்ரெண்ட்ஸ்!
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "நான் பெற்ற இன்னொரு பரிசு!"

16 May 2012

நிறைய அமிர்தம், கொஞ்சம் விஷம்!


போன வாரம் ஒரு அதிர்ச்சியான விஷயம் நடந்துச்சு. இன்னும் அந்த ஷாக்லருந்து நான் மீளலை. அதைப் பத்தி எழுதலாமா வேணாமான்னு ரொம்பவே யோசி்ச்சுட்டு, எழுதலாம்னு முடிவு பண்ணி, இப்ப உங்ககிட்ட பகிர்ந்துக்கறேன்.

என் ஃப்ரெண்ட் ஒருத்தி (பேர் போட வேணாம்னு கேட்டுக்கிட்டா) அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்குப் போகப் போறதா சொன்னா. நான் இதுவரைக்கும் போனதில்லை. ரொம்ப பிரம்மாண்டமான நூலகம்னு கேள்விப்பட்டிருக்கேன். அவகிட்ட எங்க கோர்ஸ்க்குத் தேவையான ஒரு ரெஃபரன்ஸ் எடுத்துக்கிட்டு வரச் சொன்னேன். சரின்னுட்டுப் போனவ, ஒரு மணி நேரம் கழிச்சு எனக்குப் போன் பண்ணினா.

‘‘நிரூ... என்ன பண்ணிட்டிருக்கே?’’

‘‘அம்மாவோட ஒரு ஃபங்ஷனுக்கு வந்திருக்கேன்டி...’’

‘‘அம்மா அங்க இருந்துக்கட்டும். நீ உடனே புறப்பட்டு லைப்ரரிக்கு வா. உனக்காக நான் வெயிட் பண்ணிட்டிருக்கேன். ரொம்ப முக்கியமான மேட்டர்...’’ அப்படின்னு கூப்பிட்டா. சரின்னு அம்மாட்ட சொல்லிட்டு, ஸ்கூட்டிய எடுத்துட்டு வேகமா அங்க போனேன்.

 உள்ள நுழைஞ்சு வண்டிய பார்க் பண்ணினதும்  டூ வீலர்க்கு பார்க்கிங் கட்டணம் எதுவும் கிடையாதுன்னு அங்க பாத்ததும் ரொம்ப குஷியாயிடுச்சு எனக்கு. லைப்ரரி வாசல்லயே என் ஃப்ரெண்ட் காத்திருந்தா. ‘‘எதுக்குடி அவ்வளவு அவசரமா கூப்பிட்ட?’’ன்னு கேட்டதுக்கு, ‘‘முதல்ல உள்ள வந்து லைப்ரரிய கொஞ்சம் சுத்திப் பாரு. அப்றம் சொல்றேன்’’ன்னா.

லைப்ரரி ரொம்ப அமர்க்களமா இருக்குது. ஃபுல்லா ஏ.ஸி. பண்ணியிருக்காங்க. ஒவ்வொரு ஃப்ளோர்லயும் சப்ஜெக்ட் வாரியா புத்தகங்கள் அடுக்கப்பட்டு, இன்டெக்ஸ்லாம் பண்ணியிருந்தது பார்க்கறதுக்கே ரம்மியமா இருந்துச்சு. அங்க இல்லாத சப்ஜெக்ட்‌‌ஸே இல்லங்கறதுதான் உண்மை. இவ்வளவு எழுத்தாளர்கள் இருக்காங்களா, இத்தனை சப்ஜெக்ட்ல புத்தகங்கள் இருக்கான்னு பிரமிப்பு உண்டாச்சு எனக்கு. சரி, இனி வாரா வாரம் ஸன்டேல இங்க விஸிட் பண்ணி, நிறைய புத்தகங்கள் படிச்சு (கொஞ்சநஞ்சம் இருக்கற) அறிவை டெவலப் பண்ணிக்கணும்னு முடிவே பண்ணிட்டேன்.

அவ, என்‌னை தனியா ஒரு பகுதிக்கு கூட்டிட்டுப் போயி, அங்கருந்த ஷெல்ப்லருந்து ஒரு புக்கை உருவி, ‘‘இதைப் படிடி’’ன்னு ஒரு பக்கத்தைப் பிரிச்சுக் காட்டினா. ஒரு பாரா படிச்சதுமே உறைஞ்சு போய் நின்னுட்டேன். ஆங்கிலப் புத்தகமான அதுல ஆண் பெண் உறுப்புகளையும், உடலுறவையும் பச்சை பச்சையான வார்த்தைகள்ல எழுதியிருந்துச்சு. லைஃப்ல இதுநாள் வரைக்கும் அப்படி ஒரு ஆபாசமான விஷயத்தை நான் படிச்சதில்லை. என்னைச் சுதாரிச்சுக்கறதுக்கு ரெண்டு நிமிஷமாச்சு எனக்கு. அவ முதுகுல பளார்னு ஒரு அறை வெச்சு, ‘‘சனியனே! சப்ஜெக்ட்டுக்கு ரெஃபரன்ஸ் எடுத்துட்டு வான்னா, இப்படி கர்மத்தைப் படிச்சுட்டு, என்னை வேற கூப்பிட்டுக் காட்டறியேடி....’’ன்னு குரலை உசத்தாம திட்டினேன்.

‘‘என்ன நிரூ... நான் படிச்சு ரசிச்சேன்னா நினைச்சே..? உன்னை படிச்சு ரசிக்கறதுக்கா கூப்பிட்டேன்? இங்க இருக்கற புத்தங்கள் எல்லாமே அரசு நியமிச்சிருக்கற ஒரு குழுவால பரிந்துரை செய்யப்பட்டு வாங்கி வைக்கப்பட்டிருக்கு. இந்த புக்ஸ் லல்லாம் பாரு... சப்ஜெக்ட்ல EROTICன்னு போட்டிருக்கான். இந்த வார்த்தைக்கு அர்த்தம் உனக்கும் எனக்குமே புரியுது. கவர்மென்ட்ல உள்ளவங் களுக்குப் புரியாதா? அட்லீஸ்ட், ஒரு புத்தகத்தை வாங்கி வெக்கறதுக்கு முன்னால சில பாராக்களாவது படிச்சு அது என்ன சப்ஜெக்ட்ன்னு தெரியாமலா வாங்கி வெபபாங்க?’’ன்னு கேட்டா.

‘‘நிஜம் தான்டி. படிக்கிறவங்க மனசுல வக்ரத்தை விதைக்கிற இந்த மாதிரி புத்தகங்கள் அரசு லைப்ரரியில எப்படின்னு எனக்கும் புரியலையே...’’ன்னேன் அதிர்ச்சியா.

 ‘‘உன்னைக் கூப்பிட்டுக் காட்டினதுக்கு காரணம் என்னன்னா... நீ ப்ளாக்ல எழுதறேன்னும், உன்னை (கூட) 40 பேர் படிக்கறாங்கன்னும் பெருமைப்பட்டுப்பியே... இதை நீ எழுதணும்கறதுக்காகத்தான். முன்னொரு காலத்துல அரசாங்கம் மது குடிக்கவே கூடாதுன்னு பூரண மது விலக்கை அமல் பண்ணியிருந்தது. எம்.ஜி.ஆர். காலத்துல, கள்ளு, சாராயத்துக்கு மட்டும் தடை விதிச்சுட்டு, ஒயின் ஷாப்க்கு அனுமதி கொடுத்து பார்ஷியலா மதுவிலக்கு அமல் பண்ணினாங்க. இப்ப அரசாங்கமே சந்துக்கு சந்து கடையத் திறந்து வெச்சு, தமிழக மக்களை ‘குடி’ மகன்களாக்கி அழகு பாத்துட்டிருக்கு. அது மாதிரித் தான்டி.... முன்னொரு சமயத்துல ஃபோர்னோகிராபி புக்ஸ்லாம் ப்ரிண்ட் பண்றதும் தப்பு, படிக்கிறதும் தப்புன்னு சட்டம் இருந்துச்சு. மறைச்சு வெச்சுப் படிப்பாங்களாம். இப்ப அதையும் அரசாங்கமே லைப்ரரியில வெச்சு மக்களைப் படிச்சு சந்தோஷப்படுங்கன்னு சொல்லுது. சந்தோஷமான இந்த நல்ல தகவலை நீ உன் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட ஷேர் பண்ணிக்க வேணாமாடி? அதான் உன்கிட்ட காட்டினேன்’’அப்படின்னு சொன்னா.

இதை அவ சிரிச்சுக்கிட்டே சொன்னாலும், அதுக்குப் பின்னாடி இருந்த வேதனையும், கோபமும் எனக்கு தெளிவாப் புரிஞ்சுச்சு. எனக்கே புரிஞ்சிடுச்சுன்னா, என்னை விட அறிவில பெரியவங்களான உங்களுக்கெல்லாம் புரியாமப் போய்டுமா ‌என்ன...
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "நிறைய அமிர்தம், கொஞ்சம் விஷம்!"

14 May 2012

மறுக்க முடியாத சாட்சி!


ங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் அரதன குப்தன்ங்கற ஒரு வணிகன் தன் மனைவியோட வாழ்ந்துட்டிருந்தான். அவனுக்கு ஒரு தாய்மாமன் புகார் நகரத்துல இருந்தார். அவருக்கு ஒரு மனைவியும் ரத்னாவளி என்கிற ஒரு மகளும் இருந்தாங்க. மதுரையில இருக்கற தன்னோட மருமகன் கல்யாணமானவனா இருந்தாக்கூட மனிதர்கள்ல ஒரு மாணிக்கம் போல நல்ல கேரக்டர் உள்ளவன்கறதால அவனுக்கே தன் மகள் ரத்னாவளியை கல்யாணம் பண்ணிக் குடுத்துடலாம்னு நினைச்சாரு அந்தத் தாய்மாமன்.

அந்தப் பு்ள்ள ரத்னாவளிக்கும் அரதனகுப்தனைக் கல்யாணம் பண்ணிக்கறதுல இஷ்டம் இருந்துச்சு. அதனால, அரதனகுப்தனுக்கு லெட்டர் மேல லெட்டரா அனுப்புனாரு தாய்மாமன். ரெண்டு கல்யாணம் பண்ணிக்கிட்டா, ஊர்ல இருக்கறவங்களும், உறவுகளும் என்ன பேசுமோன்னு பயந்து போயி, பதிலே சொல்லாம இருந்துட்டான் இந்த ஆள். இந்த நேரத்துல தாங்க விதி விளையாடிச்சு... ஒரே நாள்ல ரத்னாவளியோட தாயும், தந்தையும் இறந்து போயிட்டாங்க. அவ தனியா நின்னா.

தகவல் தெரிஞ்சதும் அரதனகுப்தன் வேகவேகமா புகாருக்குப் புறப்பட்டுப் போனான். மாமன் மகளைக் கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டு, அவளைக் கூட்டிக்கிட்டு மதுரைக்கு பயணம் புறப்பட்டான். ரத்னாவளி கட்டுசாத மூட்டை கட்டி எடுத்துக்கிட்டா. ரெண்டு பேருமா வர்ற வழியில ஒரு புன்னைவனம் இருந்ததைப் பாத்தாங்க. அந்த வனத்துல ஒரு வன்னிமரம் இருந்துச்சு. அதுக்கருகில ஒரு சிவலிங்கமும், தேனான சுவை நீருடன் ஒரு கிணறும் இருந்துச்சு. ஈஸ்வரனே காவலுக்கு இருக்கற அந்த இடத்தில நைட் தங்கிட்டுப் போலாம்னு முடிவு பண்ணி, கட்டுச் சோத்தை அவுத்துச் சாப்ட்டுட்டு, கிணத்துத் தண்ணிய அள்ளி அள்ளிக் குடிச்சாங்க.

நடந்து வந்த களைப்பும், உண்ட மயக்கமுமாச் சேர்ந்ததுல சொகமா வந்துச்சு உறக்கம். வன்னி மரத்தடியில தலைசாய்த்துப் படுத்து உறங்கிட்டாங்க. நட்டநடு ராத்திரியில ஒரு நல்லபாம்பு அந்தப் பக்கமா வாக்கிங் வந்துச்சு. கெரகம், சும்மாப் போகாம அது அரதனகுப்தனைக் கொத்தி போட்டுப் போய்டுச்சுங்க. அவன் ஆயுசு முடிஞ்சிடுச்சு. காலையில ரத்னாவளி எழுந்ததும் அவன் பாம்ப கடிச்சு செத்துக் கிடக்கறதப் பாக்கறா. ‘ஐயோ...’ன்னு அலறுறா. உருண்டு புரண்டு ஒப்பாரி வெச்சு அழறா...

அப்ப அந்த இடத்தை பக்தர்கள் புடைசூழ கிராஸ் பண்ணிட்டிருந்தார் தமிழ்நாடு டூர் அடிச்சுட்டிருந்த திருஞானசம்பந்தர்ங்கற மகான். அவரோட காதுல அந்தப் பெண்ணோட கதறல் கேட்டுச்சு. புன்னை வனத்துக்குள்ள வந்தாரு. இறந்து கிடந்த இளைஞனையும், அழுது பொலம்பற பொண்ணையும் பாத்துட்டு, ‘‘என்ன நடந்தது?’’ன்னு கேட்டாரு. அவ சொல்லி அழுதா. அவர் ஈசனை நினைச்சு இரு கரம் நீட்டி முறையிட்டாரு அந்தப் பொண்ணுக்காக. உடனே ஒரு அதிசயம் நடந்துச்சு. அரதனகுப்தனைக் கடிச்ச பாம்பு மறுபடி வந்து அவன் உடம்புல இருந்த தன்னோட விஷத்தை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சின மாதிரி உறிஞ்சி வாபஸ் எடுத்துக்கிச்சு. அவன் தூங்கி எந்திரிச்ச மாதிரி கண்ணு முழிச்சு, எல்லாரும் கேக்கற ‘‘நான் எங்க இருக்கேன்’’கற டயலாக்கை தவறாம கேட்டான். ரத்னாவளிக்கு ரொம்ப குஷியாய்டுச்சு.

சம்பந்தர் சுவாமிகள் அவங்களைப் பத்திக் கேட்டதும் எல்லாத்தையும் விரிவாச் சொன்னாங்க. அவர் சிரிச்சாரு. ‘‘எப்போ, ஈஸ்வரன் எதிர்ல  ரெண்டு பேரும் ஒண்ணா இரவைக் கழிச்சீங்களோ, அப்பவே உங்களுக்கு கல்யாணமானதாதான் அர்த்தம். அதனால, மதுரைக்கு போய் கல்யாணம் பண்ணிக்கறதவிட, ஈசனுக்கு எதிர்லயே ஒரு தாலியக் கட்டி இவளை மனைவியாவே மதுரைக்குக் கூட்டிட்டுப் போ’’ன்னாரு.  பெரியவர் சொன்னா மறுபேச்சு ஏதுன்னு அவனும் ஈசன் எதிர்லயே ரத்னாவளிக்கு ஒரு தாலியக் கட்டி மதுரைக்கு தன் வீட்டுக்கு கூட்டிட்டுப் போனான். அவளோட குடும்பம் நடத்த ஆரம்பிச்சு, அவங்களுக்கு ரெண்டு குழந்தைங்களும் பொறந்துடுச்சு.

ரு நாள் விளையாட்டு சண்டையில, மூத்தவளின் குழந்தைகளை இளையவள் (ரத்னாவளி) குழந்தைங்க அடிச்சிடுச்சுங்க. அந்தப் புள்ளைங்க அழுதுட்டே அம்மாட்ட கம்ப்ளைண்ட் பண்ணிச்சு. ஏற்கனவே தன் லை‌ஃபை பங்கு போட்டுக்கிட்ட ரத்னாவளி மேல அந்தம்மாவுக்கு காண்டு. அதனால அவ, ரத்னாவளிய வைப்பாட்டின்னும், முறையா தாலி கட்டிக்காம தன் கணவனை மயக்கினவன்னும் தி்ட்டி சண்டை போட்டு, அவளை வீட்டை விட்டு விரட்டிட்டா. தான் தாலி கட்டின மனைவின்னு வாதாடினதை அவ கேக்காததால ரத்னாவளி அவள் மேல வழக்குப் போட்டா.

மதுரை ஆலயத்தோட மைய மண்டபத்துல அவளோட வழக்கை விசாரிச்சாங்க. (அப்பல்லாம் அதான் கோர்ட் போல) வன்னி மரத்தடியில, கிணற்றங்கரையில, ஈசன் முன்னிலையில தன் கல்யாணம் நடந்துச்சுன்னு ரத்னாவளி சொல்ல, அதை பொய்யின்னு சொன்னா மூத்தவள்.  தான் உத்தமின்னும், பத்தினின்னும் ரத்னாவளி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், யாரும் நம்பலை. நாட்டாமை மாதிரி சாட்சி என்னன்னு கேக்கவும், ரத்னாவளி வேற வழி இல்லாம ஐ விட்னஸா இருந்த ஈசன் கிட்ட அழுது முறையிட்டா. ஈசன் அசரீரியா குரல் கொடுத்தாரு. ‘‘ரத்னாவளி வன்னி மரத்தடியில என் முன்னால கல்யாணம் பண்ணிக்கிட்டது உண்மைதான். அவ கல்யாணத்துக்கு சாட்சியா இருந்த வன்னிமரமும், கிணறும், லிங்கமும் இந்தக் கோயில்ல என் சந்நிதிக்கு ஈசான்ய மூலையில ‌கொண்டுவந்திருக்கேன். அதைப் பாத்தீங்கன்னா, ரத்னாவளி களங்கமற்றவன்னு உங்களுக்கே புரியும்’’ன்னு சொல்லிச்சு அசரீரி.

உடனே எல்லாரும் ஓடிப் போய் சொக்கநாதர் சன்னதியோட ஈசானிய மூலையில பாத்தாங்க. அங்க சிற்ப வடிவுல வன்னி மரமும், கிணறும், லிங்கமும் இருந்துச்சு. அவ்வளவு தான். லார்ட் ஈஸ்வரனே சாட்சி சொன்னப்புறம் கேஸ் நிக்குமா? ரத்னாவளிக்கு சாதகமா தீர்ப்பு கொடுத்தாங்க. மூத்தவளும் வாய் பேசாம அவளை ஏத்துக்கிட்டா. அன்னிலருந்து ரெண்டு பேரும் ஒத்துமையா, சண்டை போடாம அரதனகுப்தனோட குடும்பம் நடத்தத் தொடங்கினாங்க. இந்தக் கதை திருவிளையாடற் புராணம் என்கிற நூலில் சொல்லப்பட்டிருக்கு.

-சமீபத்துல மதுரைக்குப் போயிருந்தப்ப, சிவன் சன்னிதி மூலையில இந்தக் கிணறு, லிங்கம், மரம் மூணையும் மக்கள் சுத்தி வந்து கும்பிடறதப் பாத்துட்டு நான் கேட்டதுக்கு எங்கம்மா சொன்ன கதை இது. உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருந்தா... வெல், மறுபடி சாமி கதையப் படிச்சா தப்பில்ல தானே... கேள்விப்பட்டதில்லைன்னு சொன்னீங்கன்னா... நான் தெரிஞ்சுகிட்டதை உங்களோட ஷேர் பண்ணிக்கிட்டதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்! ஸீ யு!
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "மறுக்க முடியாத சாட்சி!"

9 May 2012

என் முதல் தொடர்கதை!


ன் இனிய தமிழ் மக்களே...! உங்‌களோடும் இந்த மண்ணோடும் விளையாடி வந்த உங்கள நிரஞ்சனா எழுதும் முதல் தொடர்கதை இது. இதற்கு உங்கள் ஆதரவைத் தர வேண்டுமென்று வேண்டுகிறாள் உங்கள் பாசத்துக்குரிய இந்த நிரூ!

              காதல் (தோல்வி) வட்டம்

‘அப்படி எதை கண்ணன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறான்?’ சத்தம் இல்லாமல் பூனைப் பாதம் வைத்து அவன் பின்னால் சென்று எட்டிப் பார்த்தான் அவன் அறைத் தோழன் ஆனந்த். ‘‘அடப்பாவி..! உஷாவோட ஃபோட்டோ உனக்கெப்படிடா கிடைச்சது?’’ என்று ஆனந்த் குரல் கொடுக்க, தூக்கிவாரி்ப் போட்டவனாய் திரும்பினான் கண்ணன்.

‘‘டேய் ஆனந்த்! இதை உஷாவுககுத் தெரியாம சுட்டுட்டு வந்தேன். நான் அவளை உயிருக்குயிரா காதலிக்கிறேன்டா. இந்த ஜென்மத்துல அவளை விட்டா வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கப போறதில்லன்னு முடிவோட இருக்கேன்டா... ஆனா, அவகிட்ட ‌சொல்லத்தான் தைரியம் வர மாட்டேங்குது...’’ என்று கண்ணன் சொன்னதைக் கேட்டு சிரித்தான் ஆனந்த்.

‘‘டேய், காதல்கிறது ஜலதோஷம் மாதிரிடா. எப்ப வேணா வரும். யாருக்கு வேணா வரும். ஆனா அதைச் சொல்றதுக்கு தயங்கக் கூடாதுடா. நான்கூட சமீபத்துல உஷாவோட ஃப்ரெண்ட் ராதிகா‌வை விரும்பிட்டிருக்கேன். நாளைக்கு அவ பர்த்டேங்கறதால தயங்காம போய் என் காதலைச் சொல்லப் ‌போறேன். தயங்கினா ‌வேலைக்காகாது கண்ணா. இப்பவே போய்ச் சொல்லிடு’’ என்ற ஆனந்தின் வார்த்தைகளி்ல் தைரியம் பெற்ற கண்ணன் ஒரு முடிவுடன் உஷாவைச் சந்திக்கப் புறப்பட்டான்.

                                                                 *   *   *   *

லைப்ரரியில் தனியாய் உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த உஷாவை நெருங்கினான் கண்ணன். அ‌வனை ஏறிட்ட அவளிடம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, கையிலிருந்த ஒற்றை ரோஜாவையும், காதல் சொல்லும் கடிதத்தையும் நீட்டினான். பொறுமையாகப் படித்த அவள், சைகை காட்டி அவனை லைப்ரரியை விட்டு வெளியே வரச் சொல்லி நடந்தாள். வெளியே வந்து மரநிழலில் நின்றதும் கண்ணனிடம் ‌சொன்னாள். ‘‘மிஸ்டர் கண்ணன்! நீங்க ரொம்ப நல்லவர். எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவர்ங்கறதை நான் கவனிச்சிருக்கேன். ஆனா என்னால உஙகளை லவ் பண்ண முடியாது. ஏன்னா.... என் மனசை ஏற்கனவே ஒருத்தர்கிட்டப் பறி கொடுத்திட்டேன். ஸாரி கண்ணன்... என்னை மறந்துடுங்க’’ என்று விட்டு அவள் செல்ல, சிலையாய் உறைந்து நின்றான் கண்ணன்.

                                                                     *   *   *   *

ராதிகா பார்க்கில் தனியாய் அமர்ந்திருக்க, அவளை நெருங்கினான் ஆனந்த். ‘‘ஹாய் ராதிகா! மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் த டே!’’ என்றவாறு அவளிடம் பொக்கேயை நீட்டினான். ‘‘தேங்க்யூ’’ என்று சிரித்தபடி வாங்கிக் கொண்டாள். ‘‘நீ எப்ப தனியாவேன்னு காலையில இருந்து காத்துட்டிருந்தேன் ராதி! நான் சுத்தி வளைச்சுப் பேச விரும்பலை. ஐ லவ் யூ...!’’ என்றான் ஆனந்த். ‘‘ஸாரி ஆனந்த்! என்னை மன்னிச்சுடுங்க... நான் வேற ஒருத்தரை விரும்பறேன். இன்னிக்கு என்னோட லவ்வை அவர்கிட்டச் சொல்லிடறதா முடிவு பண்ணி, அவரை வரச் சொல்லியிருக்கேன். அவருக்காகத்தான் இப்ப வெயிட் பண்ணிட்டிருக்கேன்...’’ என்றாள். ரத்தமெல்லாம் இழந்தது‌ போல முகம் வாடியவனாய் தொய்வுடன் நடந்தான் ஆனந்த்.

ஆனந்த் நகர்ந்த ஐந்தாவது நிமிடம், கண்ணன் வந்தான். ‘‘என்ன ராதிகா... எதுக்கு ஃபோன் பண்ணி அவசரமா வரச் சொன்னீங்க?’’ என்று கேட்க, அவனிடம் தன் காதலைச் சொன்னாள் ராதிகா. கண்ணன் விரக்தியாய்ச் சிரித்தான். ‘‘உன் ஃப்ரெண்டு உஷாவை நான் லவ் பண்றேன் ராதிகா. அவ என்னை விரும்பலைன்னு ‌சொல்லிட்டா. இருந்தாலும் என்னால வேற ஒருத்தியை நினைச்சே பார்க்க முடியலை. ஸாரி...’’ என்றவன் மறுபேச்சு பேசாமல் கிளம்பிச் சென்றுவிட, அதிர்ந்தவளாய் உட்கார்ந்திருந்தாள் ராதிகா.

                                                                    *   *   *   *

பார்க்கை விட்டு தொய்ந்த நடையுடன் வெளியே வந்த ஆனந்த்தை, ‘‘ஹாய் ஆனந்த்!’’ என்ற குரல் நிறுத்தியது. உஷா! ‘‘உங்களைத் தனியாப் பாத்துப் பேசணும்னு பல நாள் நினைச்சதுண்டு. இப்பத்தான் கண்ணன் இல்லாம தனியா கிடைச்சிருக்கீங்க. இனியும் ‌ச‌ொல்லாம இருக்க முடியாது ஆனந்த். ஐ லவ் யூ!’’ என்றாள் உஷா. மேலும் ஒரு அதிர்ச்சி தாக்க, வியப்புடன் அவளைப் பார்த்தான் ஆனந்த். ‘‘உஷா1 கண்ணன் உ.ன்னை....’’

‘‘தெரியும் ஆனந்த். என்கிட்ட சொன்னார். ஆனா, உங்களை நினைச்சிருக்கற இந்த மனசில வேற யாருக்கும் இடமில்லைன்னு அவர்ட்ட சொல்லிட்டேன்’’ என்றாள் உஷா. ‘‘நானும் அப்படித்தான் உஷா. உன் ஃப்ரெண்ட் ராதிகாவை உயிருக்குயிரா விரும்பறேன். அவ என் காதலை மறுத்துட்டாலும், இந்த உயிர் இருக்கற வரைக்கும் வேற பொண்ணை என்னால ஏத்துக்க முடியாது உஷா’’ என்றவனாய் அந்த இடத்தை வி்ட்டு ஆனந்த் அகல, மனம் நொறுங்கிவளாய் திக்பிரமையுடன் நின்றிருந்தாள் உஷா.

                                                                      *   *   *   *

ன்னங்க பாக்கறீங்க...?

கண்ணன் உஷாவை விரும்ப, உஷா ஆனந்தை விரும்ப, ஆனந்த் ராதிகாவை விரும்ப, ராதிகாவோ கண்ணனை விரும்ப இவங்க யாரும் விட்டுக் கொடுக்காததால இந்தக் காதல் வட்டம் சன் டிவில வர்ற மெகா சீரியல்களே முடிஞசாலும்கூட முடியாம தொடரப்போற ஒரு தொடர்கதை தானே?

எப்பூடி இருக்குது நிரூ எழுதின தொடர்கதை! ஹய்யய்யோ... ஹேமாக்கா கருக்கு மட்டையத் தேடறாங்க. ராஜியக்கா கையில பூரிக்கட்டை தெரியுதே.... நிரூஊஊஊஊஊ ஓடிட்ரா செல்லம்!
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "என் முதல் தொடர்கதை!"

5 May 2012

தேவதை பெற்ற விருது


ஹாய்... எல்லாரும் நலம்தானே...!

ஏதோ மனசுல தோணறதையும், கண்ணுல படறதையும் உங்க எல்லாரோடையும் ஷேர் பண்ணிக்கலாம்னு எழுத ஆரம்பிச்சேன். ஆனா எனக்கு நிறைய Friends இங்க கிடைப்பாங்கன்றது நான் எதிர்பார்க்காதது. அதைவிட முக்கியமானது என்னை தங்கள் வீட்டுச் செல்லப் பிள்ளையா ஏத்துக்கிட்ட உறவுகள கிடைச்சிருக்கிறது. இப்ப இந்த சந்தோஷங்களை விடப் பெரிசா இனனொரு விஷயம் நடந்திருக்கு.


‘கிராமத்து கருவாச்சி’ என்கிற தளத்துல கவிதைகளும், கட்டுரைகளும், அழகழகா எழுதிட்டு வர்ற கலை அக்கா எனக்கு 'Sunshine Award' கொடுத்திருக்காங்க. புதுசா வந்திருக்கற என்னை அங்கீகரிச்சு எனக்குக் கிடைச்சிருக்கற முதல் விருதுங்கறதால ரொம்ப ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்றேன். கலைக்காவுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட என் நன்றியைத் தெரிவிச்சுக்கறேன். அவங்களுககு மட்டுமில்ல... என் தளத்தைப் படிச்சுக் கருத்திடற ஒவ்வொருத்தருக்கும் என் மனமார்ந்த நன்றி.
                                                                   * * * * * *

‘நிழல் நிஜமாகிறது’ ங்கற படம் பார்த்திருககீங்களா? அதுல ‌வீட்டு வேலைககாரியா இருக்கற ஷோபா மனசுக்குள்ள தன்னை ஒரு மகாராணியா கனவு கண்டு தர்பார் நடத்துவாஙக. அந்த மாதிரி கேரக்டர் தான் நானும்! பலதடவை என் மனசுல ஒரு அரசவைய உண்டாக்கி அரசியா கற்பனை பண்ணி தர்பார் நடத்தினதுண்டு.

சின்ன வயசுல நான் படிக்கிற புத்தகங்களும், பார்த்த சினிமாக்களும் இரவு கனவுல வரும். ‘Alice in Wonderland' படிச்சுட்டுத் தூங்கின அன்னிக்கு கனவுல நான் அந்த கேரக்டர்களோட பேசற மாதிரியும், ஆடிப் பாடற மாதிரியும் கனவு. ‘ஸ்பைடர் மேன்’ படம் பார்த்த அன்னி்க்கு கனவுல நான் ‘ஸ்பைடர் கேர்ள்’ஆ சாகசங்கள் பண்ணினேன்.

‘கன்னத்தில் முத்தமிட்டால்’ங்கற படம் பாத்துட்டு, நானே யுத்த பூமியில இருக்கற மாதிரியும், என்னைச் சுத்தி ஷெல் வெடிக்கற மாதிரியும் கனவு கண்டு கத்தி, அப்பா அம்மாவை எழுப்பி, திட்டு வாங்கினதுண்டு. ‘‘அவளுக்கு பயந்த சுபாவம்னு தெரியும்ல... இப்படிப் படத்துக்கு ஏன் கூட்டிட்டுப் போறீங்க’’ன்னு அம்மாகிட்ட அப்பா திட்டு வாங்கினார். ஆனா அந்தப் படத்துல மேம்போககாதான் சொல்லியிருக்காங்கன்னு நிஜத்துல அதைவிடப் பலமடங்கு கொடுமையான விஷயங்கள் நடந்துச்சுன்னும் அப்பா சொல்லி, நியூஸ் பேப்பர் கட்டிங்குகளையும், சில வீடியோக்களையும் காட்டினப்ப, கண் கலங்கி அழுதுட்டேன். பாவம் அவுங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருக்காங்க!

இப்பல்லாம் இந்த மாதிரி கனவுகள் என்னை வந்து அடிக்கடி தொந்தரவு பண்றதில்லைதான். (வளர்ந்துட்டேன்ல...) ஆனாலும்கூட கற்பனை கன்னாபின்னானனு தறிகெட்டு ஓடறது நடக்கத்தான் செய்யுது. இந்த அவஸ்தைய எப்படி உங்களுககுப் புரிய வெக்கிறதுன்னுதான் தெரியல... உதாரணமாச் சொல்றதுன்னா, போன பதிவுல எழுதின ‘டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு’ நாடகத்தைப் படிககிறப்பவே, கோர்ட் ஒண்ணுல ஆர்க்யூமெண்ட்ஸ் நடக்கறது என் மனசுல படமா ஓடுச்சு. நானும் அங்கயே இருக்கற மாதிரி ஒரு ஃபீலிங். இதே மாதிரி சில சினிமாக்களைப் பார்க்கற போதும் நடக்குது.

அம்மா கிட்ட எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்கற மாதிரி இதைப் பத்தியும் சொன்னேன். எனக்கு ஏதோ மனசுல கோளாறோன்னு பயப்படறாங்க. அப்பாவானா, இதுல்லாம் சகஜம்... இன்னும் சில வருஷங்கள்ல இதுவும் இவகிட்டருந்து போயிடும். மாறிடுவாங்றார். இந்த மாதிரியான அனுபவம் எனக்கு மட்டும்தானா? இல்ல, இது எல்லாருக்கும் நடக்கற விஷயமா...? படிக்கிற நீங்க என்ன நினைககிறீங்கன்றத தெரிஞ்சுக்க ரொம்ப ரொம்ப ஆவலோட காத்திருக்கேன்.
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "தேவதை பெற்ற விருது"
 

கலை அக்கா தந்த பரிசுகள்!

கலை அக்கா தந்த பரிசுகள்!

என் தோழி விஜி தந்த விருது!

என் தோழி விஜி தந்த விருது!