திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் எனக்கு விருது அளித்து, அதில் நான் சந்தோஷம் அடைந்து குதித்துக் கூத்தாடியதைப் பார்த்து ரொம்பவே ரசித்திருப்பார் போல இருக்கிறது. இந்தச் சின்னப் பெண் இன்னும் சந்தோஷப்படட்டுமே என்று என்னிடம் மற்றொரு விருதையும் பகிர்ந்திருக்கிறார். அவருக்குச் சொல்கிற நன்றி என்கிற சாதாரண வார்த்தை என் மன உணர்வுகளை ஒருபோதும் வெளிப்படுத்தி விடாது. தூரத்தில் இருக்கிற காரணத்தால் கண்கள் பனிக்க அந்த வார்த்தையைத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. நன்றி ஐயா.
நிரஞ்சனாவி்ன் டைரியிலிருந்து :
ஏனோ தெரியவில்லை... ஆண்களின் இரண்டு செயல்களைப் பார்க்கிற போதெல்லாம் பளார் பளாரென்று அடிக்க வேண்டும் போல ஒரு வெறுப்புப் பொங்கி வருகிறது. முதலாவது விஷயம்... மரங்களின் அடியிலும், பல சமயம் பரபரப்பான சாலையின் ஓரங்களிலும் திரும்பி நின்று பாண்ட் ஜிப்பை இறக்கி விட்டு இயற்கை உந்துதலைத் தணிப்பது. விளக்குக் கம்பத்தைக் கண்டால் காலைத் தூக்குகிற உயிரினத்திற்கும் இவர்களுக்கும் பெரிதாக வித்தியாசம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. கண்ணில் படும் போதெல்லாம் முகத்தைத் திருப்பிக் கொள்கிற எனக்குள்ளே அருவருப்பும், கோபமும் பொங்கி வரத்தான் செய்கிறது.
இத்தகைய இயற்கை உபாதை பெண்களுக்கு மட்டும் கிடையாதா? இருந்தாலும் ஏன் செய்வதில்லை என்றால் வளர்க்கப்படும் முறை. சிறு வயதிலிருந்தே இப்படிச் செய்வது மானக் கேடு என்று அறிவுறுத்தி வளர்க்கப்படும் பெண்கள், தங்களின் கட்டுப்பாட்டுக்குள் அதை வைக்க முடிகிறது. அதுவே தன் மகன் ‘உச்சா’ போகணும் என்றால் பொறுமையைப் போதித்துப் பழக்காமல், கிடைத்த இடத்தில் செய்ய வைத்து, இது தவறேயில்லை என்பதைக் குழந்தை முதலே மனதில் பதித்து விடுகிறோம். ஆகவே பெற்றோர் வளர்க்கும் முறையிலும் தவறு இருக்கிறது என்பது என் மனதுக்குத் தோன்றுகிற விஷயம். பின்னாளி்ல் எனக்குப் பிறக்கும் மகன் இப்படிச் செய்தால் முதுகுத் தோலை உரித்து விடுவேன். ‘‘ஐயோ... பாவம்டி!’’ ‘‘ஏய், மனஸ்! என்னை மாதிரி ராட்சசிக்குப் பிள்ளையாப் பிறந்தா அனுபவிச்சுதான் ஆகணும், தெரிஞ்சுக்கோ’’ ‘‘நான் சொன்னது பிள்ளைய இல்லம்மா... உன் கழுத்துல தாலிகட்டப் போற அப்பாவி ஜீவனை நினைச்சு...’’ ‘‘அடிங்... எடு அந்தச் செருப்பை!’’
இன்னொரு கெட்ட பழக்கம்- நெரிசலான ட்ராஃபிக் மத்தியில போய்ட்டிருக்கும் போது சிக்னல்ல வண்டி நின்னுட்டாப் போதும், தலையைச் சாய்ச்சு வாயில இருக்கற எதையாவது துப்பறதும், பஸ்ல ஜன்னல் வழியா துப்பறதும். அறிவு கெட்ட மடையர்கள்...! பின்னால யாராவது இருக்காங்களான்னு கூடப் பாக்காம பல சமயங்கள்ல இப்படித் துப்பிடறாங்க. அதனோட சில துளிகள் தப்பித் தவறி சுடிதார் முனைல பட்டுட்டாக் கூட அருவருப்பா இருக்கு. அரசாங்கம் மட்டும் எனக்கு ஒரு பிஸ்டலையும், கேஸ் போட மாட்டோம்னு அனுமதியும் குடுத்துட்டா, நிறையப் பேரை இரக்கமேயில்லாம சுட்டுத் தள்ளிடுவேன். ‘‘புதிய பூலான் தேவி கிளம்பிட்டாய்யா...’’ ‘‘தோ பாரு மனஸ்! சீரியஸாப் பேசிட்டிருக்கறப்ப ஜோக் அடிக்காத!’’
‘‘ஜோக் அடிக்கலை நிரூ. சீரியஸாவே கேக்கறேன். பொம்பளைங்க இப்படித் துப்பறதை நீ பார்த்ததே இல்லையா என்ன? அதுக்கென்ன சொல்ற?’’ ''அதுவா..? பழம், பூ விக்கறவங்க மாதிரி சில அடித்தட்டு பெண்கள் இப்படிச் செய்யறதுண்டு. அது சதவீதத்துல மிகக் குறைவு.'' இவனுங்களை மாதிரி டிராஃபிக் நடுவுல, பான்பராக் மாதிரி கண்டதையும் மென்னுட்டு - சில சமயம் வண்டி ஓடிட்டிருக்கறப்ப கூட - அப்படியே தலையக் குனிஞ்சு துப்பற அநாகரீகம் 90 சதம் ஆண்கள் கிட்டத்தான் பாக்கறேன். எல்லாம் தான் ஸ்ட்ராங்கர் ஸெக்ஸ், ஆண்கள் எதையும் பண்ணலாம்கற திமிர் மனோபாவம். இதைப் பாக்கறப்பல்லாம் கோபமும், வெறுப்பும் சமவிகிதத்தல வருது.
சிங்கப்பூர் மாதிரி நாடுகள்ல இப்படி ரோட்டோரத்துல துப்பினா, குப்பை போட்டா அபராதம்னு இருக்கறதால சாலைகள் சுத்தமா இருக்கு. இங்கயும் அப்படிப் பண்ணினா சரியா இருக்கும்கறது என்னோட எண்ணம். ஆனா அப்படிப் பண்றதுக்கு முன்னால அரசாங்கம் எல்லாச் சாலைகள்லயும் நிச்சயமா ஒரு பெரிய குப்பைத் தொட்டி வைக்கணும். அப்படி்ல்லாம் ஒரு நல்ல ஆட்சி என்னோட பேரன், பேத்திகள் காலத்துலயாவது அமைஞ்சா சந்தோஷம்தான். ஹும்...!