Pages

Ads 468x60px

25 June 2012

வாய் சொன்னதும். மனசுல வந்ததும்!


திரைப்படங்களில் ஆபாசமான காட்சிகளோ, ஆட்சேபத்திற்குரிய காட்சிகளோ வராமல் தடுப்பதற்கு சென்சார் ‌போர்ட் என்ற அமைப்பு இருக்கிறது. தொலைக்காட்சிகளுக்கும் அது மாதிரி சென்சார் போர்டு ஒன்றை ஏற்படுத்தினால் தேவலைன்னுதான் தோன்றுகிறது. சீரியல்களில் முன்னெல்லாம் ஒருத்தரை ஒருத்தர் அழிக்க நினைக்கும், குடும்பத்துக்குள்ளேயே கொலைகாரத் திட்டம் போடும் கேரக்டர்களை வைத்து கதை பண்ணிக் கொண்டிருந்தாங்க. இப்ப... டூயட், ஃபைட் சீனெல்லாம் வர ஆரம்பிச்சுடுச்சு. பத்தாக்குறைக்கு தண்ணியடிக்கிற மாதிரி, தம்மடிக்கிற மாதிரி சீன்கள்- இதுல கீழே இதெல்லாம் கெடுதல்ன்னு ஒரு ஸ்லைடு மட்டும் ‌கரெக்டா போட்டுடறாங்கப்பா.

இதுங்களாவது பரவாயில்லைங்க. இதைவிடக் கேவலமா இருக்குதுங்க விளம்பரப் படங்கள். ஒரு குறிப்பிட்ட கம்பெனியோட பாடி ஸ்ப்ரேவை ஒருத்தன் யூஸ் பண்ணினால், வேற கிரகத்துலருந்தும், எங்கயோ காட்டுப் பிரதேசத்துலருந்தும் எல்லாப் பெண்களும் (அதும் எல்லா சனியன்களும் மினி டிரஸ்தான் போட்டிருக்குமாம்) இவன் வீட்டுக்கு ஓடி வந்து இவன் முன்னால அசிங்கமா டான்ஸ ஆடிக் காட்டுமாம். என்ன ஒரு கேவலமான சிந்தனை! பெண்கள்ன்னா அவ்வளவு எளிதாப் போய்டுச்சா இவங்களுக்கு? சோப்பு, ஷேவிங் க்ரீம்லருந்து எல்லா விளம்பரங்கள்லயும் பெண்களை Misuse பண்றாங்க. இதுக்கெல்லாம் மகளிர் சென்சார்போர்டு ஒண்ணு அமைச்சு கன்ட்ரோல் பண்ணினா, இதெல்லாம் மாறிச்சுன்னா... ரொம்ப நல்லா இருக்கும். ஹும்...!

அதே மாதிரி சில விளம்பரங்களோட கான்செப்ட்படி யோசிச்சா விபரீதமா அர்த்தம் வருது. ‘காம்ப்ளான் சாப்பிடற குழந்தைங்க மத்த குழந்தைங்களை விட இருமடங்கு வளர்றாங்க’ன்னு விளம்பரம் சொல்லுது. அதன்படி பாத்தா, காம்ப்ளான் குடிக்காதவங்க ஐந்தடி உயரம் வளர்றாங்கன்னா, காம்ப்ளான் சாப்பிட்டவங்கல்லாம் 10 அடி உயரமாவா வளர்ந்திருக்காங்க? அப்படி யாரும் இதுவரைக்கும் கண்ணுல படலியேங்க... ஒரே கன்ப்யூஷன்ப்பா!

===========================================

ல சந்தர்ப்பங்கள்ல நாம மனசுக்குள்ள ஒரு எண்ணம் இருந்தாலும், வெளியில வேற ஒரு பதிலைச் சொல்ல வேண்டியிருக்கும். இதப் பத்தி யோசிச்சதுல தோணினது இது. ஒரு ஐ.டி. கம்பெனியில இன்டர்வியூ நடக்குது. அங்க ஹெச்.ஆர். கேக்கற கேள்விங்களுக்கு இன்டர்வியூவுக்கு வந்திருககற இளைஞன் பதில் சொல்றான். நான் பிராக்கெட்டுக்குள்ள கொடுத்திருக்கறது அவன் மனசுல ஓடற பதில்கள்.

கேள்வி : ஏன் எங்க கம்பெனிக்கு அப்ளை பண்ணினீங்க?

பதில் : உங்கள் நிறுவனம் இந்தத் துறையில் முன்னணி நிறுவனமாய் இருக்கறதால. (எல்லா கம்பெனிக்கும்தான் அப்ளை பண்ணேன். நீங்க ஒண்டிதான் கூப்ட்டீங்க)

கேள்வி: எங்கள் நிறுவனத்தில் ‌வேலை செய்ய ஏன் விரும்புகிறீர்கள்?

பதில் : இது சவாலான வேலை என்பதாலும், என்னை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்று நம்புவதாலும். (நான் எங்கய்யா விரும்பறேன்? வேலை தர்றேன்னு எவன் கூப்ட்டாலும் சேர்ந்துடுவேனே....)

கேள்வி: உங்களை நான் ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

பதில் : என்னிடம் உங்கள் நிறுவனத்தின் தேவைக்கேற்ற எல்லாத் தகுதிகளும் இருப்பதால். (எப்படியும் இந்த போஸ்டுக்கு யாரையாவது எடுக்கணு்ம். என்னை எடுத்துத் தொலைங்களேன்யா...)

கேள்வி : உங்கள் பலம் என்ன?

பதில் : சின்ஸியராய் உழைப்பது. (ஃபிகருங்களைக் கரெக்ட் பண்றதுதான்...)

கேள்வி : சமீபத்தில் நீங்கள் சந்தித்த சவால் என்ன? எப்படி சமாளித்தீர்கள்?

பதில் : பக்கத்து வீட்டு ஆன்ட்டிக்கு ஆபரேஷன் நடந்தப்ப நிறைய ப்ளட் தேவைப்பட்டது. அதுக்காக என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையம் பிடிச்சு, ப்ளட் பாங்குக்கு அலைஞ்சு ரத்தம் சேகரிச்சுத் தந்து அவங்க உயிரைக் காப்பாத்தினேன். (திடீர்னு கர்ள் ஃப்ரண்ட் போன் பண்ணி சினிமாவுக்கு டிக்கெட் புக் பண்ணுன்னுட்டா. கைல சுத்தமா காசில்ல. அந்த தியேட்டர்ல கரப்பான் பூச்சி இருக்குதுன்னு ‌சொல்லி, பீச்சுக்குத் தள்ளிட்டுப் போயிட்டேன். ஹி... ஹி...)

கேள்வி: உங்களுக்கு வேலை தந்தா என்ன எதிர்பார்ப்பீர்கள்?

பதில் : எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. கம்பெனிக்கு ஸின்ஸியரா நான் இருந்தா, தானே எல்லாம் கிடைச்சுடும். (லேட்டா வந்தா கண்டுக்காதீங்க. சீக்கிரம் புறப்பட்டாலும் கேக்காதீங்க. மாசம் ஒரு ஹைக் குடுத்தா சந்தோஷம். வீக் எண்ட் பார்ட்டிக்கு ஸ்பான்ஸர் பண்ணினா இன்னும் சந்தோஷம்)

கேள்வி : எங்கள் நிறுவனம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

பதில் : இந்தத் துறையில் நம்பர் ஒன் என்று தெரியும். (உங்க கம்பெனில 55 கேர்ள்ஸ் ‌வொர்க் பண்றாங்கன்றது தெரியும். கரெக்டா ஸார்?)

கேள்வி: உங்களுக்கு வேலை தராவிட்டால் என்ன செய்வீர்கள்?

பதில்: என்னிடம் ஏதோ குறையிருக்கிறது என்பதை உணர்ந்து இன்னும் என்னை தகுதியாக்கிக் கொள்ள முயல்வேன். (‌‌பின்ன உன் சட்டையப் பிடிச்சா உலுகக முடியும்? போய்யா......ன்னு நாலு கெட்ட வார்த்தை சொல்லித் திட்டிட்டுப் போயிட்டே இருக்க வேண்டியதுதான்!)

மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "வாய் சொன்னதும். மனசுல வந்ததும்!"

9 June 2012

கமகம கதம்பம்-2

டந்த ஒரு வாரமா ஒரு வி.ஐ.பி.யோட வருகையினால பெங்களூரு ரொம்பவே குளிர்ந்து போச்சு. அந்த வி.ஐ.பி.யோட பேரைச் சொல்லலாம்னா... தன்னடக்கம் தடுக்குது! ஆனா ஒண்ணுங்க.. (ஆனா ஒண்ணுதான். ஆவன்னாதான் ரெண்டுன்னு கவுண்டமணி மாதிரி யாரும் கடிக்கக் கூடாது) அங்கருக்குற க்ளைமேட்டுலருந்து சென்னைக்குள்ள வந்ததுமே ‘ஏன்தான் வந்தோமோ’ன்னு இங்கருக்கற வெயில் சலிச்சுக்க வெக்குது. இப்ப... நான் படிச்ச புத்தகங்களலருந்து ‘சுட்ட’ கதம்பச் செய்திகள் உங்களுக்காக...
  
                           ஐஸ்ஹவுஸின் வரலாறு

னிக்கட்டி ராஜா என்று புகழ் பெற்ற ‘பிரெடிரிக் ட்யூடர்’ என்னும் அமெரிக்கர் ஒரு சிறந்த வியாபாரி. 1783 லிருந்து 1864 வரை உலகின் பல பாகங்களுக்கும் ஐச் கட்டிகளை ஏற்றுமதி செய்தவர். நியூ இங்கிலாந்து பகுதியிலிருந்து உருவான ஐச்கட்டிகளைச் செங்கற்களைப் போல அடுக்கி அவை உருகாமலிருக்க மரத்தூள், தவிடு போன்றவை கொண்டு மூடி வைப்பார்.

இப்படி கப்பல் மூலம் கொண்டு வரும் டன் கணக்கான ஐஸ்கட்டிகளைப் பாதுகாக்க அவர் மதறாஸ், பம்பாய், கொல்கத்தா ஆகிய நகரங்களிலும் ஐஸ்ஹவுஸ்களைக் கட்டினார். அவற்றுள் சென்னையில் மட்டுமே அவர் கட்டிய ஐஸ்ஹவுஸ் இன்னும் பாரம்பரியமிக்க இடமாக இருக்கிறது.

1880-ல் ஐஸ் வியாபாரம் தொய்வு கண்டபின் பிலிகிரி ஐயங்கார் என்ற வழக்கறிஞர் அக்கட்டடத்தை வாங்கி, தம் நண்பரான நீதிபதி கெர்னனின் நினைவாக ‘கெர்னன் மாளிகை’ என்று பெயரிட்டார்.  பின்னர் அக்கட்டடத்தில் சில மாற்றங்களைச் செய்தார் என்றாலும் குடியிருப்பதற்குத் தகுந்த காற்றோற்றம் இல்லை.

வசதியற்ற, படிப்பில் பின் தங்கிய மாணவர்கள் தங்குமிடமாக அதை மாற்றி 1893ல் மேலும் திருத்தங்கள் பல செய்வதற்காக ரூ.7,000 கடன் வாங்கினார். ‘மைசூர் ஐயங்கார் அறக்கட்டளை’ என்ற பெயரில் ஒரு லட்சத்த்துக்கு மேல் நிதி திரட்டி சமுதாய நலப்பணிகளும் கல்விப் பணியும் செய்துவந்தார்.

சுவாமி விவேகானந்தரின் வருகைக்குப் பின்னரே ‘ஐஸ்ஹவுஸ்’ வரலாற்றுச் சிறப்பும், பாரம்பரிய மிக்கதொரு புண்ணிய பூமியாகவும் மாறி ராம கிருஷ்ண இயக்கத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்றது எனலாம்.

                                                                                           - ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்

                பிள்ளையாரை நீரில் ஏன் கரைக்கிறார்கள்?

`நித்ய பூஜை' செய்யாமல் விக்ரஹங்களை வைத்திருக்கக் கூடாது. மண்ணால் செய்யப்பட்ட விக்ரஹம் என்றால் அதை நீர்நிலையில் சேர்ப்பித்துவிட வேண்டும். அதுவும் ஊர்வலமாக எடுத்துச் சென்றுதான் நீர்நிலையில் சேர்க்கவேண்டும் என்று ஆகம சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே, விநாயகரை கடலில் கொண்டு சென்று கரைப்பது என்பது விநாயகருக்கு இழைக்கப்படும் கொடுமை அல்ல. ஆகம விதிகளின்படி செய்யும் பக்தி வழிபாட்டின் ஓர் அங்கமே. `விசர்ஜன ஊர்வலம்' என்பது வடநாட்டில் ரொம்பப் பிரசித்தி. பத்மபுராணத்தில் கதை ஒன்று உண்டு-

ஒரு சமயம் பார்வதிதேவி கங்கையில் நீராடியபோது தன் அழுக்கைத் திரட்டி பொம்மையாக்க, அது யானைத் தலையும் மனித உருக்கொண்டும் அமைந்தது. அதை அன்னை கங்கையில் எறிய, பேருருக் கொண்டு விநாயகர் வெளிப்பட்ட தாகவும், அப்போது பார்வதியும் கங்கையும் அவரை பிள்ளையாக ஏந்திக் கொண்டனராம். இக்காரணத்தால் பார்வதி, கங்கை இருவருமே அவருக்கு அன்னையராயினர். இதனாலேயே சதுர்த்தி முடிந்ததும் பிள்ளையாரைக் கங்கையில் கரைக்கும் வழக்கம் ஏற்பட்டதாம்.


                       வினாத்தாள் வாங்கியவுடன்
                       எழுதத் தொடங்குவது சரியா?

வினாத்தாளை வாங்கியவுடன் சிலர் பதில் எழுத ஆரம்பித்து விடுவார்கள். முழுவதுமாக எழுதி முடித்தவுடன் வினாவை  மறுபடியும் வாசித்தால் அவர்கள் எழுதிய பதிலுக்கும் கேட்ட வினாவுக்கும் சம்பந்தமில்லை என்பது தெரியும். வினாவின் தொடக்கத்தை மட்டுமே வாசித்து விட்டு எழுதியதால் வந்த வினை.

வினாத்தாளை முழுவதுமாக படியுங்கள். முதல் பத்து நிமிடங்கள் எந்த வினாவுக்கும் பதில் எழுதாமல் எல்லா வினாக்களையும் வாசித்து நன்றாகத் தெரிந்த பரிச்சயமான வினாக்களை தேர்ந்தெடுக்க வேண்டும். வினாக்களின் தன்மை, அவற்றுக்கு எந்த விதத்தில் எந்த முறையில் பதிலளிப்பது என்பதைத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.

பல மாணவர்கள் மிகவும் நன்றாக எழுதக்கூடிய விடையில் மட்டும் தேர்வின் பாதி நேரத்தை செலவழித்து விட்டு மற்ற வற்றிற்கு அரக்கப்பரக்க சுருக்கி விடையளித்து ஒரு சில வினாக்கள் விடுபட பரிதாபமாகத் தோல்வியைத் தழுவி யிருக்கிறார்கள்.

                                                                        -தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் 
                                                                          வழிகாட்டிப் புத்தகத்திலிருந்து...

                 எந்த உபாதைக்கும் கவலை வேண்டாம்!

லை சுற்றல்:  சுக்கு, மிளகு, திப்பிலி, விலாமிச்சை வேர், சீரகம் ஆகியவைகளை 5 கிராம் வீதம் பவுடராக்கி தினசரி காலை மாலை கரண்டி சாப்பிட தலை சுற்றல் குணமாகும்.

இருமல் குணமாக:  அரச மரத்துப் பட்டையைக் காய வைத்து வறுத்து கரியானவுடன் தூளாக்கி 1 டம்ளர் நீரில் 1 கரண்டி போட்டுக் கொதித்ததும் வடிகட்டி சர்க்கரை பால் சேர்த்துக் குடிக்க இருமல் குணமாகும்.

ஜலதோஷம்:  ஜலதோஷம் காய்ச்சல் தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்துப் பொடியாக்கி பனங்கல்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் ஜலதோஷம் பணால்.

சளிகட்டு நீங்க: தூதுவளை, ஆடாதோடா இலை, சங்கன் இலை, கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்துச் சாப்பிட இரைப்பு சளிகட்டு நீங்கும்.

தலைவலி, மூக்கடைப்பு நீங்க:  நெல்லிக்காயில் கொட்டையை நீக்கி 1/2 லிட்டர் சாறு எடுத்து அதில் அளவாக உப்பு சேர்த்து 3 நாள் வெயிலில் காய வைத்து பின் தேங்காய் எண்ணெயை கொதிக்க வைத்து அதில் நெல்லி சாறு கலந்து கொதிக்க வைத்துக் கொண்டு மூக்கில் நுகர தலைவலி மூக்கடைப்பு விலகும்.

நெஞ்சு சளி:  தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவ குணமாகும்.

                                              -எளிய சித்த மருத்துவக் குறிப்புகள் புத்தகத்திலிருந்து
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "கமகம கதம்பம்-2"

1 June 2012

நவீன நரகாசுர ஊர்வலங்கள்!


ரொம்ப நாளா என் மனசுல உறுத்திட்டிருக்கற விஷயத்தை இப்ப உங்ககூட பகிர்ந்துக்கப் போறேன். முந்தா நாளா நான் மைலாப்பூர்லருந்து தி.நகருக்கு பஸ்ல வந்துட்டிருந்தேன். அப்போ ரோட்ல எதிர்ல ஒரு சவ ஊர்வலம் கிராஸ் பண்ணிச்சு. நடுரோட்டில வெடிகளை வெடிச்சு, டிராஃபிக்கை ஸ்தம்பிக்க வெச்சுட்டு கிராஸ் பண்ணினாங்க. 

முன்னால ‘உற்‌சாகத்தோட’ ஆடிட்டு வந்த ரெண்டு பேரு மாலையில இருந்து பூக்களைப் பிச்சு சுத்திலும் எறிஞ்சுட்டே போனாங்க. அதில ஒரு பூ ஜன்னலோரம் உட்கார்ந்திருந்த என் மடில வந்து விழ... அருவெறுப்போட தூக்கி எறிஞ்சேன். அந்த சவ ஊர்வலம் கிராஸ் பண்ணி, ட்ராஃபிக் கிளியராகி பஸ் நகர்றதுக்குள்ள எனக்கு லேசா மயக்கமே வந்துடுச்சு.

பொதுவா... நம்மைச் சேர்ந்த சொந்தங்கள்ல ஒண்ணு பிரிஞ்சிடுச்சுன்னா... அது பெரிய வேதனை இல்லையா? அந்த நபரின் இறுதி ஊர்வலம் அமைதியாத்தா‌னே நடக்கணும்? புராண காலத்துல நரகாசுரன்னு ஒருத்தன் தான் இறந்த தினத்தை மக்கள் துக்கம் எதுவுமில்லாம பட்டாசு வெடிச்சு, ஸ்வீட் சாப்பிட்டு கொண்டாடணும்னு வரம் கேட்டானாம். அதான தீபாவளின்னு ஒரு விஷயம் கேள்விப்பட்டிருக்கேன்.

 இப்படி இறந்தவரோட சவ ஊர்வலத்துல வெடியெல்லாம் வெடிச்சு கொண்டாடிட்டுப் போனா, அவங்க இறப்பினால உறவினர்களுக்கு துக்கம் இல்லை... சாவைக் கொண்டாடறாங்கன்னுதானே அர்த்தம் ஆவுது? இறந்து போனவங்க நரகாசுரன் மாதிரி ஏதாவது அசுரர்களா என்ன?

இந்த என் ஆதங் கத்தை எங்கம்மா கிட்ட (வழக்கம்போல) ஷேர் பண்ணிக் கிட்டப்ப ஒரு விஷ யம் சொன்னாங்க. ‘‘நிரூமா! மன்னர்கள் காலத்துல எல்லாம் முறையான சாலை கள் கிடையாது. வெளியூர்லருந்து வர்ற உறவினர்கள் ரோட்ல பூ கிடக்கறதைப் பாத்தா, பிண ஊர்வலம் புறப்பட்டுடுச்சுன்னு தெரிஞ்சுக்கிட்டு, அந்தப் பூக்களை ஃபாலோ பண்ணி, மயானத்துக்கு வருவாங்க. அதுக்காகத்தான் பாதையில பூக்களைத் தூவிக்கிட்டுப் போனாங்க. இதைத் தவிர பூக்களைத் தூவி இறந்தவரை சொர்க்கத்துக்கு அனுப்பறதுன்னும் ஒரு நம்பிககை உண்டு’’ அப்டின்னாங்க. முன்னோர்கள் காலத்துல ரோட்டு வசதி இல்லாததால அப்படிப் பண்ணினாங்கன்னா... இப்பவும் என்ன, ஏதுன்னு எதுவும் யோசிக்காம அதை அப்படியே தொடரணுமா என்ன?

இறந்த உடலை அதிக நாட்கள் வீட்ல வெச்சுக்காம உடனே புதைக்கவோ, எரிக்கவோ செய்யறதுக்குக் காரணமே இறந்த உடல்களிலிருந்து பரவும் கிருமித் தொற்று அதிகம்கறதுதான். அப்படிப்பட்ட பிணங்களின் மேல போடப்பட்ட மாலைகளை பிய்ச்சு, ரோடு பூரா எறிஞ்சுட்டுப் போறது என்ன நாகரீகம்னு புரியலை. பூவோட இதழ்களை உதிர்த்தாக் கூட கொஞ்சம் பரவாயில்லன்னு சொல்லலாம். பூக்களையே சுத்துப்பக்கம் யார் இருக்காங்கன்னுகூட கவனிக்காம, இப்படி வெறித்தனமா வீசிட்டுப் போறங்களே... என்ன அநியாயம்!

இந்த மாதிரி ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு, மத்தவங்களுக்குத் தொல்லை கொடுத்துட்டுப் போறவங்களுக்கு ‘நம்ம -------- இறந்தப்ப. சும்மா அமர்க்களமா எடுத்துட்டுப் போயி ஊ‌ரையே கலக்கிட்டோம்ல...’ என்று பெருமையடித்துக் கொள்வதைத் தவிர வேறு என்ன பிரயோஜனம்னு தெரியலை! இப்படி மத்தவங்களை எரிச்சலும் கோபமும் பட வெச்சுட்டு இறப்பு ஊர்வலம் நடத்தணும்னு எந்த மதத்திலயும், எந்த ஆன்மீக புத்தகங்களும் சொன்னதா எனக்குத் தெரியலை.

நான் பார்த்த ஒரு சினிமாவுல அதோட கதாநாயகி ரோட்ல ஆம்புலன்ஸ் கிராஸ் பண்றதைப் பார்த்தா, அதுல போறவங்களுக்கு என்ன கஷடமோ, அது உடனே சரியாகணும்னு சாமிகிட்ட ஒரு செகண்ட் வேண்டிக்கிட்டு அப்புறம்தான் நடப்பான்னு ஒரு விஷயம் சொல்லியிருந்தாங்க. அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதுமாதிரி சவ ஊர்வலங்கள் கிராஸ் பண்ணினா, ‘ஐயோ பாவம், யாரோ என்னவோ... ஒரு உயிர் போயிடுச்சே’ன்னு மனசுல பரிதாபமும் துயரமும் வரணும். இந்த மாதிரி ஊர்வலங்களைப் பாக்கிறப்பல்லாம் எனக்கு அந்தச் சவங்களின் மேலேயே வெறுப்பும் கோபமும்தான் வருது.

‘‘ரொம்பக் கொடூரமா சிந்திக்கறடி நீ’’ன்னு எத்தனை பேர் என்னை அடிக்கப் போறீங்களோ... இல்ல, ‘‘சரியாச் சொன்ன நிரூ!’’ன்னு எத்தனை பேர் கை குலுக்கப் போறீ்ங்களோ... தெரியலை. ஆனா... இந்த விஷயத்தை உங்க எல்லார் கிட்டயும் பகிர்ந்துக்கிட்டதுல எனக்கு மனசு ரொம்ப லேசாயிடுச்சு. பொறுமையாப் படிச்சதுக்கு ரொம்ப தாங்க்ஸ்!
மேலும் வாசிக்க இங்கே க்ளிக்குங்க... "நவீன நரகாசுர ஊர்வலங்கள்!"
 

கலை அக்கா தந்த பரிசுகள்!

கலை அக்கா தந்த பரிசுகள்!

என் தோழி விஜி தந்த விருது!

என் தோழி விஜி தந்த விருது!