Pages

Ads 468x60px

Featured Posts

30 August 2012

நான் வெறுக்கும் ஆண்கள்!


திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் எனக்கு விருது அளித்து, அதில் நான் சந்தோஷம் அடைந்து குதித்துக் கூத்தாடியதைப் பார்த்து ரொம்பவே ரசித்திருப்பார் போல இருக்கிறது. இந்தச் சின்னப் பெண் இன்னும் சந்தோஷப்படட்டுமே என்று என்னிடம் மற்றொரு விருதையும் பகிர்ந்திருக்கிறார். அவருக்குச் சொல்கிற நன்றி என்கிற சாதாரண வார்த்தை என் மன உணர்வுகளை ஒருபோதும் வெளிப்படுத்தி விடாது. தூரத்தில் இருக்கிற காரணத்தால் கண்கள் பனிக்க அந்த வார்த்தையைத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. நன்றி ஐயா.நிரஞ்சனாவி்ன் டைரியிலிருந்து :

ஏ‌னோ தெரியவில்லை... ஆண்களின் இரண்டு செயல்களைப் பார்க்கிற போதெல்லாம் பளார் பளாரென்று அடிக்க வேண்டும் போல ஒரு வெறுப்புப் பொங்கி வருகிறது. முதலாவது விஷயம்... மரங்களின் அடியிலும், பல சமயம் பரபரப்பான சாலையின் ஓரங்களிலும் திரும்பி நின்று பாண்ட் ஜிப்பை இறக்கி விட்டு இயற்கை உந்துதலைத் தணிப்பது. விளக்குக் கம்பத்தைக் கண்டால் காலைத் தூக்குகிற உயிரினத்திற்கும் இவர்களுக்கும் பெரிதாக வித்தியாசம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. கண்ணில் படும் போதெல்லாம் முகத்தைத் திருப்பிக் கொள்கிற எனக்குள்ளே அருவருப்பும், கோபமும் பொங்கி வரத்தான் செய்கிறது.

இத்தகைய இயற்கை உபாதை பெண்களுக்கு மட்டும் கிடையாதா? இருந்தாலும் ஏன் செய்வதில்லை என்றால் வளர்க்கப்படும் முறை. சிறு வயதிலிருந்தே இப்படிச் செய்வது மானக் கேடு என்று அறிவுறுத்தி வளர்க்கப்படும் பெண்கள், தங்களின் கட்டுப்பாட்டுக்குள் அதை வைக்க முடிகிறது. அதுவே தன் மகன் ‘உச்சா’ ‌போகணும் என்றால் பொறுமையைப் போதித்துப் பழக்காமல், கிடைத்த இடத்தில் செய்ய வைத்து, இது தவறேயில்லை என்பதைக் குழந்தை முதலே மனதில் பதித்து விடுகிறோம். ஆகவே பெற்றோர் வளர்க்கும் முறையிலும் தவறு இருக்கிறது என்பது என் மனதுக்குத் தோன்றுகிற விஷயம். பின்னாளி்ல் எனக்குப் பிறக்கும் மகன் இப்படிச் செய்தால் முதுகுத் தோலை உரித்து விடுவேன். ‘‘ஐயோ... பாவம்டி!’’ ‘‘ஏய், மனஸ்! என்னை மாதிரி ராட்சசிக்குப் பிள்ளையாப் பிறந்தா அனுபவிச்சுதான் ஆகணும், தெரிஞ்சுக்கோ’’ ‘‘நான் ‌சொன்னது பிள்ளைய இல்லம்மா... உன் கழுத்துல தாலிகட்டப் போற அப்பாவி ஜீவனை நினைச்சு...’’ ‘‘அடிங்... எடு அந்தச் செருப்பை!’’

இன்னொரு கெட்ட பழக்கம்- நெரிசலான ட்ராஃபிக் மத்தியில போய்ட்டிருக்கும் போது சிக்னல்ல வண்டி நின்னுட்டாப் போதும், தலையைச் சாய்ச்சு வாயில இருக்கற எதையாவது துப்பறதும், பஸ்ல ஜன்னல் வழியா துப்பறதும். அறிவு கெட்ட மடையர்கள்...! பின்னால யாராவது இருக்காங்களான்னு கூடப் பாக்காம பல சமயங்கள்ல இப்படித் துப்பிடறாங்க. அதனோட சில துளிகள் தப்பித் தவறி சுடிதார் முனைல பட்டுட்டாக் கூட அருவருப்பா இருக்கு. அரசாங்கம் மட்டும் எனக்கு ஒரு பிஸ்டலையும், கேஸ் போட மாட்டோம்னு அனுமதியும் குடுத்துட்டா, நிறையப் பேரை இரக்கமேயில்லாம சுட்டுத் தள்ளிடுவேன்.  ‘‘புதிய பூலான் தேவி கிளம்பிட்டாய்யா...’’ ‘‘தோ பாரு மனஸ்! சீரியஸாப் பேசிட்டிருக்கறப்ப ஜோக் அடிக்காத!’’

‘‘ஜோக் அடிக்கலை நிரூ. சீரியஸாவே கேக்கறேன். பொம்பளைங்க இப்படித் துப்பறதை நீ பார்த்ததே இல்லையா என்ன? அதுக்கென்ன சொல்ற?’’ ''அதுவா..? பழம், பூ விக்கறவங்க மாதிரி சில அடித்தட்டு பெண்கள் இப்படிச் செய்யறதுண்டு. அது சதவீதத்துல மிகக் குறைவு.'' இவனுங்களை மாதிரி டிராஃபிக் நடுவுல, பான்பராக் மாதிரி கண்டதையும் மென்னுட்டு - சில சமயம் வண்டி ஓடிட்டிருக்கறப்ப கூட - அப்படியே தலையக் குனிஞ்சு துப்பற அநாகரீகம் 90 சதம் ஆண்கள் கிட்டத்தான் பாக்கறேன். எல்லாம் தான் ஸ்ட்ராங்கர் ஸெக்ஸ், ஆண்கள் எதையும் பண்ணலாம்கற திமிர் மனோபாவம். இதைப் பாக்கறப்பல்லாம் கோபமும், வெறுப்பும் சமவிகிதத்தல வருது.

சிங்கப்பூர் மாதிரி நாடுகள்ல இப்படி ரோட்டோரத்துல துப்பினா, குப்பை போட்டா அபராதம்னு இருக்கறதால சாலைகள் சுத்தமா இருக்கு. இங்கயும் அப்படிப் பண்ணினா சரியா இருக்கும்கறது என்னோட எண்ணம். ஆனா அப்படிப் பண்றதுக்கு முன்னால அரசாங்கம் எல்லாச் சாலைகள்லயும் நிச்சயமா ஒரு பெரிய குப்பைத் தொட்டி வைக்கணும். அப்படி்ல்லாம் ஒரு நல்ல ஆட்சி என்னோட பேரன், பேத்திகள் காலத்துலயாவது அமைஞ்சா சந்தோஷம்தான். ஹும்...!

மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "நான் வெறுக்கும் ஆண்கள்!"

18 August 2012

மகிழ்ச்சிக்கு மேல மகிழ்ச்சி!

டந்த ஒரு வாரமா என்னால வலைப் பக்கம் அதிகம் உலவ இயலாமல் போயிடுச்சு. ஆனா அடுத்தடுத்து ரெண்டு சந்தோஷ நிகழ்வுகள் என்னை மகிழ்ச்சியில துள்ளிக் குதிக்க வெச்சிடுச்சு. என் தங்கை போன்ற யுவராணி தமிழரசன் எனக்கு ‘ஸன்ஷைன் அவார்ட்’ கொடுத்திருக்காங்க.


தைப் பார்த்து சந்தோஷமா நன்றி சொல்லி, அந்த மகிழ்ச்சி அடங்குவதற்கு முன்னாலேயே நான் ரொம்ப மதிக்கற சிறுகதை மன்னர் வை.கோபாலகிருஷ்ணன் சார் எனக்கு ‘லீப்ஸ்டர்‘ அவார்டைக் கொடுத்து இன்னும் சந்தோஷக் கடல்ல ஆழ்த்திட்டாரு.


ந்த ரெண்டு விருதுகளையும் என்மேல இருக்கற அன்பால என்னோட பகிர்ந்துட்டிருக்கற இந்த உறவுகளுக்கு என் மனமார்ந்த நன்றி. இன்னும் பொறுப்பா நல்ல விஷயங்கள் நிறைய எழுதணும்கற உணர்வு மனசுக்குள்ள இப்ப பயமா வளர்ந்துட்டிருக்கு. எனக்கு விருது தந்த இவங்க ரெண்டு பேருக்காகவும் சத்குரு ஜக்கி வாசுதேவ் எழுதியதுல எனக்குப் பிடிச்ச இந்த விஷயத்தை இங்க பகிர்ந்துக்கறேன்.

                    மனதைக் கட்டுப்படுத்த வேண்டுமா?

ன் மனம் தேவையில்லாததை எல்லாம் நினைக்கிறது. என் மனதை நான் எப்படிக் கட்டுப்படுத்துவது? தியானம் பழக வேண்டுமென்றால் மனதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிறார்களே..?

முதலில் உங்கள் மனதை ஏன் கட்டுப்படுத்த முயற்சிக்கிறீர்கள்? கெட்ட விஷயங்களை நினைக்கக் கூடாது, மனதைக் கட்டுப்படுத்த பழக வேண்டும் என்றெல்லாம் ஆன்மீகவாதிகள் ‌என்று சொல்லப்படுபவர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள். ஆனால் அப்படி முயற்சிக்கும் போதெல்லாம் மனம் அந்த விஷயங்களைத்தான் முழு நேரமும் நினைக்க ஆரம்பிக்கும். உங்கள் மனதின் செயலைப் பொறுத்தவரையில் வகுத்தல், கழித்தல் எல்லாம் கிடையாது. அங்கே கூட்டல், பெருக்கல் மட்டும்தான். உங்கள் மனதிலிருந்து அதிரடியாக ஓர் எண்ணத்தையாவது உங்களால் நீக்க முடியுமா? முடியவே முடியாது. இல்லையா? ஏதாவது ஒன்றைக் குறித்து இன்று நினைக்கக் கூடாது என்று நீங்கள் முடிவு செய்தால் அன்று முழுவதும் அதைப் பற்றியேதான் நினைப்பீர்கள். மனதின் அடிப்படைத் தன்மைகளைப் புரிந்து கொள்ளாமல் இப்படித்தான் தவறாக முயறசித்துக் கொண்டு இருக்கிறோம்.

தியானம் செய்யும் போது என் இதயம் துடிப்பதை நிறுத்த வேண்டும் என்று எப்போதாவது எண்ணுகிறீர்களா? என் சிறுநீரகம் தன் செயலை நிறுத்த வேண்டும் என எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? கிடையாது. அவை தத்தம் செயலைத் தொடர்ந்து நடத்த அனுமதித்தீர்கள் தானே? பிறக மனமும் தனது வேலையைச் செய்ய நீங்கள் ஏன் அனுமதிக்கக் கூடாது? உங்களால் எப்போதும் மனதைக் கட்டுப்படுத்த முடியாது. இதுவரை யாராவது தன் மனதைக் கட்டுப்படத்தி இருக்கிறார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா? யாரும் அப்படிச் செய்ததில்லை. அப்படிச் செய்யவும் முடியாது.

இந்த மனம் ஒரு புழுவிலிருந்து, ஒரு பூச்சியிலிருந்து, ஒரு குரங்கிலிருந்து தற்போது மனிதன் வரை இத்தகைய பரிணாம வளர்ச்சி அடைய லட்சக்கணக்கான வருடங்கள் எடுத்திருக்கிறது. இவ்வளவு மகத்தான முயற்சிக்குப் பின் இத்தகைய மனம் .உங்களுக்குக் கிடைத்திருக்கும் போது அதைக் கட்டுப்படுத்த ஏன் முயற்சிக்கிறீர்கள்? அது முழுத் தீவிரத்துடன் இருக்க வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். ஆனால் அற்புதமாக இருக்க வேண்டிய மனம் தற்போது உங்களுக்குத் துன்பத்தை உற்பத்தி செய்கிற இயந்திரமாக மாறிவிட்டத.

உங்களின் எல்லாத் துன்பங்களும் உங்கள் மனதில்தானே உற்பத்தியாகின்றன? மனதை எப்படி இயக்குவது என்று உங்களுக்குத் தெரியாததால்தான் அங்கிருந்து துன்பங்கள் உற்பத்தியாகின்றன. இதே மனதை வைத்து ஆனந்தம் எப்படி உற்பத்தி செய்வது என்று தெரிந்து விட்டால் பிறகு மனதைக் கட்டுப்படுத்த எண்ணுவீர்களா? ஒருபோதும் மாட்டீர்கள்! எனவே உங்கள் மனதை எப்படிச் சரியாக இயக்க வேண்டும் என்பதைத்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

உங்கள் மனதைக் கட்டுப்படுத்தத் தேவை இல்லை. சில எளிமையான பயிற்சிகள் உள்ளன. அவற்றைக கடைப்பிடித்தால் உங்களுக்கும் உங்கள் மனதுக்கும் சிறிய இடைவெளி இருக்கும். அந்த இடைவெளியை நீங்கள் உருவாக்கி விட்டால் பிறகு உங்கள் துன்பங்கள் அனைத்தும் நிரந்தரமாக முடிவுக்கு வந்து விடும்.

மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "மகிழ்ச்சிக்கு மேல மகிழ்ச்சி!"

8 August 2012

நல்லதாய் நாலு விஷயம்!


‘‘சும்மா மொக்கைக் கதையா எழுதிட்டு இருக்காதடி, படிக்கறவங்களுக்கு பிரயோஜனப்படற மாதிரி நல்லதா நாலு விஷயம் சொல்லு. உருப்படியா இதுவரைக்கும் நீ என்னமாவது எழுதியிருக்கியாடி?’’ அப்படின்னு சும்மாச் சும்மா கிண்டல் பண்ணி எங்க அம்மா ரொம்ப வெறுப்பேத்தறாங்க மை லார்ட்! அதனால இநத சிங்கம் சிலுத்துக்கிட்டு சிங்கிளாக் கௌம்பிருச்சு...

 இந்தத் தடவை உங்களுக்கு நல்லதா நாலு விஷயம் சொல்லப் போறதா முடிவு பண்ணிட்டேன்... ‘ஹும்...! உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை’ன்னு யாரோ முனகறாங்க. என்னங்க பண்றது... ஆல் இஸ் Fate! நீங்க தப்பவே முடியாது.  ஆனா பாருங்க... எனக்குப் பிடிச்ச நெல்லிக்காய்தான் இதுலயும் ஹீரோயின்! நெல்லியைப் பத்திச் சொல்லப் போறா இந்த கில்லி! எப்பூடி...? ஹி... ஹி... ஹி...

                                                                      (1)

லையில முடி கொட்டுதேன்னு கவலையா உங்களுக்கு? இல்ல... நிரூ மாதிரி அடர்த்தியான தலைமுடி வேணும்னு ஆசைப்படறீங்களா? ரெண்டுக்கும் நான் வழி சொல்றேன். உங்களோட தலைக்குள்ள ஏராளமான எண்ணங்கள் தொடர்ச்‌சியா ஓடறதால தலை சூடாயிடறது இயல்பான விஷயமுங்க. (இந்த வம்புக்குத்தான் நான் எதையும் சிந்திக்கறது இல்லன்னு நீங்க சொன்னா, அதுக்கு நான் பொறுப்பில்ல) முடி கொட்டறதையும் நிறுத்தி, தலைக்கு குளிர்ச்சியையும் தந்து கூந்தலின் வளர்ச்சியைத் தூண்டி... இப்படி த்ரீ இன் ஒன் வேலைய நெல்லிக்காய் பண்ணுதுங்கற தகவலை நான் சொன்னா ஆச்சரியப்படுவீங்களா!

முடி கொட்டுதேன்னு கவலைப்பட்டுக்கிட்டு கூரையப் பாத்துட்டு உக்காந்துட்டு இருந்தீங்கன்னா.. அந்தக் கவலையாலேயே இன்னும் அதிகமா முடி கொட்டிப் போகுமுங்க. அதனால கவலைய விட்டுட்டு, நான் சொல்ற இந்த நெல்லிக்காய் தைலத்தை தயார் பண்ணி தலையில தேச்சுப் பாருங்க... ‘இதென்ன மாயாஜாலம்?’ன்னு ஆச்சரியப் படுவீங்க நிச்சயமா!

பச்சை நெல்லிக்காய், துளசி இலை, கொட்டை நீக்கிய முற்றிய கடுக்காய், கறிவேப்பிலை ஆகியவற்றை தலா 100 கிராம் எடுத்துக்கங்க. என்ன.. எடுத்துக்கிட்டாச்சா? இப்ப நாலையும் சேர்த்து கிரைண்டர்ல போட்டு / மிக்ஸில போட்டு நன்றாக அரையுங்க. அரைச்சதும் கிடைக்கற விழுதை மெல்லிய துணியில் மூட்டையாக் கட்டித் தொங்க விடுங்க. அதுக்கு நேர் கீழா ஒரு பாத்திரத்தை வையுங்க. அதுலருந்து துளித் துளியா சாறு சொட்டும். அந்தச் சாற்றைச் சேமிச்சு, அதோட அளவுக்கு மூன்று மடங்கு தேங்காய் எண்ணெயைக் கலந்து காய்ச்சுங்க. இந்தக் காய்ச்சி, ஆறிய எண்ணெயைத் தினமும் தலையில் தடவி தலைசீவினீங்கன்னா, முடி கொட்டறது நின்னு போறதோட மட்டுமில்லீங்க...அடர்த்தியா வளரவும் ஆரம்பிச்சுடும்.

                                                                        (2)

னிக்காலம் வந்துடுச்சுன்னா.... பெரும் கொடுமைங்க! சில பேருக்கு தலையில பனித் துளியைப் போல பொடுகுகள் வந்து இம்சையக் கொடுக்கும். இந்த இம்சையிலிருந்து விடுதலை கொடுத்து நிம்மதியைத் தருகிறது நான் சொல்ற இந்த நெல்லிக்காய் பேஸ்ட்:

வெந்தயப் பொடி - 1 ஸ்பூன், கடுக்காய் பொடி - அரை டீஸ்பூன், கடலை மாவு -  1 டீஸ்பூன்... இவ்வளவு தாங்க... எடுத்துக்கிட்டீங்களா? ரைட், இப்ப இந்த மூணையம் கலக்கற அளவுக்கு கொஞ்சம் எலுமிச்ச்பழச் சாறு, அந்தச் சாறோட அளவுக்கு நெல்லிக்காய் சாறு சேர்த்து பேஸ்ட் ஆக்குங்க. இந்த பேஸ்ட்டை தயார் பண்ணினதும், தலைக்கு இதை ‘பேக்’ ஆகப் போட்டு 10 நிமிஷம் கழிச்சு தண்ணி விட்டு அலசுங்க. இப்படி ரெண்டு, மூணு தரம் செஞ்சு பாருங்களேன்... ‘நோ பொடுகு! இட்ஸ் கான்! போயே போச்சு! போயிந்தி!’ம்பீங்க.

இந்த பேஸ்ட்ல இருக்கற மூலப் பொருட்கள்ல வெந்தயம், கடுக்காய், கடலை மாவு மூணும் தலையை சுத்தப்படுத்தி செதிள்களை நீக்கற சக்தி கொண்டவைங்க. நெல்லிக்காய் தலைமுடியின் நுனிப் பிளவை நீக்கி முடியை கருகருன்னு வெச்சுக்கற சக்தி கொண்டதுங்க. எலுமிச்சைச் சாறுக்கு தலையில அரிப்பு எதுவும் வராம தடுக்கற சக்தி இருக்கு. அதனால இந்த பேஸ்ட்டை உபயோகிச்சா அனாவசியமா தலையச் சொறிய மாட்டீங்க. (அம்மாகிட்ட பணம் கேட்டு தலையச் சொறியறது இந்தக் கணக்குல வராது, சொல்லிப்புட்டேன்)

                                                                         (3)

நிறையப் பேருக்கு பெரிய பிரச்சனையா இருக்கறது இளநரைங்கற விஷயமங்க. தலைக்கு டை அடிச்சாலோ, அதுனாலயே பக்கவிளைவுகள் வேற வரலாம். இதுக்கும் கூட நெல்லிக்காய் ஒரு கை கண்ட மருந்தா இருக்குதுங்க. என்னது... எப்படின்னா கேக்கறீங்க?

மருதாணி இலை - 1 கப், கொட்டை நீக்கின பெரிய நெல்லிக்காய் - 5, முழு சீயக்காய் - 4, சுத்தம் செஞ்ச புங்கங்கொட்டை - 1 இதெல்லாத்தையும் நைட் ஃபுல்லா தண்ணியில ஊறப் போடுங்க. அடுத்த நாள் இதையெல்லாம் அரைச்சு விழுதாப் பண்ணிக்குங்க. இந்த விழுதை தலைக்கு ‘பேக்’ ஆகப் போட்டு, 10 நிமிஷம் கழிச்சு அலசுங்க. வாரத்துக்கு ஒரு முறை இந்த மாதிரி குளியல் போட்டீங்கன்னா... இளநரைமுடி அத்தனையும் நல்லா கருகருன்னு ஆயிடும். அப்புறம் இளநரைன்ற பேச்சையே உங்க தலைமுடி எடுக்காதுங்க.

                                                                         (4)

ங்களுக்குப் பல் துலக்கற பழக்கம் உண்டுதானே...! நோ.. நோ... இதுக்கெல்லாம் கைய ஓங்கக் கூடாது. ஒத்துக்கறேன்... நீங்க ஒழுங்கா பல் துலக்கறவங்கதான்! சில பேருக்கு என்ன காரணத்தினாலேயோ பற்கள்ல காவி ஏறி, சிரிச்சாங்கன்னா மத்தவங்க பயப்படற மாதிரி இருக்கும் பற்கள். அதுனாலேயே உம்மணாமூஞ்சியா சிரிக்காம இருப்பாங்க. அவங்களை சிரிக்க வெக்கற சக்தி நம்ம நெல்லிக்காய்க்கு உண்டுங்கறேன்...

கடுக்காய் தோல், ‌தான்தோன்றிக்காய் (நாட்டு மருந்துக் கடைகள்ல கேட்டா கிடைக்குமுங்க), நெல்லிக்காய் மூணு ஐட்டத்தையும் சம அளவுக்கு எடுத்துக்கங்க. இதுங்களை வெய்யில்ல நல்லாக் காய வையுங்க. அப்புறம் நல்லா அரைச்சு, பொடியாக்கி வெச்சுக்கங்க. -இந்த பல்பொடியை உபயோகிச்சுப் பல் தேய்ச்சு வந்தீங்கன்னா... ‘முத்துப் போல பற்கள்’ன்னு சொல்லுவாங்களே... அந்த மாதிரி பளீர் வெண்மையில பற்கள் பிரகாசிக்குமுங்க. அப்புறமென்ன... ஒரே ஹி... ஹி... தான்!

எழுத்தாக்கம் : நிரூ,
ஆதாரம் : ஹெல்த் & பியூட்டி மாத இதழ், மே 2012.

மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "நல்லதாய் நாலு விஷயம்!"

4 August 2012

நான்... கொசு!


டென்னிஸ்‌ பேட் போலிருந்த அதை காற்றில் ஒரு வீசு வீசினாள் அவள். பட் பட் என்ற சத்தம் கேட்டதும் பூரிப்பாய்த் தன் கணவனைத் திரும்பிப் பார்த்தாள். ‘‘எப்பூடி?’’

‘‘ஆமா... நீ பெரிய சானியா மிர்ஸா! சர்வீஸ் போட்டு கேமை ஜெயிச்சுட்டே. ஏண்டி... கொசுவை அடிக்கற பேட்டை வெச்சுட்டு இத்தனை அமர்க்களம்?’’ என்றார் அவர்.

“அமர்க்களமா..? ஈ தொல்லை அதிகமா இருக்குன்னு மருந்தடிச்சுப் பாத்தேன். கொஞ்சம் தான் போச்சு. கொசுவையாவது அழிச்சுடலாம்னு பாக்கறேன்...”

“நான் ஈ பாத்தப்பறம் எல்லா ஈயும் ஹெல்மட் போட்டுக்க பழகிடுச்சுடி. அதான் அழிக்க முடியலை...” என்று சொல்லி ஈயென்று சிரித்தார் அவர்.

“அப்படிச் சிரிக்காதீங்க பயமா இருக்குது...” என்றதும் வாயை மூடினார். “நான் கடைவரைக்கும போய்ட்டு வர்றேன்...” என்றார்.

‘‘என்னது...? வடையா? நேத்துதானே பண்ணிக் குடுத்தேன். மறுபடி கேட்டா என்ன அர்த்தம்ங்கறேன்?’’ என்று அவள் அலறினாள். ‘‘கஷ்டம்டா சாமி...’’ என்று தலையில் அடித்துக் கொண்டு சத்தமாகப் பேசினார். ‘‘கடைக்குப் போயிட்டு வர்றேன்னு சொன்னேன்டி ச.தி.சுந்தரி’’

‘‘கடைக்கா..? அதை தெளிவா சொல்றதுக்கென்ன... இப்படி என் பேரைச் சுருக்காதீங்கன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?’’

‘‘நாசமாப் போச்சு. ‌சவுந்தர்யலட்சுமி திரிபுரசுந்தரின்னு உன் பேரை முழுசாச் சொல்லி முடிக்கறதுக்குள்ள அரை நாளாயிடும்...’’

‘‘இங்க மட்டும் என்ன வாழுதாம்..? சீனிவாச சுந்தரவரத நரசிம்மன்னு உங்க பேரை யாராவது முழுசாச் சொல்லியிருக்காங்களா? கோபக்காரர்ங்கறதால சிம்மம்னுதானே கூப்பிடறாங்க?’’

‘‘சரி... சரி... ’’ என்றார் அவர். ‘‘அன்னிக்கு பாங்க்ல அக்கவுண்ட் ஓபன் பண்ண ஃபார்ம் குடுத்தான். நான் திருமதின்னு போட்டு என் பேரோட உங்க பேரைச் சேர்த்து எழுதறதுக்கு எக்ஸ்ட்ரா ஷீட் கேக்க வேண்டியதாப் போ்ச்சு... சிரிக்கறான் அந்த ஆளு...’’

‘‘விடுடி! நான் ‌‌போயிட்டு அரை மணி நேரத்துல வர்றேன்... எக்ஸிபிஷன் போகணும்னியே... பசங்களை ரெடி பண்ணி வை..,’’ என்று சத்தமாகப் பேசிய (கத்திய?) வரின் மூக்கில் மோதிக் கீழே விழுந்தது அந்தப் ப்ளையிங் டிஸ்க். தொடர்ந்து ‘ஓ’வென்ற கூச்சலுடன் ஓடிவந்தன அவர் பெற்ற ஆறு செல்வங்களும்! ‘‘சனியன்களா... வீட்டுக்குள்ளயா விளையாடறது? ரோட்டுக்குப் போங்க...’’ என்று பெயருக்கேற்றபடி அவர் கத்த (கர்ஜிக்க?) கண்ணை மூடிக் கொண்டு ஓடிவிட்டன அத்தனையும்!

‘‘இன்னுமா ரெடியாகலை? அலங்காரம் பண்ண இவ்வளவு நேரம? எப்ப எக்ஸிபிஷன் போயிட்டு எப்ப வர்றது?’’ என்று சிம்மம் கத்திக் கொண்டிருந்தார். ‘‘அடாடாடா... எல்லாத்துலயும் கஞ்சியக் கால்ல கொட்டிண்ட மாதிரி அவசரம் உங்களுக்கு. போய் கார்ல உக்காருங்க. பசங்களைக் கூட்டிட்டு வர்றேன்...’’ என்று அவள் பதிலுக்குக் கத்த, அவர் போகும்போது எதிரே வந்தாள் வேலைககாரி அமிர்தவல்லி. (ஏன் வேலைக்காரின்னா, முனியம்மா, முனீஸ்வரின்னுதான் பேர் வெக்கணுமா?).

‘‘ஏம்மா... பைய நான் வீட்டுக்கு எடுத்துட்டுப் போகட்டுமா?’’ என்று அவள் கேட்க, அசுவாரஸ்யமாகத் தலையசைத்தபடி, ‘‘பசங்களா கிளம்புங்க. அப்பா கத்தறார் பாருங்க...’’ என்றாள் சுந்தரி. ‘‘ஓ’’வென்ற உற்சாகக் கூச்சலுடன் வாண்டுகள் வாசலுக்கு ஓட, அவளும் தொடர்ந்தாள்.

க்ஸிபிஷனில் ஸ்டால் ஸ்டாகப் புகுந்து நிறையப் பைகளை வாங்கியபடி வரும்போது யதேச்சையாகக் கவனித்த சிம்மம் சொன்னார்- ‘‘சுந்தரி... ஏதோ குறையறது போலருக்கே... சரி பாரு...’’ என்று. ‘‘இல்லியே... சரியாத்தானே வெச்சிருக்கேன்...’’ என்று அவள் பைகளை எண்ணத் தொடங்க, கோபமாக தலையில் தட்டினார்: ‘‘அடியேய்... நான் சொன்னது இதில்லை. நாம பெத்த புத்திர சிகாமணிகளை! சரியா இருக்கான்னு எண்ணிப் பாக்கச் சொன்னேன்’’

ஒவ்வொன்றாகக் கவனித்த சுந்தரி அலறினாள். ‘‘என்னங்க... சின்னவனைக் காணோம்...’’

‘‘யாரு, அந்தக் குட்டிப் பிசாசா?’’

‘‘ஆமாங்க...’’

‘‘அடிப்பாவி! திங்க்ஸை வாங்கிக் குவிக்கறதுலயே குறியா இருந்தியே... குழந்தைகளைக் கொஞ்சமாவது கவனிக்க மாட்டியா?’’ என்று அவர் கத்த, ‘‘நான் மட்டுமா பெத்தேன்? பெத்த அப்பான்னு எதுக்கு இருக்கீங்க? நீங்க கவனிச்சிருக்கலாம்ல..?’’ என்று அவள் எகிற, மற்ற பிள்ளைகள் சுற்றி நின்று கூச்சலிட, ஒரே களேபரம். அவர்களைச் சுற்றி ஒரு கூட்டமே கூடிவிட, கூட்டத்தில் ஒருவர் தமிழ்நாட்டு மரபுப்படி இலவச ஆலோசனை சொன்னார்: ‘‘சார், எக்ஸிபிஷன் அனவுன்ஸ்மென்ட் ஸ்டால்ல போய் மைக்ல சொன்னீங்கன்னா... யாராவது பையனப் பாத்தாலும் கூட்டிட்டு வந்துடுவாங்க...’’ என்று.

இவர்கள் அனவுன்ஸ்மெண்ட் ஸ்டாலுக்குச் சென்ற சில நிமிடங்களில் ஒலிபெருக்கி அலறியது. ‘‘நீல டிராயரும், நீல கட்டம்போட்ட சட்டையும் அணிந்த ஏழு வயது குட்டிப் பிசாசு எங்கிருந்தாலும் ஸ்டாலுக்கு வரவும். அப்பாப் பிசாசு... மன்னிக்கவும், அப்பா இங்கே காத்திருக்கிறார்...’’ என்றது.

‘‘ஐயோ... ஐயோ...’’ என்று தலையிலடித்துக் கொண்டாள் சுந்தரி. ‘‘ஏன்னா... கிரிதர ராஜகோபாலன்னு அவனுக்கு வெச்ச பேர்ல வீட்லதான் கூப்பிட மாட்டீங்க. இங்கயாவது அப்படிச் சொல்லியிருக்கலாம்ல? அதென்ன குட்டிப்பிசாசு?’’

‘‘குட்டிப் பிசாசுன்னு கூப்பிட்டே பழகிடுச்சா? அவனுக்கு வெச்ச பேர் மறந்து போய்டுத்துடி. ஹி... ஹி...’’ என்று பெரிதாக இளித்து அசடு வழிந்தது சிம்மம்.

அறிவிப்பு செய்து இரண்டு மணி நேரத்துக்கு மேல் காத்திருந்தும் பையன் கிடைப்பதாக இல்லை. போலீசில் புகார் செய்து விட்டு நொந்து நூலாகி வீடு திரும்பும் போது இரவு மணி எட்டரையாகி விட்டது.

வாசலிலேயே தோளில் தூங்கிக் கொண்டிருந்த ‘குட்டிப் பிசாசு’டன் காத்திருந்தாள் அமிர்தவல்லி.

“ஏம்மா... எக்ஸிபிஷன் போய்ட்டுவர இம்மா நேரமா? பாவம் புள்ள... பசின்னு கேட்டுது. சாப்பாடு தந்ததும் தூங்கிடுச்சு பாரு...” என்று அவள் முறையிட. குழந்தையை வாங்கிக் கொஞ்சிய சுந்தரி. அவளிடம் கோபமாகக் கேட்டாள். “உன்கிட்ட எப்படிடி குழந்தை வந்துச்சு... நீயும் எக்ஸிபிஷன் வந்தியா?”

“சரியாப் போச்சு... என்கூட என் வீட்டுக்கு வரேங்கறான். பையனை கூட்டிட்டு போகட்டான்னு கேட்டப்ப நீங்கதானே சரின்னீங்க?” என்று அவள் சொல்ல. “பையன்னா கேட்டே? பைய எடுத்துட்டு போகவான்னு கேட்டேன்னு நினைச்சுல்ல சரின்னுட்டேன்...” என்று அசடு வழிந்தாள் சுந்தரி. கைகளால் தலையில் மடேர் மடேரென்று அடித்துக்  கொண்டது சிம்மம்.

மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "நான்... கொசு!"

27 July 2012

உங்களுக்கு பிளட்பிரஷர் இருக்கா?

ன்மீகம் பற்றிய என் கருத்துக்களை நான் சென்ற பதிவில் வெளியிட்டது என் நண்பர்களில் பலருக்கு கோபத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியிருப்பதை உணர முடிந்தது. அதில் இருந்த தவறுகளை பொருட்படுத்தாமல் கருத்திட்ட அனைவருக்கும் என் நன்றி! நண்பர்களின் கருத்துக்களிலிருந்து நான் கற்றுக் கொண்டதும் தெளிவடைந்ததும் பற்றி தனியாகப் பதிவே எழுதுகிறேன். அதனால் கோபமும் வருத்தமும் அடைந்த அனைவருக்கும்.... ஸாரி! வெரிவெரி ஸாரி! கருத்துக்கள் மாறுபட்டாலும் வார்த்தைகளைக் கையாள்வதில் கவனம் வேண்டும் என்பது நான் கற்ற பாடம். (நீரூ... டைரியத் தூக்கிக் கடாசுடி லூசு!). அடுத்து ஒரு அதிபயங்கர மொக்கையோட வர்றேன்.... இப்ப இங்க உங்களுக்கு உபயோகமான ஒரு மேட்டர் தர்றேன்!

                           ரத்த அழுத்தத்தை விரட்டும் வழி

ம் உடலில் உள்ள சின்னச் சின்ன குறைபாடுகளை கண்டுகொள்ளாமல் விடும்போது அது பெரிய ஆபத்துகளை உருவாக்குகிறது. அந்த வகையில் மிகவும் ஆபத்தானது ரத்த அழுத்தம். சாதாரண விஷயம் போல தோன்றினாலும் இதை கட்டுக்குள் வைக்காவிட்டால் இதயம், மூளை, சிறுநீரகம் மற்றும் கண்கள் என முக்கிய உறுப்புகள் பாதிக்க வாய்ப்புள்ளது என்கிறார் மருத்துவ நிபுணர் குமரன் அப்புசாமி. ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் 40 வயதுக்கு மேல்தான் வரும் என்று சொன்னது அந்தக் காலம். இப்போது 25 வயதிலேயே ஹார்ட் அட்டாக் பயமுறுத்தத் தொடங்கிவிட்டது. இதற்கு அடிப்படை காரணம் ரத்த அழுத்தப் பிரச்னை.

ரத்த அழுத்தத்தை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் விடும்போது இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய் சுருங்கி மாரடைப்பு உண்டாகிறது. மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய் சுருங்கி மூளைக்கு போகும் ரத்தம் குறைந்தால் பக்கவாதம் ஏற்படுகிறது. மேலும் மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் வெடித்து மரணம் ஏற்படும் ஆபத்தும் உள்ளது. ரத்த அழுத்தம் அளவுக்கு அதிகமாக உயர்வது, குறைவது இரண்டுமே பிரச்னைதான். வழக்கமாக மாரடைப்புக்கு பிறகு இதயம் ரத்தத்தை பம்பிங் செய்வது குறையும். அப்போது ரத்த அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது. இதயம் வீங்கும் பட்சத்திலும் குறைந்த ரத்த அழுத்தம் வரலாம்.

குறைந்த ரத்த அழுத்தத்தால் அடிக்கடி மயக்கம் ஏற்படலாம். அட்ரீனல் சுரப்பி எனப்படும் ஹார்மோன் சுரப்பியில் டியூமர் வரலாம். இதனாலும் ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இயல்பாகவே அதிகளவு டென்ஷன், கோபம் உள்ளவர்களுக்கு ரத்த அழுத்தப் பிரச்னை தோன்றும். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு கிட்னி கெட்டுப் போகவும் வாய்ப்புள்ளது. சிறு வயதில் உடலை வருத்தி வேலை செய்யாமல் இருப்பது, அளவுக்கு அதிகமாக அசைவ உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடலில் சேரும் கொழுப்பு, தவறான உணவு முறை, அடிக்கடி குளிர்பானங்களை உட்கொள்வதால் ரத்தத்தில் அதிகரிக்கும் உப்பின் அளவு, மது மற்றும் போதைப் பழக்கங்கள், அதிக உடல் எடை போன்ற காரணங்களால் சிறு வயதிலேயே ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. ரத்த அழுத்த அறிகுறி உள்ளவர்கள், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வதுடன் உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும்.

முதலில் உங்கள் உடல் எடை, உயரத்துக்கு ஏற்றதுதானா என்பதை சோதித்து சரி செய்யவும். தினமும் சில மணி நேரம் வாக்கிங் அல்லது ஏதாவது ஒரு உடற்பயிற்சியை கட்டாயம் செய்யவும். உணவில் நிறைய காய்கறிகள், பழ வகைகள் சேர்க்கவும். சாப்பாட்டில் உப்பு குறைவாக பயன்படுத்த வேண்டியது அவசியம். மருத்துவரின் ஆலோசனையுடன் அதிக உடல் எடையை குறைக்கவும். புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் அது ரத்தக் குழாயை சுருங்க செய்யும். உடனடியாக புகைபிடிக்கும் பழக்கத்தை விடவும். இதேபோல் மிகை ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மதுப்பழக்கத்தையும் விட வேண்டும். மதுவை விட முடியாதவர்கள் மதுவின் அளவை படிப்படியாக குறைத்துக் கொள்ளவும்.

ஓட்ஸ் ஒரு கப், மோர் 20 மி.லி. அரைப்பதற்கு இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் ஒரு கட்டு கொத்தமல்லி. இவற்றை எண்ணெயில் வதக்கி அரைத்து வைக்கவும். ஓட்ஸை தனியாக மிக்சியில் அரைத்து மோரில் கலந்து வைக்கவும். இத்துடன் அரைத்த கலவையை சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து தேவையான உப்பு சேர்த்து கலந்து வைத்துள்ள ஓட்ஸ் கலவையை சேர்த்து உப்புமா பதத்துக்கு கிளறி இறக்கவும். இதில் தேவையான அளவு நார்ச்சத்து உள்ளதால் எச்.டி.எல். எனப்படும் நல்ல கொழுப்பை அதிகரிக்கும்.

பத்து முருங்கைக்காய்களை வேக வைத்து, உள் பகுதி சதையை சேகரிக்கவும். கடலைப்பருப்பு இரண்டு கப் ஊற வைத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். முருங்கைக்காய் சதைப்பகுதியை அரைத்த மாவில் சேர்க்கவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சிறிதளவு, அரிசி மாவு 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு ஏற்ப சேர்த்து வடைக்கு தேவையான பதத்தில் பிசைந்து எண்ணெயில் பொறித்து எடுக்கவும். இதில் தேவையான இரும்புச் சத்து உள்ளதால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

காலி பிளவர் - 1 கப், பச்சை பட்டாணி - 1 கப், பீன்ஸ், கேரட் தேவையான அளவு, குடைமிளகாய் - ஒரு கப், பட்டை, கிராம்பு, சோம்பு, வரமிளகாய், கொத்தமல்லி, ஏலக்காய், சுக்கு சிறிதளவு ஆகியவற்றை நன்றாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்கறி வகைகளை பாதியளவு வெந்தபின் இன்னொரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கருவேப்பிலை, வெங்காயம் மற்றும் காய்கறிகள் சேர்த்து வதக்கவும். மசாலா பொருட்களையும் சேர்த்து வதக்கி மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். இதில் போதுமான அளவு நார்ச்சத்து இருப்பதால் உடலில் கெட்ட கொழுப்பு சேருவதை தடுக்கும்.

தவறான உணவு முறை காரணமாக உடலில் சேரும் கெட்ட கொழுப்பு, உடல் எடை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் சிறு வயதிலேயே ரத்த அழுத்தப் பிரச்னை தோன்றுகிறது. மன உளைச்சல், டென்ஷன் மற்றும் அதிகபட்ச கோபமும் ரத்த அழுத்த பிரச்னையை உருவாக்குகிறது. நீண்ட நாள் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் ரத்த அழுத்தம் வரலாம். இதன் தொடர்ச்சியாக மாரடைப்பு, பக்கவாதம்கூட ஏற்படக் கூடும். இதுபோன்ற பிரச்னைகளை துவக்கத்திலேயே தடுக்க அதிக உடல் எடையை குறைக்க வேண்டும். அதற்கு டயட்டில் கவனம் செலுத்தவும். உடலில் நல்ல கொழுப்பு சேருவதற்கான உணவுகளை கண்டறிந்து சேர்த்துக் கொள்ளவும்.

உப்பு அதிகமாக சேர்க்கப்படும் ஊறுகாய், வத்தல், வடகம் ஆகியவற்றை தவிர்க்கவும். உணவு தயாரிப்பில் பயன்படுத்தும் எண்ணெயின் அளவை குறைக்கவும். அசைவ உணவு அடிக்கடி எடுத்துக் கொள்வதை கட்டுப்படுத்தவும். எண்ணெயில் பொறித்த உணவுகளையும் தவிர்ப்பது அவசியம். பால் மற்றும் பால் பொருட்களின் அளவையும் குறைப்பது நல்லது. கீரை மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கெட்ட கொழுப்பு கரைந்து நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும். பழங்கள் நிறைய எடுத்துக் கொள்ளவும். பீசா, பர்கர் உள்ளிட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். தினமும் குறைந்தபட்சம் 1 மணி நேரம் வாக்கிங் அவசியம்.

மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "உங்களுக்கு பிளட்பிரஷர் இருக்கா?"
 

கலை அக்கா தந்த பரிசுகள்!

கலை அக்கா தந்த பரிசுகள்!

என் தோழி விஜி தந்த விருது!

என் தோழி விஜி தந்த விருது!